யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 15வது வாரம் வியாழக்கிழமை
2014-07-17




முதல் வாசகம்

புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 7-9,12,16-19

நீதிமான்களின் நெறிகள் நேரியவை; நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர். ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காகக் காத்திருக்கிறோம், உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன. என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது; எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது; உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில் வாழ்வோர் நேர்மையைக் கற்றுக்கொள்வர். ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே. ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்; நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம். பேறுகாலம் நெருங்குகையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்! நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்; ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்; நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை; உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் போவதில்லை. இறந்த உம் மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்; புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி; இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச் செய்கின்றீர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

விண்ணுலகினின்று ஆண்டவர் வையகத்தைக் கண்ணோக்கினார்.
திருப்பாடல்102: 12-14. 15-17. 18, 20, 19

12 ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்; உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும். 13 நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்; இதோ! குறித்த காலம் வந்துவிட்டது. 14 அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்; அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர். பல்லவி

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: ``பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது�� என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்'' (மத்தேயு 5:6)

''தாகமுற்றோர்க்குக் கடவுள் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மைகளால் நிரப்பினார்'' எனத் திருப்பாடல்கள் நூல் கூறுகிறது (காண்க: திபா 107:5,9). பசியும் தாகமும் மனிதருக்கு இயல்பான அனுபவம். உணவும் நீரும் பசிதாகம் போக்க உதவுகின்றன. நீதியை நிலைநாட்ட வேண்டும் என்னும் ''வேட்கை''யும் அடிப்படையில் பசி, தாகம் போன்ற ஆவல்தான். அந்த வேட்கையை நாம் நிறைவுசெய்ய வேண்டும் என்றால் எத்தகைய நீதியை நிலைநாட்டுவது என்னும் கேள்வி எழுகிறது. பழைய ஏற்பாட்டில் ''நீதி'' என்பது கடவுள் தம் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை முழுமனத்தோடு கடைப்பிடிப்பதைக் குறித்தது. மத்தேயு ''நீதி'' என்னும் சொல்லை ஏழு முறை பயன்படுத்துகிறார். இயேசுவின் மலைப் பொழிவில் மட்டும் இச்சொல் ஐந்துமுறை வருகிறது (மத் 5:6,10,20; 6:1,33). தமிழ் மொழி பெயர்ப்பில் ''நீதி'', ''நெறி'', ''அறச்செயல்'', ''ஏற்புடையவை'', ''நீதிநெறி'' (காண்க: மத் 3:15; 21:32) என்னும் பல சொல்கள் ஒரே கருத்தை வலியுறுத்தும் வகையில் உள்ளன. எனவே, நாம் ''நீதிநிலைநாட்டுவதில் வேட்கை'' கொண்டிருக்க வேண்டும் என இயேசு கற்பிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் விவிலியப் பார்வையில் நீதி எதைக் குறிக்கிறது என்பதை அறிவது தேவை.

இவ்வுலகில் மனிதர் எவ்வாறு வாழ வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறாரோ அவ்வாறு நாம் வாழ்ந்தால் நாம் நீதியைக் கடைப்பிடிக்கிறோம் என்பது பொருள். இது உறவுகளின் அடிப்படையில் எழுகின்ற ஓர் ஒழுங்குமுறை எனலாம். கடவுள் நம்மோடு உறவாடுகின்றார். அந்த உறவின் பயனை நாம் அனுபவிக்கின்ற அதே வேளையில் கடவுளோடு நாமும் நல்லுறவு கொள்வது ''நீதி'' ஆகும். கடவுள் எல்லா மனிதரையும் அன்புசெய்து அவர்களுக்குத் தம் வாழ்வில் பங்களிக்கின்றார். அதையே நம் வாழ்க்கை நெறியாக நாம் கொள்ளும்போது ''நீதி'' நம் வாழ்வில் துலங்கும். இறுதியாக, கடவுள் தாம் படைத்த உலகை அன்போடு பராமரிக்கின்றார். நாமும் படைப்புலகைப் பொறுப்போடு ஆண்டு நடத்தும்போது ''நீதி'' அங்கே துலங்கும். இத்தகைய வாழ்க்கை நெறியை இயேசு நமக்குக் கற்றுத் தருகிறார். அந்நெறிப்படி நாம் நடக்கும்போது எந்நாளும் நீடிக்கின்ற வாழ்வை, விண்ணக நாட்டை நாம் அடைவோம் என்பது இயேசு நமக்குத் தருகின்ற வாக்குறுதி (காண்க: மத் 5:6).

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்வில் நல்லுறவுகள் நாளும் வளர்ந்திட அருள்தாரும்.