யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 6வது வாரம் புதன்கிழமை
2014-02-19


முதல் வாசகம்

இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இராமல், அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 19-27

என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்: ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும், பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்ட வேண்டும். ஏனெனில் மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது. எனவே எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர், கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்று உடனே தாம் எவ்வாறு இருந்தார் என்பதை மறந்துவிடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவர். ஆனால் நிறைவான விடுதலையளிக்கக்கூடிய சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதைத் தொடர்ந்து கற்போர் தாம் கேட்பதை மறந்து விடுவதில்லை; அவர்கள் அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள்; தம் செயல்களால் பேறுபெற்றவர் ஆவார்கள். தாம் சமயப் பற்றுடையோர் என எண்ணிக் கொண்டிருப்போர் தம் நாவை அடக்காமல் இருப்பாரென்றால் தம்மையே ஏமாற்றிக்கொள்வர். இத்தகையோருடைய சமயப் பற்று பயனற்றது. தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?
திருப்பாடல் 15: 2-,5

2 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; தம் நாவினால் புறங்கூறார். பல்லவி

3bஉ தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். பல்லவி

4உன தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். 5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ! இறைவன் நம்மை அழைத்ததால் எத்தகைய எதிர்நோக்கு ஏற்பட்டுள்ளது என்று நாம் அறிந்துகொள்ளும்படி, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தை நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 22-26

அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, ``ஏதாவது தெரிகிறதா?'' என்று கேட்டார். அவர் நிமிர்ந்து பார்த்து, ``மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்'' என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார். இயேசு அவரிடம், ``ஊரில் நுழைய வேண்டாம்'' என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்'' (மாற்கு 8:25)

மாற்கு நற்செய்தியில் இயேசு புரிந்த பல அதிசய செயல்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் இயேசு பார்வையற்றோருக்கு மீண்டும் பார்வை அளிக்கும் நிகழ்ச்சி. இயேசு தேர்ந்துகொண்ட சீடர்கள் பலமுறையும் பார்வையற்றவர்களாகவே இருந்தார்கள். இயேசு யார் என்பதை அவர்களால் கண்டுகொள்ள இயலவில்லை. இதை மாற்கு கோடிட்டுக் காட்டுகிறார். சீடரின் மந்த புத்தியைக் காட்டுகின்ற மாற்கு அச்சீடர் பார்வை பெறுவதையும் குறிக்கத் தவறவில்லை. எனவே, பார்வையற்ற ஒரு மனிதர் இயேசுவை அணுகிச்சென்று தமக்கு இயேசு நலமளிக்க வேண்டும் என்று கேட்ட நிகழ்ச்சியை விவரிக்கின்ற மாற்கு அந்நிகழ்ச்சியில் உண்மையாகவே பார்வையற்றவர்களாக இருந்தவர்கள் சீடர்கள்தாம் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார். இயேசு அவர்களுடைய கண்களைத் திறக்கிறார்.

சீடர்களுக்குப் பார்வை கிடைத்ததும் அவர்கள் இயேசு உண்மையிலேயே யார் என்பதை உணரத் தொடங்குகிறார்கள். இயேசு வெற்றி மமதையோடு வருகின்ற மெசியா அல்ல, மாறாக பல துன்பங்களைச் சந்தித்து, சிலுiயிலே அறையுண்டு, இறக்கப் போகின்ற ''மெசியா'' என்பதை அவர்கள் உணர்வார்கள். ஆயினும், அனைவராலும் கைவிடப்பட்ட மெசியாவைக் கடவுள் மீண்டும் உயிர்பெற்றெழச் செய்வார் என்னும் உண்மையும் சீடர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இன்று இயேசுவின் சீடர்களாக வாழ்வோர் இயேசுவைத் ''துன்புறும் மெசியா''வாக ஏற்றிடத் தயங்கலாகாது. கிறிஸ்தவ வாழ்வில் துன்பத்திற்கு இடம் உண்டு. ஆனால் அத்துன்பத்தின்மீதும் சாவின்மீதும் கடவுள் வெற்றிகொண்டுவிட்டார் என்னும் உண்மை நமக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கிறது.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் புதுப்பார்வை பெற்ற மனிதராக வாழச் செய்தருளும்