யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-01-24

புனித பிரான்சிஸ் சலேசியார்


முதல் வாசகம்

ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்கக்கூடாது.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 24: 2-20

அந்நாள்களில் சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார். அவர் சென்றபோது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்; அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்கைக்கடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர். தாவீதின் ஆள்கள் அவரிடம், � `இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன்; உன் விருப்பத்திற்கேற்ப அவனுக்குச் செய்,� என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே!� என்றனர். உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார். தாவீது சவுலின் தொங்கலை அறுத்தபின் அதற்காக மனம் வருந்தினார். அவர் தம் ஆள்களைப் பார்த்து, �ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர்மேல் கை வைக்கக் கூடாது� என்றார். ஆதலின் தம் ஆள்கள் சவுலைத் தாக்காதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு சவுல் எழுந்து குகையை விட்டுத் தம் வழியே சென்றார். அதன் பின் தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின்தொடர்ந்து, �அரசே, என் தலைவரே!� என்று அழைத்தார். சவுல் பின்புறம் திரும்பியபோது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார். பின்பு தாவீது சவுலை நோக்கி, � �தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான்� என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளை நீர் கேட்கலாமா? இதோ! குகையில் ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று உம் கண்களே கண்டன; உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்; ஆனால், �அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்; என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது� என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன். என் தந்தையே, பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லை என்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. உமக்கும் எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! என் பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்; ஆனால் உமக்கெதிராக என் கை எழாது. முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, �தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்�. ஆதலால் உம்மேல் நான் கைவைக்க மாட்டேன். இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின்தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ? ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்னை விடுவிப்பாராக!� என்றார். தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தபின் சவுல், �என் மகன் தாவீதே! இது உன் குரல்தானா?� என்று சொல்லி உரத்த குரலில் அழுதார். அவர் தாவீதிடம், �நீ என்னிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; ஆனால் நானோ உனக்குத் தீங்கு செய்தேன். ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய். ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக் கண்டபின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்கு ஈடாக, ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக! இதோ, நீ திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்றும் இப்பொழுது நான் அறிகிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்.
திருப்பாடல் 57: 1. 2-3. 5,10

1 கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன். பல்லவி

2 உன்னதரான கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன். 3 வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்; என்னை நசுக்குவோரை இழிவுபடுத்துவார். கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார். பல்லவி

5 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக! 10 ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப் பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19

இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார். அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் `இடியைப் போன்றோர்' எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் - அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அப்பொழுது இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார்'' (மாற்கு 6:7)

இயேசுவின் பணியைத் தொடர்வது அவருடைய சீடர்களின் கடமை. இயேசு எந்த உண்மையைப் பறைசாற்றினாரோ அதே உண்மையை வருங்காலத் தலைமுறையினரும் அறிந்து, கடவுளிடமும் அவர் அனுப்பிய திருமகனிடமும் நம்பிக்கை கொள்ளும் விதத்தில் நற்செய்திப் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். இயேசு பன்னிரு திருத்தூதரையும் தம்மிடம் அழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பினார் என மாற்கு விவரிப்பது தொடக்க காலத் திருச்சபையில் நிலவிய வழக்கத்தை நம் கண்முன் கொணர்கிறது. யூத வழக்கப்படி, ஒரு நிகழ்ச்சி குறித்து சாட்சி பகர இருவர் தேவை. எனவே, இருவர் இருவராகச் சென்று கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் தாங்கள் அறிவித்த செய்தி உண்மையே எனச் சான்று பகர்ந்தார்கள். மேலும், நற்செய்தி அறிவிக்கச் செல்வோர் எளிய வாழ்க்கைமுறையைத் தழுவ வேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது. பன்னிரு திருத்தூதரும் இயேசுவின் பணியைத் தொடர்ந்தார்கள். எனவேதான் அவர்கள் ''மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்'' (மாற் 6:12).

இயேசு அறிவித்த நற்செய்தியை ஏற்போர் வாழ்க்கையில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். மன மாற்றம் என்பது மனிதரின் உள்ளத்தின் ஆழத்தில் வேரோட்டமான விதத்தில் நிகழ்கின்ற ஒன்று. உள்ளார்ந்த விதத்தில் நிகழ்கின்ற மாற்றம் கண்ணோட்டங்களையும் பாhர்வைகளையும் மாற்றியமைக்கும். அப்போது நம் வாழ்க்கை முறையும் மாற்றம் பெறும். இவ்வுலகும் ஆங்கே செயலாற்றும் கடவுளின் உடனிருப்பும் நம் உள்ளத்தில் புதிய முறையில் தோன்றும். கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கின்ற அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு, அவரை நம்பிக்கையோடு அணுகிட நாம் முன்வருவோம். நம் உள்ளத்திலும் வாழ்விலும் மாற்றம் ஏற்படும்போது நாம் பிறருடைய வாழ்விலும் மாற்றம் நிகழ வேண்டும் என்னும் குறிக்கோளைச் செயல்படுத்த ஊக்கத்தோடு ஈடுபடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் வழியாக எங்களுக்கு நீர் வழங்கிய உண்மைக்கு நாங்கள் உறுதியான உள்ளத்தோடு சான்று பகர அருள்தாரும்.