யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 15வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-07-18




முதல் வாசகம்

உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 38: 1-6,21-22,7-8

அந்நாள்களில் எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, ``ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாகப் போகிறீர்; பிழைக்க மாட்டீர்'' என்றார். எசேக்கியா சுவர்ப் புறம் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி, ``ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மை வழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும் நினைத்தருளும்'' என்று கூறிக் கண்ணீர் சிந்தித் தேம்பித் தேம்பி அழுதார். அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது; ``நீ எசேக்கியாவிடம் சென்று கூறவேண்டியது: உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன். உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்; இந்த நகரைப் பாதுகாப்பேன்.'' ``எசேக்கியா நலமடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டு வந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்'' என்று எசாயா பதில் கூறியிருந்தார். ஏனெனில், ``ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு அடையாளம் யாது?'' என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார். தாம் கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பதற்கு அவர் உமக்களிக்கும் அடையாளம்: இதோ, சாயும் கதிரவனின் நிழல் ஆகாசின் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்வேன்.'' அவ்வாறே சாயும் கதிரவனின் நிழல் அக்கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிட்டது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அழிவின் குழியிலிருந்து ஆண்டவரே, என் உயிரைக் காத்தீர்.
எசா 38: 10. 11. 12. 16

10 `என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்லவேண்டுமே! நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப் பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே!' என்றேன். பல்லவி

11 `வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே! மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும் என்னால் பார்க்க முடியாதே!' என்றேன். பல்லவி

12 என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல் பெயர்க்கப்பட்டு என்னை விட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவது போல் என் வாழ்வை முடிக்கிறேன். தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார். பல்லவி

16 என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்; என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது; எனக்கு உடல் நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச் செய்வீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-8

அன்று ஓர் ஓய்வு நாள். இயேசு வயல் வழியே சென்றுகொண்டிருந்தார். பசியாய் இருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், ``பாரும், ஓய்வுநாளில் செய்யக் கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்'' என்றார்கள். அவரோ அவர்களிடம், ``தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா? இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா? மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா? ஆனால் கோவிலை விடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்றுகொண்டிருந்தார். பசியாயிருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், 'பாரும், ஓய்வுவு நாளில் செய்யக் கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்' என்றார்கள்'' (மத்தேயு 12:1-2)

இயேசு திருச்சட்டத்திற்குப் புது விளக்கம் அளித்தார். மக்களை ஒடுக்குகின்ற சக்தியாகச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினர் பரிசேயர். ஆனால் இயேசுவோ சட்டத்தின் உண்மையான பொருளை விளக்கினார். இதை ஏற்றுக்கொள்ள மறுத்த பரிசேயரும் பிற யூத சமயத் தலைவர்களும் இயேசுவைக் கொல்லத் தேடினார்கள் (காண்க: மத் 12:14). இஸ்ரயேல் மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றிப் பல துல்லியமான வழிமுறைகள் திருச்சட்டத்தில் இருந்தன. எடுத்துக்காட்டாக, ''உனக்கு அடுத்திருப்பவனுடைய விளை நிலத்திற்குச் சென்றால், உன் கையால் கதிர்களைக் கொய்யலாம்; ஆனால் கதிர் அரிவாளை உனக்கு அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே'' என்பதைக் கூறலாம் (இச 23:25). இச்சட்டம் ஏழை மக்கள் பட்டினியால் வாடாமலிருக்க வழிவகுத்தது. அதே நேரத்தில் பிறருடைய சொத்திலிருந்து அளவுக்கு மீறி எடுக்காமலிருக்கவும் செய்தது. எனவே, இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து தின்றது சட்டப்படி அனுமதிக்கப்பட்டதே. ஆனால் அவர்கள் ஓய்வுநாளன்று இதைச் செய்தது ஏன் என்பதுதான் பரிசேயருக்குப் பிரச்சினையாகப் பட்டது. இயேசு இரு எடுத்துக்காட்டுகள் தந்து, தம் சீடர்கள் தவறு செய்யவில்லை எனக்காட்டுகிறார்.

முதலில், வழிபாடு தொடர்பான சட்டங்கள் மனிதரின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதற்கு எதிராக இருந்தால் அச்சட்டங்கள் ஏற்கத்தக்கனவல்ல என இயேசு காட்டுகிறார் (காண்க: மத் 12:3-4; 1 சாமு 21:1-4). இரண்டாவது, குருக்களின் கடமைகள் என்னவென்று பழைய சட்டம் வரையறுத்திருந்தாலும் அதைப் புதிய முறையில் இயேசு விளக்குகிறார் (காண்க: மத் 12:5; எண் 28:9-10). கோவிலில் ஒப்புக்கொடுக்கப்படுகின்ற பலிகள் கடவுளுக்கு உகந்தவையே; அதே நேரத்தில், மனிதர் மட்டில் காட்ட வேண்டிய இரக்கமும் அன்பும் பலியைவிட மேலானது. இதை வலியுறுத்திய இயேசு ஓசேயா இறைவாக்கினரின் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்: ''உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்'' (ஓசே 6:6). கடவுள் மனிதரின் நலனில் அக்கறை கொண்டவர். சட்டங்கள் எல்லாம் மனிதரின் உண்மையான நலனுக்கு உதவ வேண்டுமே ஒழிய மனிதரை ஒடுக்குகின்ற சுமையாக மாறிவிடக் கூடாது.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் இரக்கமுடையோராய் வாழ்ந்திட அருள்தாரும்.