யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 14வது வாரம் புதன்கிழமை
2014-07-09

புனிதர்கள் அகஸ்டீன் ஜாவோரங்கு




முதல் வாசகம்

ஆண்டவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 10: 1-3,7-8,12

இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக் கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது; எவ்வளவு மிகுதியாகக் கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாய்ப் பலிபீடங்களை அமைத்தது; எத்தகைய சிறப்புடன் நாடு செழிப்புற்றதோ, அதற்கு இணையாய்ச் சிலைத் தூண்கள் சிறப்புப் பெற்றன. இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள், தங்கள் குற்றத்திற்காகத் தண்டனை பெறுவார்கள்; ஆண்டவர் அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்திடுவார்; அவர்களுடைய சிலைத் தூண்களை நொறுக்கிடுவார். அப்போது அவர்கள், ``நமக்கு அரசன் இல்லை; ஆண்டவருக்கு நாம் அஞ்சி நடக்கவில்லை; அரசன் இருந்தாலும், நமக்கு என்ன செய்வான்?'' என்பார்கள். சமாரியாவின் அரசன் நீர்மேல் குமிழிபோல் அழிந்து போவான். இஸ்ரயேலின் பாவமாகிய சிலைவழிபாட்டின் உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்; முள்களும், முட்புதர்களும் அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்; அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து `எங்களை மூடிக்கொள்ளுங்கள்,' குன்றுகளைப் பார்த்து `எங்கள்மேல் விழுங்கள்' என்று சொல்வார்கள். நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்; அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்
திருப்பாடல் 105: 2-3. 4-5. 6-7

2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7

அக்காலத்தில் இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து. இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ``பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள்...'' (மத்தேயு 10:1-2)

மத்தேயு நற்செய்தியில் ''சீடர்'' என்னும் சொல் 73 தடவை காணப்படுகிறது. திருத்தூதர் என்னும் சொல்லுக்கு ''அனுப்பப்பட்டவர்'' (''அப்போஸ்தலர்'') என்பது பொருள். இச்சொல் மத்தேயு நற்செய்தியில் ஒருமுறை மட்டுமே உண்டு (மத் 10:2). பேதுரு, அந்திரேயா போன்ற 12 சீடர்களுக்கும் இயேசு ''திருத்தூதர்'' என்னும் பெயரை ஏன் வழங்கினார்? இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிக்க அவர்களை இயேசு ''அனுப்பினார்''. கிறிஸ்தவ நம்பிக்கை அறிக்கைத் தொகுப்பில் (''விசுவாசப் பிரமாணம்'') நாம் ''ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்'' என்று நம் நம்பிக்கையை அறிக்கையிடுகிறோம். ஆக, திருச்சபையும் ''தூது அறிவிக்கும்'' (''அப்போஸ்தலிக்க'') பணியைப் பெற்றுள்ளது. இயேசு இப்பணியை ஆற்றவே இவ்வுலகிற்கு வந்தார். அவருடைய பணியைத் தொடர்வதுதான் திருச்சபையின் பொறுப்பு. திருத்தூதர்களுக்கு இயேசு ''தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அதிகாரம் அளித்தார்'' (மத் 10:1). இது முற்காலத்தில் மோசே தம் அதிகாரத்தை எழுபது மூப்பர்களோடு பகிர்ந்துகொண்ட நிகழ்ச்சியை நமக்கு நினைவூட்டுகிறது (காண்க: எண் 11:24-25). இயேசு அனுப்பிய திருத்தூதர்கள் இயேசுவின் பெயரால் போதிக்கின்ற அதிகாரத்தையும் பெற்றனர் (காண்க: மத் 28:20).

இவ்வாறு இயேசுவின் பணியைத் தொடர்வதில் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பொறுப்பு உண்டு. நாம் பெற்றுள்ள திருமுழுக்கு நம்மைத் திருத்தூதர்களாக மாற்றுகிறது. அதாவது, நாம் இயேசுவை ஏற்று நம்புவதுபோல, பிற மக்களும் அந்நம்பிக்கையைப் பெற்று நலம் பெறும்பொருட்டு உழைப்பது நம் கடமை. ஆனால் ''அனுப்பப்படுதல்'' என்பதை நாம் ஏதோ தொலை நாட்டிற்குச் சென்று நற்செய்தியை அறிவிக்க நாம் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று பொருள் கொள்ளலாகாது. நாம் வாழ்கின்ற சூழ்நிலைகளில் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்தலே ''அனுப்பப்படுதல்'' என்பதன் அடிப்படைப் பொருள் ஆகும். நாம் வாழ்கின்ற சமுதாயத்தில் நிலவுகின்ற நோய்கள் பல. மனித உள்ளத்தில் உறைந்துகிடக்கின்ற தீய சிந்தனைகளிலிருந்து தொடங்கி, சமுதாயத்தில் நிலவுகின்ற அநீத அமைப்புகள் உட்பட பல்வேறு தீமைகள் நம்மிடையே நிலவுகின்றன. அவற்றைப் போக்கிட நாம் கடவுளின் கைகளில் கருவிகளாக மாறிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் நற்செய்தியை அறிவிக்க எங்களை அனுப்பியதற்கு நன்றி!