யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 7வது வாரம் சனிக்கிழமை
2014-03-01


முதல் வாசகம்

நேர்மையாளரின் வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20

உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்துகொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்; மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று. மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது. என் சகோதரர் சகோதரிகளே, உங்களுள் ஒருவர் உண்மையை விட்டு நெறி தவறி அலையும்போது, வேறொருவர் அவரை மனந்திரும்பச் செய்தால், தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்கப்படுவதாக!
திருப்பாடல் 141: 1-2. 3,8

1 ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; விரைவாய் எனக்குத் துணைசெய்யும். உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும். 2 தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக் கொள்ளப்படுவதாக! மாலைப் பலி போல் என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக! பல்லவி

3 ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்; என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும். 8 ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன; உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்; என் உயிரை அழியவிடாதேயும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில் சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ``சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத ''பரிசேயர் இயேசுவை அணுகி, 'கணவன் ''சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்'' (மத்தேயு 19:13)

இயேசு கடவுளாட்சி பற்றிய போதனையை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார். அவ்வாறு உரையாற்றும்போது, மணமுறிவு கடவுளுக்கு ஏற்புடையதல்ல எனவும் இயேசு விளக்கிச் சொல்கிறார். வைத்த கண் வாங்காமல் இயேசுவின் சொற்களை மக்களெல்லாரும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கின்ற அந்த வேளையில் பெற்றோர் சிலர் தங்கள் சிறு குழந்தைகளோடு இயேசுவை அணுகி வருகின்றனர். தம் பிள்ளைகள்மேல் கைகளை வைத்து இயேசு அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என அப்பெற்றோர் வேண்டுகின்றனர். இயேசுவின் சீடருக்கோ தாங்க முடியாத எரிச்சல்! சிறுபிள்ளைகள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டும், விளையாட்டுத்தனமாய்ப் பேசிக்கொண்டும் இருந்தால் இயேசுவின் சொற்களை மக்கள் கேட்பது கடினமாகும்; பராக்குக்கும் இடமாகும். அது மட்டுமல்ல, இயேசு போதிக்கின்ற இடத்தில் குழந்தைகளுக்கு என்ன வேலை? பெரியவர்கள் கூடியிருந்து உரையாடும் வேளையில் சிறுபிள்ளைகள் அங்கே நுழைந்தால் குழப்பம்தானே! எனவே அச்சிறுபிள்ளைகளையும் அவர்களைக் கூட்டி வந்தவர்களையும் பார்த்து இயேசுவின் சீடர் முறுமுறுக்கின்றனர்; அங்கிருந்து போய்விடுமாறு அவர்களை அதட்டுகின்றனர். இதைக் கண்ட இயேசுவின் கவனம் அக்குழந்தைகள்மீது திரும்புகிறது. அவரது பார்வையில் குழந்தைகளும் வயதில் முதிர்ந்தோரும், பெற்றோரும் பிள்ளைகளும் எல்லாருமே சமம்தான். யாரையும் ஒதுக்கிவைக்கின்ற போக்கு இயேசுவுக்குக் கிடையாது. எனவே இயேசு ''சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்'' என்கிறார்.

இன்னார் இன்னார் மட்டுமே கடவுளை அணுகிச் செல்ல முடியும் என நம் சமுதாயம் எல்லைக் கோடுகளை வரைகின்ற நேரங்கள் உண்டு. குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கோவிலுக்குள் நுழைந்து இறை சன்னிதானத்தில் வழிபடலாம் எனவும் அநீதியான கட்டுப்பாடுகள் ஆங்காங்கே உண்டு. அல்லது, மக்களைப் பிரித்து வேறுபடுத்தி அவர்களுக்குக் கடவுளின் இல்லத்தில் உயர்ந்த இடம், தாழ்ந்த இடம் என்று இட ஒதுக்கீடு செய்யும் பாணிகள் நிலவுகின்றன. இயேசு இவ்வாறு மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. கடவுளின் முன்னிலையில் அனைவரும் சமமே என்பதுதான் கடவுளின் மகனாகிய இயேசு நமக்கு வழங்குகின்ற போதனை. அன்றைய சமுதாயத்தில் சிறுபிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் உரிமைகள் இருக்கவில்லை. இன்றும்கூட சில இடங்களில் இதே நிலைதான். அனைவரையும் கைகளை விரித்து வரவேற்கின்ற சமுதாயம் உருவாக வேண்டும். மனிதரை உயர்ந்தவர் தாழ்ந்தவர், சிறியவர் பெரியவர் என வேறுபடுத்திப் பிரித்து, சம நீதி வழங்க மறுக்கின்ற சமுதாயம் மறைந்து, புதிய உலகம் உதித்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, மனிதர் அனைவரும் உம் பிள்ளைகளே என்பதை மறவாமல், அனைவருக்கும் மதிப்பளித்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.