யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 14வது வாரம் வியாழக்கிழமை
2014-07-10




முதல் வாசகம்

என் உள்ளம் கோபத்தை வெறுத்து ஒதுக்குகின்றது.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 8-9

ஆண்டவர் கூறியது: இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள். பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள். ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன். என் உள்ளம் கோபத்தை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது. என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்; எப்ராயிமை அழிக்கத் திரும்பி வரமாட்டேன்; நான் இறைவன், வெறும் மனிதனல்ல; நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, எம்மை மீட்குமாறு உம் முக ஒளியைக் காட்டியருளும்!
திருப்பாடல் 80: 1-2. 14-15

இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2 உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-15

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் சென்று `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். பொன், வெள்ளி, செப்புக்காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே. நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள். அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும். உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரை விட்டு வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு பன்னிருவரையும் அனுப்பியபோது கூறியது: '... விண்ணரசு நெருங்கிவிட்டது எனப் பறைசாற்றுங்கள்...கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்...' என்றார்'' (மத்தேயு 10:5,7,8)

இயேசு எப்பணியை ஆற்றவந்தாரோ அதே பணியைத் தொடர்ந்து ஆற்றுவதே திருத்தூதரின் பொறுப்பு. இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, ''மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' என்னும் அறிவிப்போடு அதைத் தொடங்கினார் (மத் 4:17). ''விண்ணரசு'' என மத்தேயு குறிப்பிடுவதையே மாற்கு, லூக்கா ஆகியோர் ''இறையாட்சி'' எனக் குறித்தனர் (காண்க: மாற் 1:14-15; லூக் 4:14-15). கடவுள் விரும்புகின்ற சமுதாயம், கடவுளின் மதிப்பீடுகளை அடித்தளமாகக் கொண்டு உருவாகின்ற மக்கள் குடும்பம் என்பதே இறையாட்சி. இத்தகைய புதிய சமுதாயத்தில் மனிதர் ஒருவர் ஒருவரை எதிரிகளாகக் கருதாமல் ஒரே குடும்பத்தின் உறுப்பினராக ஏற்பர். மனிதர் அனைவருக்கும் தந்தையும் தாயுமாகக் கடவுளை ஏற்று, அவருக்கே பணிந்து, அவரிடத்திலும் அவர் அனுப்பிய நம் மீட்பர் இயேசுவிடத்திலும் நம்பிக்கை கொள்வர். கடவுளிடமிருந்து வருகின்ற தூய ஆவியால் வழிநடத்தப்படுவர். இந்தப் புதியதோர் உலகம் மனிதர் நடுவே உருவாக வேண்டும் என்பதற்காக உழைப்பது இயேசுவின் சீடர்களின் பொறுப்பாகும். இப்புதிய உலகத்தின் நிறைவு மனித வரலாற்றில் நிகழாது என்றாலும் அதை இவ்வுலகில் இயேசு தம் சாவு, உயிர்த்தெழுதல் வழியாக ஏற்கெனவே தொடங்கிவிட்டார்.

இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிந்து ஏற்றுக்கொள்கின்ற நாம் கடவுளிடமிருந்து ஒரு பெரிய ''கொடை''யைப் பெற்றுள்ளோம் என்பதை மறக்கலாகாது. ஒருவிதத்தில் கிறிஸ்தவ வாழ்வு முழுவதுமே கடவுள் நமக்குத் தருகின்ற கொடைக்கு நாம் நன்றிசெலுத்துகின்ற செயல் என்றே கூறிடலாம். கொடை என்பது உரிமையின் அடிப்படையில் கோருகின்ற ஒரு பரிசல்ல; மாறாக, அக்கொடையைத் தருபவர் தாமே மனமுவந்து நமக்கு அளிக்கின்ற ஒன்று. நம்மை இவ்வுலகில் மனிதராகப் படைத்து, பராமரித்துக் காக்கின்ற கடவுள் நமக்குக் கிறிஸ்தவ நம்பிக்கை என்னும் அரும் கொடையையும் அளித்துள்ளார். அதை நாம் நன்றியோடு ஏற்கிறோம். நன்றியின் வெளிப்பாடு இறைபுகழாக வெளிப்படும்; அதே நேரத்தில் நாம் பெற்ற கொடையை நமக்கென்றே பூட்டி வைத்துக்கொள்ளாமல் அதைத் தாராள உள்ளத்தோடு நம் சகோதர சகோதரிகளாகிய பிற மனிதரோடு பகிர்ந்திட வேண்டும். எனவேதான் இயேசு சீடரை நோக்கி, ''கொடையாகப் பெற்றுக் கொண்டீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்'' என்றார் (மத் 10:8).

மன்றாட்டு:

இறைவா, நன்றியுள்ள மக்களாக நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.