திருவழிப்பாட்டு ஆண்டு A (06-04-2014)

என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்./> என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்./> என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்./> என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்./> என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்./> என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்./> என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்./>


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புநிறை இறைமக்களே தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் கனிவான வாழ்த்துக்களை உரியதாக்குகிறேன். தவக்காலத்தின் ஐந்தாம் வாரம் நமக்காகத் துன்பங்களை ஏற்ற திருமகன் இயேசு இறைத் தந்தையால் நமக்காக அனுப்பப்பட்ட துன்புறும் ஊழியன் ஆவார் என உணர்த்தப்பட்டு, அவர் வழியில் சென்று: இவ்வுலகத்திற்கு மரித்தவர்களாகவும், புதுவாழ்வுக்கு உயிர்த்தவர்களாகவும் வாழ முயல்வோம். இந்தப் புது வாழ்வு மதிப்பும் மாட்சிமையும் உள்ளது என்று கண்டுணர்ந்து இயேசுவோடு ஒன்றாவோம்.

தவக்காலத்தின் முதலாம் வாரம் பாலை வனத்திற்கு இயேசுவோடு சென்றோம்.

இரண்டாம் வாரம் மலை உச்சிக்குச் சென்றோம்.

மூனறாம் வாரம் தண்ணீர் உள்ள கிணற்றுக்குச் சென்றோம்.

நான்காம் வாரம் இருள் அடர்ந்த இடத்திற்கு இயேசுவோடு சென்றோம்.

ஐந்தாம் வாரமாகிய இன்று இயேசுவோடு இலாசரின் கல்லறைக்குச் செல்வோம்.

இறந்தவர் மீண்டும் உயிர் பெற்று எழுவது நடைபெற இயலாதது. ஆனால் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை. நம்மைப் படைத்தவரும், காப்பவரும், மீட்பவரும் அவரே. நமக்குள் மீண்டும் அருள்வாழ்வை உயிரோட்டமுடன் மலரச் செய்திட வல்லவரான இறைவனை நாடி வருவோம். திருப்பலியில் அவரன்பில் இணைவோம்:



முதல் வாசகம்

என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 12-14

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக் கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். `ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்' என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது.
திருப்பாடல் 130: 1-2. 3-4. 5-6. 7-8

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி

7 பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி

இரண்டாம் வாசகம்

இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 8-11

சகோதரர் சகோதரிகளே, ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்,'' என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-45

அக்காலத்தில் பெத்தானியாவில் வாழ்ந்துவந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்து வந்தனர். இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத் தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆள் அனுப்பி, ``ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்'' என்று தெரிவித்தார்கள். அவர் இதைக் கேட்டு, ``இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்'' என்றார். மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். பின்னர் தம் சீடரிடம், ``மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்'' என்று கூறினார். அவருடைய சீடர்கள் அவரிடம், ``ரபி, இப்போதுதானே யூதர்கள் உம் மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, ``பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை'' என்றார். இவ்வாறு கூறியபின், ``நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்'' என்றார். அவருடைய சீடர் அவரிடம், ``ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்'' என்றனர். இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம், ``இலாசர் இறந்துவிட்டான்'' என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு, ``நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்'' என்றார். திதிம் என்னும் தோமா தம் உடன்சீடரிடம், ``நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்'' என்றார். இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, ``ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்'' என்றார். இயேசு அவரிடம், ``உன் சகோதரன் உயிர்த்தெழுவான்'' என்றார். மார்த்தா அவரிடம், ``இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்'' என்றார். இயேசு அவரிடம், ``உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?'' என்று கேட்டார். மார்த்தா அவரிடம், ``ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்'' என்றார். இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், ``போதகர் வந்துவிட்டார்; உன்னை அழைக்கிறார்'' என்று காதோடு காதாய்ச் சொன்னார். இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார். வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள். இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, ``ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்'' என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, ``அவனை எங்கே வைத்தீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ``ஆண்டவரே, வந்து பாரும்'' என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்ட யூதர்கள், ``பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!'' என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அவர்களுள் சிலர், ``பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?'' என்று கேட்டனர். இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. ``கல்லை அகற்றிவிடுங்கள்'' என்றார் இயேசு. இறந்துபோனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், ``ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!'' என்றார். இயேசு அவரிடம், ``நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?'' என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, ``தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும்பொருட்டே இப்படிச் சொன்னேன்'' என்று கூறினார். இவ்வாறு சொன்னபின் இயேசு உரத்த குரலில், ``இலாசரே, வெளியே வா'' என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. ``கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்'' என்று இயேசு அவர்களிடம் கூறினார். மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது: மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது திருச்சபைக்கு நீர் அளித்திருக்கின்ற இந்தத் தவக்காலத்திற்காக உம்மை நன்றியுடன் புகழ்கின்றோம். திருச்சபையின் விண்ணகம் நோக்கிய திருப்பயணத்தில் எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவு நிலையினர் அனைவரும் தங்களின் சொல்லிலும் செயலிலும் உமது புனித்தத்தைப் பிரதிபலித்து வாழ்ந்திடவும், அனைவருக்கும் மேன்மையான வழிகாட்டுதல் தந்திடவும் அருள்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நான் உன்னை மறக்கவே மாட்டேன் என்ற தந்தையே!

