யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 6வது வாரம் செவ்வாய்க்கிழமை
2014-02-18


முதல் வாசகம்

கடவுள் எவரையும் சோதிப்பதில்லை.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-18

அன்பிற்குரியவர்களே, சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள். சோதனை வரும்போது, `இச்சோதனை கடவுளிடமிருந்தே வருகிறது' என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப் படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது. பின்னர் தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது. என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, ஏமாந்துபோக வேண்டாம். நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரம் எல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! நீர் கண்டித்து பயிற்றுவிப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல் 94: 12-13. 14-15. 18-19

12 ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர்; 13ய அவர்களின் துன்ப நாள்களில் அவர்களுக்கு அமைதி அளிப்பீர். பல்லவி

14 ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார். 15 தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன் வழி நடப்பர். பல்லவி

18 `என் அடி சறுக்குகின்றது' என்று நான் சொன்னபோது, ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று. 19 என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 14-21

அக்காலத்தில் சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அப்பொழுது இயேசு, ``பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, ``நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?'' என்று அவர் கேட்க, அவர்கள், ``பன்னிரண்டு'' என்றார்கள். ``ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?'' என்று கேட்க, அவர்கள், ``ஏழு'' என்றார்கள். மேலும் அவர் அவர்களை நோக்கி, ``இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?'' என்று கேட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக் கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?' என்று கேட்டார்'' (மாற்கு 8:17)

இயேசு சீடர்களிடம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகிறார். அக்கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் கூற முடியாமல் சீடர்கள் திணறிப்போயிருப்பார்கள். இயேசு கேட்ட கேள்விகளின் பின்னணி என்ன? இயேசு இருமுறை பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு உணவளித்ததைச் சீடர்கள் நேரடியாகக் கண்கொண்டு பார்த்திருந்தார்கள். இப்போது தங்களிடம் அப்பம் இல்லையே என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் (காண்க: மாற் 8:16). ஒருவேளை இதற்குமுன் செய்ததுபோல இப்போதும் இயேசு அதிசயமான விதத்தில் தங்களுக்கு உணவளிப்பார் என அவர்கள் நினைத்தார்களா? அல்லது புதுமைகள் புரிகின்ற இயேசு யார் என்னும் கேள்விக்குச் சரியான பதில் தெரியாமல் குழப்பம் அடைந்தார்களா? எவ்வாறாயினும், இயேசு அவர்களை நோக்கி, ''உங்கள் உள்ளம் மழுங்கிப் போயிற்றா?'' (மாற் 8:17) எனக் கேட்பது நம்மைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும்.

மனித எதிர்பார்ப்புகளைத் தாண்டிச் செல்ல வேண்டும் என இயேசு தம் சீடர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர்கள் இயேசுவை அதிசயங்கள் புரிகின்ற பெரிய மனிதர் என்று மட்டுமே நினைத்தால் அது தவறு என இயேசு உணர்த்துகிறார். கடவுள் பற்றிய உண்மையை அறிந்து உணர நமக்கு உலகப் பார்வை உதவாது. நேரடியாகப் பார்த்து, கேட்டு, அறிகின்றவற்றை நாம் தாண்டிச் செல்ல வேண்டும். அப்போதுதான் கடவுள் இயேசு வழியாகச் செயல்படுவது நம் அகக் கண்களுக்குப் புலனாகும். இயேசு வழியாகக் கடவுள் செயலாற்றுகிறார் என்பதை உணர்கின்ற அதே நேரத்தில் இயேசு நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் மனிதரல்ல, மாறாக அவர் தம்மையே வெறுமையாக்கி, துன்பங்கள் வழியாக நமக்குப் புது வாழ்வு தருகிறார் என நாம் ஏற்க முன்வர வேண்டும். இதற்கு நேரடியான பணங்கள் நமக்குக் கிடையாது. ஆனால் நம் உள்ளம் ''மழுங்கிப் போகாமலும்'' கடினமாகிப் போகாமலும் இருந்து, ''இளகிய'' ஒன்றாக மாறிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் இளகிய உள்ளம் கொண்டவர்களாக மாறிட அருள்தாரும்.