யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 3வது வாரம் புதன்கிழமை
2014-01-29


முதல் வாசகம்

எனது பெயருக்காக கோவில் கட்ட இருப்பவன் அவனே
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-17

அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: �நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: �நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப் போகிறாயா?' இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்தது முதல் இந்நாள்வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை; மாறாக, ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடமாய் இருந்தது. இஸ்ரயேலர் அனைவரும் சென்ற இடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன், அவர்களுள் எவரிடமாவது �எனக்காகக் கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாதது ஏன்?� என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா? எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காக கோவில் கட்ட இருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலை நிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். உன் முன்பாக நான் சவுலை விலக்கியதுபோல், என் பேரன்பினின்று அவனை விலக்க மாட்டேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!� மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான் தாவீதுக்கு எடுத்துரைத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.
திருப்பாடல் 89: 3-4. 26-27. 28-29

3 `நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.' -பல்லவி

26 `நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். 27 நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன். -பல்லவி

28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். 29 அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவரோ என்றென்றும் நிலைத்திருப்பார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20

அக்காலத்தில் இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது: ``இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.'' அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், ``இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் `ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்' '' என்று கூறினார். மேலும் அவர் அவர்களை நோக்கி, ``இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன'' (மாற்கு 4:8)

கடவுளாட்சி என்றால் என்னவென்று விளக்கிச் சொல்வதற்காக இயேசு பல உவமைகளைப் பயன்படுத்தினார். இவ்வாறு இயேசு கூறிய உவமைகள் அன்றாட வாழ்க்கைச் சூழமைவைப் பிரதிபலித்தன. அவர் கூறிய உவமைகளில் பல விவசாயப் பின்னணியில் அமைந்தன. எடுத்துக்காட்டாக, விதைப்பவர் உவமையைக் கூறலாம். விதைக்கும்போது எல்லா விதைகளும் நல்ல நிலத்தில் விழாமல் சில வழியோரத்திலும், சில பாறைப் பகுதிகளிலும், சில முட்செடிகள் நடுவிலும் விழுந்ததால் பயனற்றுப் போயின. ஆனால் நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் ஏராளமாகப் பலன் நல்கின; முப்பது, அறுபது, நூறு மடங்குவரை அறுவடை கிடைத்தது. இங்கே வருகின்ற ''விதை'' கடவுளின் வார்த்தையைக் குறிக்கிறது என்றும், அவ்வார்த்தையைக் கேட்டு, அதை உள்ளத்தில் ஏற்று, அதன் ஒளியில் தம் வாழ்க்கையை அமைப்போர் மிகுந்த பலன் நல்குவர் என்று இயேசுவே இந்த உவமைக்கு விளக்கம் தந்ததாகவும் நற்செய்தியாசிரியர் குறிப்பிடுகிறார் (காண்க: மாற் 4:13-20).

நம் உள்ளத்தில் கடவுளின் வார்த்தையை நாம் எவ்வாறு ஏற்கிறோம்? நம் உள்ளம் பண்பட்ட நிலமாக உள்ளதா அல்லது கல்லும் முள்ளும் நிறைந்த பயனற்ற நிலமாகக் கிடக்கிறதா? பண்பட்ட நிலத்தில் விழுகின்ற விதை பயன்தருவது போல நாமும் கடவுளின் வார்த்தையைப் பணிவோடு ஏற்று, பாதுகாத்து, வளரவிட்டால் அது அதிசயமான பலனை நல்கும் என்பதில் ஐயமில்லை.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளம் பண்பட்ட நிலமாக இருந்து உம் வார்த்தையை ஏற்றுப் பலன் நல்கிட அருள்தாரும்.