திருவழிப்பாட்டு ஆண்டு A (19-04-2014)

ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்./> ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்./> ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்./> ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்./> ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்./>


திருப்பலி முன்னுரை - 1

இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்பு நிறை சகோதர்களே! சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று புனித சனி. திருவிழிப்பு வழிபாட்டிற்காக ஒன்று கூடியுள்ளோம். தொடக்கத்திலிருந்தே இறைவன் தன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கோடு தனது மக்கள் மத்தியில் செயற்படுத்திய அவரின் வியத்தகு செயல்களை நாம் இன்று நினைவு கூருகின்றோம். அடிமைத்தன வாழ்விலிருந்த மக்களை அற்புதமாக இறைவன் மீட்ட செயல் நமக்கு புதிய நம்பிக்கையை ஊட்டுவதாய் அமைகின்றது. இருளிலிருந்து ஒளிக்கும், சாவிலிருந்த வாழ்வுக்கும் இறைவன் நம்மை அழைத்துச் செல்கிறார். முழுமையான விடுதலை இறைவனிடமிருந்தே வருகின்றது. இந்த உண்மைகளை இன்றைய நாள் நமக்கு ஆழமாக எடுத்துக்கூறுகின்றது. உயிர்ப்பின் மகிமையில் நாமும் பங்குபெற அழைக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்து பெரு மகிழ்ச்சியுடனும், நன்றி உணர்வுடனும் பாஸ்காத் திருவிழிப்பு சடங்கினில் பங்கேற்போம்.

திருப்பலி முன்னுரை - 2

நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று புனித சனி. நம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை இன்று நாம் நினைவு கூருகின்றோம். தமது திருப்பாடுகளாலும், சிலுவை மரணத்தாலும் பாவத்தை அழித்து மரணத்தை முறியடித்தவர் மாபரன் இயேசுக் கிறிஸ்து. இறைவனின் மகிமையை எதிர்த்து நிற்கவோ, தடுத்தூப் பார்க்கவோ எந்தச் சக்தியாலும் முடியாது என்பதைத்தான் இயேசுவின் உயிர்ப்பு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இந்த உயிர்ப்பின் மகிமையில் நாமும் பங்குபெற அழைக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்து பெரு மகிழ்ச்சியுடனும், நன்றி உணர்வுடனும் பாஸ்காத் திருவிழிப்பு சடங்கினில் பங்கேற்போம்.

திருப்பலி முன்னுரை - 3

சாவை வீழ்த்தி வெற்றி கிடைக்க சரித்திர நாயகன் இயேசு, உயிர்க்கப் போகும் உன்னத இரவு இன்று: நாம் அனைவரும் கூடியிருக்கும் ஆண்டவரின் பாஸ்கா திருவிழிப்பு, பாஸ்கா என்றாலே கடந்து போதல் என்று பொருள். சாவைக்கடந்து உயிர்ப்பை பெற்ற இயேசுவைப் போன்று, செங்கடலை கடந்து, அடிமைவாழ்வை ஒழித்து வாக்களிக்கப்பட்ட வளமான கானான் நாட்டிற்கு இஸ்ராயேல் மக்கள் கடந்து சென்றது போன்று நாமும் நம்முடைய பாவ இயல்புகளை களைந்து, பழைய வாழ்வை மறந்து இயேசுவின் அன்பைப் பெற்ற புதியமக்களாக, உயிர்ப்பு பெற்று வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுகின்றது. பாவத்திலிருந்து புனித வாழ்விற்கு அடிமைத்தனத்திலிருந்து இயேசுவின் ஒளியிலும் வாழ்வதற்கு தேவையான வரங்கள் வேண்டி இன்றைய திருவிழிப்பு சடங்கிலே பங்கேற்போம். ஆண்டவரே உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தம் திருமகன் இயேசுவை உயிர்ப்பித்து நமக்கு வாழ்வு தரும் நம் இறைவனின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இன்று புனித சனி திருவிழிப்பு. இயேசுவின் உயிர்ப்பை நினைவு கூர்ந்து மகிழும் நன்நாள். இஸ்ரயேல் மக்களை இருளின் உறவிலிருந்தும் மரணத்தின் பிடியிலிருந்தும், அடிமைத்தனத்தின் ஆதிக்கத்திலிருந்தும் மோசே விடுவிக்க இறைவனின் பாஸ்காவை கொண்டிடாடி - செங் கடல் வழியாக நடத்தி பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு கூட்டிச் சென்றார். ஒளியின் பாதையிலும் மேகத்தூணின் வழிநடத்தலிலும் நடந்து சென்று அந்த காணான் நாட்டை உரிமையாக்கினார்கள். இன்னும் பாவ இருளில் இருந்தும் சாவின் பிடியிலிருந்தும் விடுவிக்க இயேசு இறந்து உயிர்த்த இந்த இரவு இலட்சிய கனவுகளுக்கு சாவில்லை என்று உணர்த்துகிறது. உரிமைகளும் சுதந்திரங்களும் உயிர்பெற்று எழும் நேரம் வந்துவிட்டது. சாவே உன் கொடுக்கு எங்கே என்று வெற்றி வேந்தனாய் உயிர்த்த எம்பெருமான் இயேசுவின் இலட்சியம் நிறைவேறியது போல நாமும் நமது இலட்சியத்தை அடிப்படையாகக்கொண்டு சாவிலிருந்து வாழ்வுக்கும், அநீதியிலிருந்து உண்மைக்கும், பொய்மையிலிருந்து மெய்மைக்கும் அழைத்துச் செல்ல இயேசு உயிர்த்தார், நாமும் உயிர் பெறுவோம். இதில் முழுமையாகப் பங்கெடுத்து இறைவன் இயேசுவின் உயிர்ப்பில் புதுவாழ்வைத் தொடங்குவோம்.



