யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 3வது வாரம் சனிக்கிழமை
2014-02-01


முதல் வாசகம்

"நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12;1-7,10-17

1 ஆண்டவர் நாத்தானைச் தாவீதிடம் அனுப்பினார்; நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்; ஒரு நகரில் இரு மனிதர்கள் இருந்தனர். ஒருவன் செல்வன் மற்றவனோ ஏழை. 2 செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன. 3 ஏழையிடம் ஒரு ஆட்டுக் குட்டியைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர்குடித்து அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது. 4 வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக் குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான். 5 உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு, "ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும். 6 இரக்கமின்றி இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்" என்று நாத்தானிடம் கூறினார். 7 அப்போது நாத்தான் தாவீதிடம், "நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். "நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன். நான் உன்னைச் சவுலின் கையிலினின்று விடுவித்தேன். 10 இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது. ஏனெனில் நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய். 11 இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; "உன் குடும்பத்தினின்றே நான் உனக்கு தீங்கை வர வழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப் பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான். 12 நீ மறைவில் செய்ததை இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச் செய்வேன் என்று கூறினார். 13 அப்போது தாவீது நாத்தானிடம், "நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன்" என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், "ஆண்டவரும் பாவத்தை நீக்கிவிட்டார். 14 ஆயினும், ஆண்டவர் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்தால் உனக்கு பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்" என்று சொன்னார். 15 பின்பு நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்கு பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது. 16 தாவீது அக்குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக்கிடந்தார். 17 அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பமில்லை; அவர்களோடு அவர்களும் உண்ணவுமில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்
திருப்பாடல் 51;10-15

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். பல்லவி

11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும் பல்லவி .

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். பல்லவி

13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

14 கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும் பல்லவி .

15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்

35 அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, "அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்" என்றார். 36 அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. 37 அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது. 38 அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். 39 அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, "இரையாதே, அமைதியாயிரு" என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. 40 பின் அவர் அவர்களை நோக்கி, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார். 41 அவர்கள் பேரச்சம் கொண்டு, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, 'இரையாதே, அமைதியாயிரு' என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று'' (மாற்கு 4:39)

விவசாயப் பின்னணியிலிருந்து இன்னொரு உவமையை எடுத்துக் கூறுகிறார் இயேசு. வயலில் விதைக்கச் செல்லுமுன் மண் நன்றாகப் பண்பட்டிருக்க வேண்டும். ஆனால் விதைத்த பிறகு அவ்விதை நிலத்தில் வேரூயஅp;ன்றுகிறது; தளிர் தோன்றுகிறது; இலை வளர்கிறது; பூ மலர்கிறது; கதிர் வெளியாகித் தானியம் உருவாகிறது. இச்செயல்களில் எதையுமே விவசாயி செய்வதில்லை; மாறாக, இயற்கையே செய்கிறது. மனித கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்தில் இயற்கையின் செயல்கள் நிகழ்ந்து, மனிதருக்கு வளமான விளைச்சல் கிடைக்கிறது. இந்த இயற்கை நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டு இயேசு மக்களுக்கு ஓர் ஆழ்ந்த உண்மையை விளக்குகிறார். அதாவது, கடவுளாட்சியை இவ்வுலகுக்குக் கொணர்வதில் முக்கிய பங்காற்றுபவர் கடவுள்தாம். மனிதர் தம் சொந்த முயற்சியால், கடவுளின் துணையின்றி, கடவுளாட்சியை மலரச் செய்ய இயலாது. -- இதனால், கடவுளாட்சியை மலரச் செய்வதில் மனிதருக்குப் பங்கே இல்லை என்று நாம் தவறாக முடிவுகட்டிவிடல் ஆகாது. கடவுளோடு இணைந்து மனிதர் உழைக்கும் போது கடவுள் ஆட்சி அங்கே மலர்கின்றது. அப்போது கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ற வாழ்க்கைமுறை மனிதருக்கு இயல்பான ஒன்றாக மாறும். அதுவே இறையாட்சியின் மலர்ச்சி. அத்தகைய ஆட்சியைக் கொணர்வதுதான் தம் பணி என்று இயேசு முழங்கினார். அவரோடு இணைந்து மனிதர் செயல்படும்போது அவருடைய இறையாட்சிப் பணி விரிவடையும்; மனித சமுதாயம் கடவுள் விரும்பும் சமுதாயமாக, கடவுளின் ஆட்சி நிலவும் குழுவாக மாறும். இத்தகைய புதிய சமுதாயம் இங்கே தொடங்கிவிட்டது என்றாலும் அதன் நிறைவு இறுதிக்காலத்தைச் சார்ந்தது என இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தியருளும்.