யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-08-05

புனித மரியாளின் பேராலய நேர்ந்தளிப்பு




முதல் வாசகம்

உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை நான் செய்தேன். நான் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 30: 1-2,12-15,18-22

ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை. ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது; உனது புண் புரையோடிப்போனது. உனக்காக வாதிட எவனும் இல்லை; உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை; உன்னைக் குணப்படுத்தவே முடியாது. உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்; உன்னை அவர்கள் தேடுவதே இல்லை; மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்; கொடியோன் தண்டிப்பது போல நான் உன்னைத் தண்டித்தேன்; ஏனெனில் உனது குற்றம் பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை. நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்? உனது வேதனையைத் தணிக்க முடியாது; ஏனெனில் உனது குற்றமோ பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன். ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: அடிமைத்தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்; அவனுடைய உறைவிடங்கள் மீது நான் இரக்கம் காட்டுவேன்; அவற்றின் இடிபாடுகள் மேலேயே நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்; அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும். அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்; மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும். அவர்களை நான் பல்கிப் பெருகச் செய்வேன்; அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள். நான் அவர்களைப் பெருமைப்படுத்துவேன்; இனி அவர்கள் சிறுமையுறமாட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்; அவர்களது கூட்டமைப்பு என் திருமுன் நிலைநாட்டப்படும்; அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும் தண்டிப்பேன். அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்; அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்; அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்; அவனும் என்னை அணுகி வருவான்; ஏனெனில், என்னை அணுகி வர வேறு யாருக்குத் துணிவு உண்டு?, என்கிறார் ஆண்டவர். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்பி, மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.
திருப்பாடல் 102: 15-17. 18-20. 28,21-22

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். பல்லவி

28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்! 21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். 22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்." அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-2,10-14

அக்காலத்தில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, ``உம் சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே'' என்றனர். மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, ``நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளி வருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்'' என்றார். பின்பு சீடர் அவரை அணுகி, ``பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா?'' என்றனர். இயேசு மறுமொழியாக, ``என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று எசாயா எழுதியுள்ளார் என்றார்'' (மாற்கு 7:6-7)

எசாயா இறைவாக்கினரின் கூற்றை (காண்க: எசா 29:13) மேற்கோள் காட்டி இயேசு ஓர் அடிப்படையான உண்மையைப் போதிக்கின்றார். நம் வாயிலிருந்து பிறக்கின்ற சொற்கள் நம் உள்ளத்தில் மறைந்திருக்கின்ற எண்ணத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது சரியல்ல. அதுபோலவே, சொற்களால் கடவுளைப் போற்றிவிட்டு, செயல்களால் அவரைப் பழித்தால் அதுவும் ஒரு பெரிய முரண்பாட்டைத்தான் காட்டுகிறது. யூத சமய வழக்கங்களை நன்கு அறிந்திருந்த பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொண்டதை இயேசு கண்டிக்கிறார். கடவுளிடமிருந்து வந்த கட்டளைகளைக் கருத்தாகக் கடைப்பிடிப்பதற்கு மாறாக, அவர்கள் ''மனித கட்டளைகளை'' (''மூதாதையர் மரபு'') உயர்த்திப்பிடித்தனர். இத்தகைய மரபுகளின் நோக்கம் கடவுளின் கட்டளைகளை மக்கள் கடைப்பிடிக்க உதவுவதுதான். ஆனால் நடைமுறையிலோ ''மூதாதையர் மரபு'' மக்கள்மேல் தாங்கவியலா பாரத்தைச் சுமத்தியது; உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற உறுதியோடு கடவுளைப் பற்றிக்கொண்டு, அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப நடப்பதற்கு மாறாக, கடவுளின் சட்டத்தைப் புறக்கணிக்க வழியாக மாறிவிட்டிருந்தது அந்த ''மரபு''.

நேர்மையான நடத்தை இல்லாத இடத்தில் வெளிவேடம்தான் மிஞ்சும். இதை இயேசு இரண்டு எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குகின்றார். கை கழுவுவதும் கிண்ணங்களைக் கழுவுவதும் மூதாதையர் மரபு மக்கள் மேல் திணித்த சட்டம். பெற்றோருக்கு உதவுவது பிள்ளைகளின் கடமை என்பது கடவுள் தந்த சட்டம். ஆனால் மூதாதையர் மரபுப்படி பெற்றோருக்குச் சேரவேண்டியதைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தாயிற்று என்று கூறிவிட்டு சிலர் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்தார்கள். இவ்வாறு கடவுளின் சட்டம் புறக்கணிக்கப்பட்டது சரியல்ல என இயேசு உணர்த்துகிறார். சட்டம் நம்மை நல்வழியில் இட்டுச் செல்கின்ற வழிகாட்டியாக இருக்க வேண்டுமே ஒழிய நம்மை அடிமைப்படுத்துகின்ற சக்தியாக, வெளிவேடத்திற்குத் தூண்டுதலாக அமைந்துவிடலாகாது.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் உம்மை ஏற்று, செயல்முறையில் உம்மைப் போற்றிட எங்களுக்கு அருள்தாரும்.