முதல் வாசகம்

கடவுள் அது நல்லது என்று கண்டார்
தொடக்க நூலிலிருந்து வாசகம்: 1:1-2:3

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு "விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், "புற்ப+ண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்ப+ண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி "பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்" என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக" என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார். அப்பொழுது கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்
விடுதலைப் பயனம் 15:1-2, 3-4, 5-6, 17-18

ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன். பல்லவி

போரில் வல்லவர் ஆண்டவர்; "ஆண்டவர்" என்பது அவர் பெயராம். பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்; அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர். பல்லவி

ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன. ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது. பல்லவி

ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர். ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார். பல்லவி

இரண்டாம் வாசகம்

இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம்: யாத் 14:15-15:1

ஆண்டவர் மோசேயை நோக்கி, "ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். பார்வோனையும் அவன் தேர்களையும் குதிiவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, "நானே ஆண்டவர்" என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்" என்றார். இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது. அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை. மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர். பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், "இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்" என்றனர். ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு" என்றார். மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்குஎதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது. இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர். அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு; ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி



மூன்றாம் வாசகம்

இதோ, மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன்
இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலிலிருந்து வாசனம் எசாயா 54:5-14

ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர், "படைகளின் ஆண்டவர்" என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; "உலக முழுமைக்கும் கடவுள்" என அவர் அழைக்கப்படுகின்றார். ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன். பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர். எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உம்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்;போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர். துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே, இதோ, மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக்கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன். உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன். உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர். நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்; ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்; நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி



நான்காம் வாசகம்

நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்
இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலிலிருந்து வாசனம் இசை 55:1-11

தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார். ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி



ஐந்தாம் வாசகம்

நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன்
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் எசேக் 36:16-28

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டடது; மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். அவர்களின் நடத்தை ஒரு பெண்ணின் மாதவிலக்கின் தீட்டுப்போல என் கண்முன் இருந்தது. எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர். நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுகு;குத் தீர்ப்பிட்டேன். வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து "இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று" என்று கூறப்பட்டது. இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன். எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன். நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி



ஆறாம் வாசகம்

இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்
அப்போஸ்தலரான புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுதக்திலிருந்து வாசகம் உரோமையர் 6:3-13

திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ? கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

இரண்டாம் வாசகம்: ஆபிரகாமின் பலி: தொடக்க நூல் 22:1-18

ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர். அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ' நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்று, ' இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ' எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் ' என்றார். அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், ' அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்: அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்:

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இஸ்ராயேலரை விடுவிக்க மோசேக்கும், ஆரோனுக்கும் ஆற்றல் அளித்த இறைவா!

எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள் , குருக்கள் , துறவிகள் , பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் இக்காலத்தில் மக்களுக்கு நம்பிக்கையூட்டுபவர்களாகவும்; உமது திட்டங்களை சரியான நேரத்தில் சரியான முறையில் விளக்கிக் கூறுபவர்களாகவும் இருக்கவும்: தூய ஆவியின் அருளையும், உடல் நலனையும் அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நான் உன்னை மறக்கவே மாட்டேன் என்ற தந்தையே!

உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிசாய்த்து, அவரது வழியில் நடந்திடவும், குடிப்பழக்கம், போதைப்பொருள் நுகர்வு, சிற்றின்ப நாட்டங்கள் இவை மனித மாண்பைச் சிதைக்கின்றன என்பதை உணர்ந்து இளைஞர்கள் நற்செய்தியின் வழி வாழ்ந்து மாண்புற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உம் திருமகன் இயேசுவே உலகின் மீட்பர் என்பதை உலகம் எல்லாம் கண்டுணரவும், விடுதலையின் பாதையில் இயேசுவின் உயிர்ப்பின் ஆற்றலை அனைவரும் அனுபவமாய் பெற்றிட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது சமூகத்திற்காக உம்மிடம் இரந்து வருகின்றோம். இன்றைய நாட்களில் சமூக உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து நாம் அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே மனமும் உடையவர்களாச் செயற்பட்டு இறையரசின் கருவிகளாகவும், சமாதானத்தின் தூதுவர்களாகவும், உமது சாட்சிகளாகவும் செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா!

உலகெங்கும் மனித மாண்புக்கு எதிரான அநீதியான அடக்குமுறைகள் அகற்றப்படவும், எல்லா மனிதர்களும் எவ்வித பாகுபாடுமின்றி மதிக்கப்படவும், அனைவரும் முழுமையான மகிழ்ச்சியைப் பெற்றிடவும் ஆட்சியாளர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

பெண்கள் உயிர்ப்பின் சாட்சிகள் !

பெண்களைப் பெருமைப்படுத்தும் இயேசுவின் பண்பை அவரது உயிர்ப்பின் நிகழ்விலும் பார்க்கிறோம். இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்பின் வேளையில், ஆண் சீடர்கள் அனைவரும் ஓடிவிட, பெண்கள் மட்டுமே இறுதிவரையில் அவருடன் இருந்தனர். இறந்தபின்னும் அவரது உடலை நல்லடக்கம் செய்யும் பணியில் அவர்களே ஈடுபட்டனர். அன்பு சாவையும் வெல்லும் என்பதை எண்பித்த அவர்களது பேரன்புக்குப் பரிசாக, உயிர்த்த இயேசு முதன்முதலில் பெண்களுக்கே காட்சி தருகிறார். மகதலா மரியாவும் அப்பெண்களில் ஒருவர். தனது சீடர்களுக்கு உயிர்ப்பின் செய்தியை அறிவிக்கும் நற்செய்தியாளர்களாக இயேசு அவர்களை அனுப்புகிறார். பெண்கள் நற்செய்தியாளர்களா, மறைபரப்புப் பணியாளர்களாகச் சிறப்புடன் பணியாற்ற முடியும் என்பதை திருச்சபை அனுபவத்தில் உணர்ந்துள்ளது. எனவேதான், கடல் கடந்து நற்செய்திப் பணியாற்றிய புனித சவேரியாருக்கு இணையாக, தனது கன்னியர் இல்லத்தின் நான்கு சுவர்களைத் தாண்டாத புனித குழந்தை தெரசாளை மறைபரப்புப் பணியின் பாதுகாவலியாக அறிவித்துள்ளது. பெண்களின் இறைப்பற்றையும், நற்செய்தி அறிவிப்பு ஆர்வத்தையும், அவர்களின் அன்பின் ஆழத்தையும் இன்று பாராட்ட முன்வருவோம்.

மன்றாட்டு:

பெண்மையைப்; போற்றிய நாயகனே இறைவா, உமது உயிர்ப்பின் முதல் சாட்சிகளாகப் பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பெருமைப்படுத்தினீரே, உமக்கு நன்றி கூறுகிறோம். உம்மைப் போல நாங்களும், பெண்களை மாண்புடன் நடத்த அருள்தாரும்.