சிற்றின்பமான உல்லாசமான வாழ்கையில் தங்களின் ஆற்றலையும், திறமைகளையும் வீணாக்குகின்ற இளைஞர்கள் இயேசுவின் அன்பினால் ஈர்க்கப்படவும், தங்களின் வாழ்வை புனிதமான வழிகளில் நடத்தவும்; வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விடுதலையின் தெய்வமே இறைவா!

இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா!

இத்தவ நாட்களிலே எமக்கு நீர் தந்திருக்கும் உமது செய்தியையும், விருப்பத்தையும், சித்தத்தையும், வழிகாட்டுதல்களையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும், எம் உறவுகளோடும் ஒப்புரவாகி, பகைமைகளை விட்டுவிட்டு மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா!

தொலைத் தொடர்பு ஊடகங்கள், தவறான விளம்பரங்கள், பண்பாட்டுச் சிதைவுகள் இவற்றின் மத்தியில் எங்கள் இளைஞர்கள், இளம் பெண்கள் பாவச் சோதனைகளுக்கு உடன்படாமல் உமது வார்த்தையின் வழிநடந்து வெற்றி வாழ்வைக் கண்டிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா!

உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிசாய்த்து, அவரது வழியில் நடந்திடவும், குடிப்பழக்கம், போதைப்பொருள் நுகர்வு, சிற்றின்ப நாட்டங்கள் இவை மனித மாண்பைச் சிதைக்கின்றன என்பதை உணர்ந்து இளைஞர்கள் நற்செய்தியின் வழி வாழ்ந்து மாண்புற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

".. ..என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."

மரண பயம் யாருக்கு? சாவைச் சந்திப்பவனுக்கா? அருகில் இருப்பவனுக்கா? சாவைச் சந்திப்பவன்கூட பயப்படுவதில்லை. அவர்கள் மறை சாட்சிகள், கொள்கை வீரர்கள். புனிதர்கள், புலிகள். சில தொண்ணூறுகளும் சாவைக்கண்டு பயப்படுகிறது. வேறு சில இருபதுகள் கொள்கைக்காகச் சாவைத் தேடிச் செல்கிறது. கூட இருந்தவனுக்குப் பயம். அடடே இவனை நம்பி இருந்தேனே, எல்லாம் முடிந்துவிட்டதே. இப்படி திடுதிப்பென்று போய்விட்டானே.

பாவத்தில் வாழ்பவனும், அருள் நிலை இழந்தவனும்,கொள்கை இல்லாதவனும் இந்த சாவைக்கண்டு பயந்து தினமும் செத்துக்கொண்டிருக்கும் நடை பிணங்கள். உண்மையைச் சொல்ல பயம், நியாயத்தை பேச பயம். தங்களுக்குத் தாங்களே பாதுகாப்புக்குக் கவசத்திற்காகக் கல்லறையை தேர்ந்துகொண்ட புத்திசாலிகள். "உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்" என்னும் நம்பிக்கை வார்த்தைகளால் மரணத்திற்கு உயிர்ப்பு கொடுக்கிறார் இயேசு. சிலரை இந்தச்சமுதாயம் வாழவிடாமல் கட்டி, அடக்கி, அமிழ்த்தி, பெருஞ்சுமையைப் புரட்ட முடியாப் பாராங்கல்லாய் வைத்து சமாதியாக்கிவிடுகிறது. "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்"என்று மீண்டும் ஒரு வாழ்வை வழங்குகிறார் இயேசு.

இன்று இறப்புக்கள் பல விதம். உடலின் உயிர் பிரிவது ஒரு இறப்பு. உன்னில் ஆன்மீகம் அழிவதும் இறப்பு. அறிவு அழிவதும் இறப்பு. நற்பண்பு, அறநெறி,பண்பாடு,கலாச்சாரம் அழிவதும் இறப்பு, பொருளாதாரம் பற்றாக்குறை ஏற்படுவதும் இறப்பு. இந்த அழிவுகளால் எல்லாம் முடிந்துவிட்டது. நான்கு நாட்களாகிவிட்டது, நாற்றமடிக்குமே என்று நைந்துவிட அவசியமில்லை. நம்பிக்கையுடையவன் இதை புது வாழ்வுக்குச் சாதகமாக்கிக்கொள்கிறான்.

குழந்தை இளைஞனாகும்போது குழந்தை தன்மை அழிவது இறப்பு அல்ல, வளர்ச்சியின் ஒரு கட்டம். இளம்பெண் தாயாவது அழிவு அல்ல, புது வாழ்வின் ஒருபடி. ஆகவே இறப்பு என்பது புதிய ஒன்றை உருவாக்கும் பாதை. இறப்பையும் இழப்பையும் தாண்டி புது வாழ்வைப் பெறுவதுதான் இயேசு கற்றுத்தந்த வாழ்க்கைத் தத்துவம்.

மன்றாட்டு:

இறைவா, இருளிலிருந்து ஒளிக்கு எங்களை வழிநடத்தும்.