யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 5வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-02-14

புனித சிறில்


முதல் வாசகம்

தாவீதின் குடும்பத்திலிருந்து இஸ்ரயேல் குலம் பிரிக்கப்பட்டது
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 29-32; 12: 19

ஒரு நாள் எரொபவாம் எருசலேமிலிருந்து வெளியே போனபோது, சீலோவைச் சார்ந்த அகியா என்ற இறைவாக்கினர், அவனை வழியில் கண்டார். அவர் புதுச் சால்வை ஒன்று அணிந்திருந்தார். இருவரும் வயல் வெளியே தனித்திருந்தனர். அப்பொழுது அகியா தாம் போர்த்தியிருந்த புதுச் சால்வையை எடுத்து அதைப் பன்னிரு துண்டுகளாய்க் கிழித்தார். பிறகு அவர் எரொபவாமை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: �இவற்றில் பத்துத் துண்டுகளை உனக்கென எடுத்துக்கொள். ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இவ்வாறு கூறுகிறார்: �இதோ, நான் சாலமோன் கையினின்று அரசைப் பறித்து, பத்துக் குலங்களை உனக்கு அளிக்கப் போகிறேன். ஆயினும் என் ஊழியன் தாவீதை முன்னிட்டும், இஸ்ரயேலரின் நகர்கள் அனைத்திலிருந்தும் நான் தேர்ந்துகொண்ட எருசலேம் நகரை முன்னிட்டும் ஒரு குலம் மட்டும் அவன் கையில் இருக்கும்.' '' தாவீதின் குடும்பத்துக்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: கடவுளாகிய ஆண்டவர் நானே; நீங்கள் எனக்குச் செவிசாய்ப்பீர்.
திருப்பாடல்81: 9-10. 11-12. 13-14

9 உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது. 10ய உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. பல்லவி

11 ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை. 12 எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டு விட்டேன். பல்லவி

13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும். 14 நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளு அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

. மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி, ``எப்பத்தா'' அதாவது `திறக்கப்படு' என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ``இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!'' என்று பேசிக்கொண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்'' (மாற்கு 7:33)

யூத இனத்தைச் சேராத பிற இன மக்கள் வாழ்ந்த பகுதி தீர், சீதோன், தெக்கப்பொலி ஆகும். இயேசு அப்பகுதிகளுக்குச் சென்றார் என மாற்கு குறிப்பிடுகிறார் (மாற் 7:31). அங்கே பிற இனத்தைச் சார்ந்த ஒருரை - காது கேளாவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை - இயேசுவிடம் கொண்டுவருகிறார்கள். இயேசு அந்த மனிதருக்குக் குணம் நல்கிய நிகழ்ச்சியை மாற்கு தத்ரூயஅp;பமாகச் சித்தரிக்கிறார். அந்த மனிதருக்குப் பேச்சுத் திறனும் இல்லை, கேள்வித் திறனும் இல்லை. தாம் போதித்தவற்றை மக்கள் கவனமாகக் ''கேட்க வேண்டும்'' என இயேசு ஏற்கெனவே கூறியிருந்தார் (மாற் 7:6). அவரிடம் வாய்திறந்து சாதுரியமாக ''பேசிய'' ஒரு பெண்ணின் கோரிக்கையை இயேசு நிறைவேற்றி வைத்தார் (காண்க: மாற் 7:24-30). இப்போது இயேசு ஒரு மனிதருக்குப் ''பேசும்'' திறனையும் ''கேட்கும்'' திறனையும் அளிக்கிறார். ''பேச முடியாதவர்களின் வாயை ஞானம் திறந்தது: குழந்தைகளின் நாவுக்குத் தெளிவான பேச்சைத் தந்தது'' (சாஞா 10:21) என்னும் இறைவாக்கின் அடிப்படையில் இயேசு அம்மனிதருக்கு உள்ளறிவையும் ஞானத்தையும் அளித்தார் எனலாம்.

தனியே அழைத்துச் செல்லுதல், விரல்களைக் காதுகளில் இடுதல், உமிழ்நீரால் தொடுதல் ஆகிய செயல்களை மாற்கு குறிப்பிடுவதன் வழியாக இயேசு உண்மையிலேயே ஒரு ''மருத்துவராக'' செயல்பட்டார் என அறிகிறோம். ஆனால் வெளி அடையாளம் என்பது உள் எதார்த்தத்திற்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டும். இயேசு அந்த மனிதருக்குப் பேச்சுத் திறனும் கேள்வித் திறனும் வழங்கிய போது அந்த மனிதரின் உள்ளத்தைத் திறந்தார்; அவருடைய இதயத்தைத் திறந்தார்.அதைத் தொடர்ந்து, கடவுளின் வார்த்தையைக் ''கேட்கவும்'' அதைப் ''பேசவும்'' அந்த மனிதர் முன்வந்தார். இயேசுவிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ளும்போது அவர் நமக்கு இத்தகைய கேள்வித் திறனையும் பேச்சுத் திறனையும் நல்குவார். அப்போது நாம் இயேசுவை மாயஜாலம் நிகழ்த்துகின்ற அதிசய மனிதராகப் பார்க்காமல் கடவுளின் அன்பை நம்மோடு பகிர்கின்ற இறைமகனாக நம்பி ஏற்போம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு இறைஞானம் அளித்து நல்வழி காட்டும் இயேசுவிடம் நாங்கள் முழு நம்பிக்கை கொள்ள அருள்தாரும்.