திருவழிப்பாட்டு ஆண்டு A (26-01-2014)

இயேசு அவர்களைப் பார்த்து, 'என் பின்னே வாருங்கள்; 
நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்றார்'' ./> இயேசு அவர்களைப் பார்த்து, 'என் பின்னே வாருங்கள்; 
நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்றார்'' ./> இயேசு அவர்களைப் பார்த்து, 'என் பின்னே வாருங்கள்; 
நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்றார்'' ./>


திருப்பலி முன்னுரை

திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் என் இனிய சகோதரர்களே, சகோதரிகளே! உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி ஆண்டவரின் அருள்பெற அணிதிரளும் உங்கள் அனைவருக்காகவும் பணிவுடன் இறைவனை வேண்டி நிற்கின்றேன். ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் வாரத்திலிருக்கும் நாம் இன்றைய திருப்பலி வழிபாட்டிலிருந்து இறைவன் முன் உலகோர்முன் புதிய படைப்புக்களாக நிற்க வழிகாட்டப்படுகிறோம்.

இன்றைய ஞாயிறு நற்செய்தி, நாம் கடவுளிடம் முழுவதுமாக சரணடையவேண்டும் என நம்மை அழைக்கிறது. புனித அந்திரேயா போல நாமும் இயேசுவோடு தங்குவோம். அவரது வலிமை பெறுவோம். பெரு மகிழ்வோடு வாழ்வோம். பிறரும் அந்த மகிழ்வைப் பெற, அவர்களுடன் பேசி இயேசுவை எடுத்துச் சொல்லி அவரிடம் அழைத்து வருவோம். மகிழ்வைப் பெருக்குவோம்.

இவ்வுலகத்தின் மாபெரும் விடுதலைச் சக்தியாக இருப்பவர் இறைவன் மாத்திரமே. அவர் தரும் விடுதலையே நமக்கு நிறைவானதும், நிம்மதியும், ஆறுதலும் தருவதுமாகும். இந்த உண்மையை: மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்: அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்: அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர் என்னும் இறைவார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன. எனினும் பவுலடியார் மூலமாக வெளிப்படும் இறைவனின் ஏக்கத்தை நாம் நம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். எனவே இன்றைய திருப்பலியில் நாம் அன்பிய சமுதாயமாக வாழ நம்மை ஒப்புக்கொடுத்துச் செபிப்போம்.



முதல் வாசகம்

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்;.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9:1-4

முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச் செய்வார். காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்ததுபோல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு
திருப்பாடல் 27: 1. 4. 13-14

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். -பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-13,17

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர். நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் `நான் பவுலைச் சார்ந்துள்ளேன்' என்றோ `நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றோ `நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்' என்றோ, `நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்' என்றோ சொல்லிக்கொள்கிறீர்களாம். கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்? திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தல் ஆகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-23

அக்காலத்தில் யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தை விட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: ``செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.'' அதுமுதல் இயேசு, ``மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' எனப் பறைசாற்றத் தொடங்கினார். இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு: மன உறுதிகொள்: உன் உள்ளம் வலிமை பெறட்டும்: ஆண்டவருக்காகக் காத்திரு.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

மருத்துவர் நோயற்றவருக்கு அன்று நோயுற்றவருக்கே தேவை என்று மொழிந்த எம் இறைவா!

உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து நோயினாலும், பிணியாலும் வாழுகின்ற மக்கள் அனைவருக்கும் உம் வல்லமையின் கரங்கள் அவர்கள் வழியாக வந்து மக்களை ஆசிர்வதிதத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பிரிவுற்ற அனைவரையும் ஒன்றிணைத்து அமைதியை உருவாக்கும் தந்தையே!

நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருந்து. எங்களிடையே உள்ள பிளவுகளைத் தவிர்த்து கிறிஸ்துவுக்குள் ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டு, உமக்குகந்த அன்பிய சமூகமாக வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்று மொழிந்த எம் இறைவா!

நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், நோயினாலும், பிணியினாலும் பாதிக்கப்பட்டு கஸ்டப்படுகின்ற மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து பராமரிக்க தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அழைத்தலின் நாயகனே இயேசுவே!

அந்திரேயாவை உம் சீடராகப் பெயர் சொல்லி அழைத்ததுபோல, என்னையும் அழைத்ததற்காக நன்றி. அந்திரேயாவைப்போல அனைத்தையும் விட்டுவிட்டு உம்மைப் பின்தொடரவும், எமது இளைஞர்கள் அனைவர் மீதும் மனமிரங்கி நீர் உம் திருமகன் இயேசுவை அனைத்து நலன்களாலும் நிரப்பியது போல எம் இளைஞர்களையும் ஆவியின் வல்லமையால் நிரப்பி, ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நல்லாயனே இறைவா!

இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள் என்று கூறினீரே. அதுபோல எம் இளைஞர்களைத் தீய வழிகளில் திசை திருப்பும் அனைத்துத் தீமைகளிலிருந்தும் அவர்களைக் விடுவித்து, அவர்களை ஆன்மீகத்திலும் அருள்வாழ்விலும் உறுதிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாதுகாப்பின் நாயகனே!

எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றத் தொடங்கினார்'' (மத்தேயு 4:17)

இயேசு திருமுழுக்குப் பெற்று, பாலைநிலத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்ச்சியை விவரித்தபின், மத்தேயு இயேசுவின் பணித் தொடக்கம் பற்றிப் பேசுகிறார். கடவுளிடமிருந்து பணிப்பொறுப்புப் பெற்ற இயேசு அப்பணியினை முழுமையாக நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டுச் செல்கின்றார். அவருடைய பணி அவர் உரைக்கின்ற சொல், புரிகின்ற செயல், நினைக்கின்ற எண்ணம், உணர்கின்ற மனநிலை போன்றவை வழியாக வெளிப்படுகிறது. இவ்வெளிப்பாட்டினை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. இயேசு தம் பணியைத் தொடங்கிய முதல் கட்டத்திலேயே ஓர் அறிவிப்போடு மக்களை அணுகுகிறார். அதாவது, ''மனம் மாறுங்கள்... விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' (மத் 4:7) என்னும் அறிவிப்பு இயேசுவின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. விண்ணரசு என்பது இறையாட்சியைக் குறிக்கும். விண்ணில் உறைபவர் கடவுள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் விண் என்றாலே கடவுளைக் குறிக்கும் சொல் ஆயிற்று. ஆக, கடவுளின் ஆட்சி நெருங்கி வந்துவிட்டது என இயேசு மக்களுக்கு அறிவிக்கிறார்.

மக்கள் தம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், கடவுளின் பார்வையைப் பெற வேண்டும், கடவுளின் திருவுளம் யாதென அறிந்துணர்ந்து அதைத் தம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும் - இதுதான் இயேசு கடவுளாட்சி பற்றி அறிவித்த நற்செய்தியின் சாரம். மனம் மாற வேண்டும் என்றால் மனித சிந்தனை நன்னெறிக்கு ஏற்ப அமைய வேண்டும் எனப் பொருள்படும். சிந்தனை நலமாக மாறும்போது அதிலிருந்து பிறக்கின்ற செயல் நலமாக இருக்கும். செயல் நலமாகும்போது அது பிறருக்கு நலம் பயக்கும். மனம் உள்ளிருந்து செயலாற்றும் சக்தி. எனவே மனம் மாறும்போது நம்மில் உள்ளார்ந்த மாற்றம் ஏற்படும். உள்ளத்தில் புத்துணர்ச்சி ஏற்பட வேண்டும்; உள்ளம் கடவுளிடம் திரும்பவேண்டும்; தீமையை எண்ணுகின்ற போக்கு மறைந்து நன்மையை நாடுகின்ற வேட்கை வளர வேண்டும். இவ்வாறு நாம் மனம் மாறினால் கடவுளின் ஆட்சியில் பங்கேற்க கடவுள் நமக்கு அருள்வார்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தைப் புதுப்பித்து உம்மை நாடிவர அருள்தாரும்.