திருவழிப்பாட்டு ஆண்டு A (09-03-2014)

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்./> மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்./> மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்./> மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்./> மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்./> மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்./> மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்./>


திருப்பலி முன்னுரை

இறைத்திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் அன்பு கொண்டுள்ள இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறு இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திருச்சபை நம்மை அழைக்கிறது. தவத்தின் அடையாளங்களை அணிந்து நோன்பு நாட்களைத் தொடங்கியிருக்கிற உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். விண்ணகம் துறந்து மண்ணகம் வந்த திருமகன் இயேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து அவர் நமக்கு விடுத்துள்ள செய்திகளைக் கேட்டு வாசித்து உலக மக்களின் மீட்புக்கென முடிவில்லாக் காலத்துக்கும் ஒரேமுறையில் தன்னை ஈகம் செய்த இயேசுவின் பாடுகளை சிறப்பாகச் சிந்திக்க வாய்ப்பாயுள்ள இந்தத் தவக்காலத்தில் முதல் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க என்று அணியமாகியிருக்கும் உங்கள் ஒவ்வோருவருக்கும் இயேசு தரும் அருளும் சமாதானமும் இறை அமைதியும் உண்டாவதாக.

நாம் தொடங்கியிருக்கும் இந்தத் தவக்காலம், இறைவனின் அன்பை நாம் அதிகமாக உணரவும், நம் தவறுகளையும, பாவங்களையும் ஏற்று மனம் வருந்தி மன்னிப்பை அடைந்து புதிய வாழ்வை - புனித வாழ்வை பெறவும், இறை உறவில் - பிறர் உறவில் வளரவும், வாழவும் இறைவன் நமக்கு அருளுகின்ற தனிப்பெரும் கொடையாகும். இந்த நாட்களில் உண்மையான மனமாற்றம் பெறுவோம், என்றுமே இறைத் தந்தையின் விருப்பம் நிறைவேற்றி வாழ்வோம். எனவே, கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்: உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்: என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும்: என்று நம் பாவங்களுக்காக உண்மையாகவே மனம்வருந்திச் செபிப்பபோடு, அனைவரோடும் ஒப்புரவாகவும், சோதனைகளை வெல்லவும், செப வாழ்வில் நிலைத்திருக்கவும் வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் `தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது;
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 7-9, 3: 1-7

ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார். ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், ``கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?'' என்று கேட்டது. பெண் பாம்பிடம், ``தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் `தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்' என்று கடவுள் சொன்னார், '' என்றாள். பாம்பு பெண்ணிடம், ``நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்'' என்றது. அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
திருப்பாடல் 51: 1-2. 3-4. 10-11. 12,15

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். -பல்லவி

3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. 4 உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். -பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். -பல்லவி

இரண்டாம் வாசகம்

ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12-19

சகோதரர் சகோதரிகளே, ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை. எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார். ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக வந்த விடுதலை. மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால், அருள் பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள் வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அகன்று போ, சாத்தானே, `உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்'அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-11

அக்காலத்தில் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைநிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன்பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, ``நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்'' என்றான். அவர் மறுமொழியாக, `` `மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்' என மறைநூலில் எழுதியுள்ளதே'' என்றார். பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ``நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; `கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று மறைநூலில் எழுதியுள்ளது'' என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம், `` `உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' எனவும் எழுதியுள்ளதே'' என்று சொன்னார். மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், ``நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்'' என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ``அகன்று போ, சாத்தானே, `உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது'' என்றார். பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்: உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது திருச்சபைக்கு நீர் அளித்திருக்கின்ற இந்தத் தவக்காலத்திற்காக உம்மை நன்றியுடன் புகழ்கின்றோம். எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவு நிலையினர் அனைவரும் தங்களின் சொல்லிலும் செயலிலும் உமது புனித்தத்தைப் பிரதிபலித்து வாழ்ந்திடவும், அனைவருக்கும் மேன்மையான வழிகாட்டுதல் தந்திடவும் அருள்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நான் உன்னை மறக்கவே மாட்டேன் என்ற தந்தையே!

