திருவழிப்பாட்டு ஆண்டு A (01-06-2014)

எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்/> எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்/> எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்/> எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்/> எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்/> எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்/> எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்/>


திருப்பலி முன்னுரை

இறைவனில் இனியவர்களே, ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறோம்.

மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெழுந்த இறைமகன் இயேசு, நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய பின்பு விண்ணேற்றம் அடைந்து தந்தையாம் இறைவனின் வலது பக்கத்தில் அமர்கிறார். உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கவும், அரும் அடையாளங்களைச் செய்யவும் நம் ஆண்டவர் நமக்கு அதிகாரம் தந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, இயேசுவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்'' என்று கூறினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11

தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், ``நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்'' என்று கூறினார். பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், ``ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ``என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்'' என்றார். இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, ``கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்'' என்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
திருப்பாடல் 7: 1-2. 5-6. 7-8

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. -பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். -பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-23

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்ப வர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப்பெறுவனவாக! கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலைக் கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20

அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, ``விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக் காத இறைவன் போற்றி!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எல்லாம் வல்லவராம் இறைவா,

உமது திருமகனின் உயிப்பு, விண்ணேற்றம் ஆகிய மறைபொருட்களின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த திருச்சபையின் நம்பிக்கை வாழ்வு சிறக்க பணியாற்றுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

விண்ணில் வாழ்பவராம் இறைவா,

இவ்வுலகின் சுகங்களை நாடி உம்மைப் புறக்கணித்து வாழும் மக்கள் அனைவரும், விண்ணக வாழ்வைப் பற்றி சிந்திக்கவும், நீர் காண்பித்த அன்பு வழியில் நடந்து விண்ணக வாழ்வை உரிமையாக்கிக் கொள்ளவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உமது வார்த்தையால் எம்மைக் குணப்படுத்தும் தந்தையே இறைவா!

பல்வேறு நோய்களினாலும், கவலைகளினாலும் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்கள் உடல் நலமும், மனநலமும் பெற்று மகிழ்ந்திட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர் மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆன்மாக்களின் ஆயரும், கண்காணிப்பாளருமான தந்தையே இறைவா!

எமது இளைஞர், இளம் பெண்களை நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் நெறிகெட்ட தலைமுறையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொண்டு உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடலை உலர்ந்த தரையாக மாற்றிவிடும் தந்தையே இறைவா!

ஆன்மீகம், அன்பு, அமைதி, உறவு என்பன வற்றி பாலைவனமாகப் போகியுள்ள மனித இதயங்களில் மனித நேயப் பண்புகள் அனைத்தும் மீளவும் துளிர்த்து நல்லுறவின் சமூகம் உருவாகிட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு பதினொரு சீடர்களையும் அணுகி,...'இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்' என்று கூறினார்'' (மத்தேயு 28:20)

சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம்

மத்தேயு நற்செய்தியின் முடிவில், இயேசு சீடர்களுக்குத் தோன்றி, அவர்கள் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்க வேண்டும் என்னும் கட்டளையைக் கொடுக்கிறார் (மத் 28:16-20). சாவிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடர்களோடு தொடர்ந்து இருப்பதாகவும் வாக்களிக்கிறார் (மத் 28:20). இது மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அங்கே, இயேசு ''இம்மானுவேல்'' என்னும் பெயரால் அறிமுகம் செய்யப்பட்டார். ''இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்'' என மத்தேயு தம் வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார் (மத் 1:22-23). இயேசு வழியாகக் கடவுள் தம்மை முழுமையாக வெளிப்படுத்தி, அவர் வழியாக நம்மோடு இருக்கிறார் என்னும் உண்மை நமக்கு ஆறுதல் தருகின்றது. இயேசு சாவிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதைச் சீடர் ஏற்றுக்கொண்டாலும் ''சிலர் ஐயமுற்றார்கள்'' (மத் 20:17). கடவுளையும் அவர் நம்மிடையே அனுப்பிய இயேசுவையும் நாம் நம்பிக்கையோடு ஏற்கிறோம் என்றாலும் நம் நம்பிக்கை எப்போதுமே அசையாத உறுதி கொண்டதாக இருக்கும் என்று கூற முடியாது. ''ஐயம்'' என்பதற்கு அங்கே இடம் உண்டு. ஆனால் நாம் நம்பிக்கையை இழக்காமல் நிலைத்திருக்க வேண்டும். ஏனென்றால் இயேசு ''உலக முடிவுவரை நம்மோடு இருக்கிறார்'' (காண்க: மத் 28:20).

சீடர்களுக்குத் தோன்றிய இயேசு அவர்களுக்கு வழங்கிய கட்டளையில் மூன்று அம்சங்கள் உள்ளன. அவர்கள் எல்லா மக்களையும் சீடராக்க வேண்டும்; தந்தை மகன் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுக்கவேண்டும்; இயேசு அளித்த கட்டளைகளை மக்களுக்குக் கற்பிக்க வேண்டும். இக்கட்டளையைத் திருச்சபை தொடர்ந்து செயல்படுத்த அழைக்கப்படுகிறது. இயேசு ஒரு சில மனிதரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குக் கடவுளாட்சி பற்றிக் கற்பித்து, அவர்களைத் தம் சீடராக மாற்றியதுபோல, இன்றும் திருச்சபை இயேசுவின் பெயரால் நற்செய்திப் பணியைத் தொடர வேண்டும். இப்பணியை ஆற்றுவதற்கான ஆற்றலை நாம் இயேசுவிடமிருந்து பெறுகிறோம். திருச்சபை ''எல்லா மக்களினத்தாரையும் சீடராக்க'' அனுப்பப்படுகிறது. இயேசுவின் பணி பெரும்பாலும் யூதர்கள் நடுவே நிகழ்ந்தது. ஆனால், உலகில் உள்ள அனைத்து மக்களும் கடவுளின் மீட்பில் பங்கேற்க அழைக்கப்படுவதால் எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என இயேசு தம் சீடர்களுக்குக் கட்டளை அளிக்கிறார். அக்கட்டளையை நாம் ஏற்று, நற்செய்திப் பணியில் முழுமையாக நம்மை ஈடுபடுத்த வேண்டும். நற்செய்தியால் நம் வாழ்வு உருமாற்றம் பெற வேண்டும். அப்போது நாம் கடவுள் மனிதரிடையே வாழ்கின்றார் என்னும் உண்மைக்குச் சான்றுகளாக மாறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புக்கு நாங்கள் சாட்சி பகர எங்களுக்கு அருள்தாரும்.