தொலைத் தொடர்பு ஊடகங்கள், தவறான விளம்பரங்கள், பண்பாட்டுச் சிதைவுகள் இவற்றின் மத்தியில் எங்கள் இளைஞர்கள், இளம் பெண்கள் பாவச் சோதனைகளுக்கு உடன்படாமல் உமது வார்த்தையின் வழிநடந்து வெற்றி வாழ்வைக் கண்டிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விடுதலையின் தெய்வமே இறைவா!

உம்முடைய அன்பிலிருந்து எம்மைப் பிரிக்க முயற்சிக்கும் மனிதர்கள், பொருட்கள், ஆசைகள், சந்தர்ப்பங்கள் போன்ற கொடிய சோதனைகளிலிருந்து நாங்கள் விடுதலை பெற்று உமக்கும், உமது வார்த்தைக்கும் மாத்திரமே செவிசாய்த்து, உண்மையான விசுவாச வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய அருளை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா!

இத்தவ நாட்களிலே எமக்கு நீர் தந்திருக்கும் உமது செய்தியையும், விருப்பத்தையும், சித்தத்தையும், வழிகாட்டுதல்களையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும், எம் உறவுகளோடும் ஒப்புரவாகி, பகைமைகளை விட்டுவிட்டு மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்'' (லூக்கா 4:1-2)

இயேசு தம் இறையாட்சிப் பணியைத் தொடங்கவிருக்கிறார். அதற்குமுன் அவர் ''சோதிக்கப்பட்டார்'' (லூக் 4:1). இயேசு ''பாலைநிலத்தில்'' சோதிக்கப்பட்டார் என்னும் செய்தியை மாற்கு, மத்தேயு, லூக்கா ஆகிய மூவருமே தருகிறார்கள். பாலைநிலம் என்றால் சகாரா போன்று பரந்துவிரிந்த மணல்வெளி அல்ல. மாறாக, பாலஸ்தீன நாட்டுப் பாலைநிலம் என்பது ஒரு வறண்ட பிரதேசம். அங்கே குளிர்காலத்தில் மட்டும் தாவரங்கள் வளர்வதுண்டு. பொதுவாகப் பாழடைந்த ஓர் இடமாக இருந்த அப்பாலைநிலத்தில் கள்வர் நடமாடினர்; தீய ஆவிகள் குடிகொண்டதாக மக்கள் நம்பினர். இயேசுவும் அங்கே ''அலகையினால்'' சோதிக்கப்படுகிறார். -- பாலைநிலத்திற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது, இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வந்தபோது ''பாலைநிலம்'' வழி நடந்துவந்தனர். அங்கே அவர்களுக்குச் சோதனைகள் எழுந்தன. ஆக, இயேசு பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டபோது அலகையின் தூண்டுதல்களுக்கு இடம்கொடுக்கவில்லை. அலகை இயேசுவை ''கடவுளின் மகன்'' என அழைத்தது; அவர் நினைத்தால் கோபுர உயரத்திலிருந்து கீழே குதித்தாலும் தீங்கு ஏற்படாது என்று சொல்லிப்பார்த்தது; ஏன், விவிலிய வாக்குகளை மேற்கோள் காட்டி இயேசுவை மயக்கப்பார்த்தது. ஆனால் இயேசு அச்சோதனைகளுக்கு இடம் கொடு;க்கவில்லை. மாறாக, கடவுளிடத்தில் மட்டுமே அவர் தம் முழு நம்பிக்கையை வைத்திருந்தார். கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடப்பதே அவருக்கு ''உணவு''. அவர் கடவுளைச் சோதனைக்கு உட்படுத்தமாட்டார். மாறாக, கடவுளிடம் தம்மை முழுமையாகக் கையளித்துவிட்டு, அவருடைய விருப்பத்தையை தம் விருப்பமாக மாற்றிக்கொண்டு, அதன்படியே எந்நாளும் நடப்பார். இவ்வாறு கடவுளிடம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்த இயேசு நமக்கு முன்மாதிரி வழங்கியுள்ளார். நாமும் கடவுளையே பற்றிக்கொண்டு வேறு பற்றுக்களை அறுத்திட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடம் நாங்கள் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள் தாரும்.