யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் வியாழக்கிழமை
2014-01-23


முதல் வாசகம்

என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 6-9;19: 1-7

அந்நாள்களில் தாவீது பெலிஸ்தியனைக் கொன்றபின், வீரர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலைச் சந்திக்க வந்தனர்; அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர். அப்பெண்கள் அப்படி ஆடிப்பாடுகையில், �சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்� என்று பாடினர். இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை; அவர் மிகவும் சினமுற்று, �அவர்கள் �தாவீதுக்குப் பதினாயிரம் பேர்� என்றனர். எனக்கோ �ஆயிரம் பேர் மட்டுமே� என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்றுதான்!� என்று கூறினார். அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கண்கொண்டு பார்க்கலானார். தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தம் மகன் யோனத்தானிடமும் தம் அலுவலர் எல்லாரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதின்மீது மிகுதியான அன்பு கொண்டிருந்தார். ஆதலால் தாவீதைப் பார்த்து யோனத்தான், �என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார்; ஆதலால் எச்சரிக்கையாய் இரு, காலையிலேயே புறப்பட்டு மறைவான ஓர் இடத்திற்குச் சென்று ஒளிந்து கொள். நீ வெளியில் இருக்கும் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்து கொண்டு, உன்னைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்; அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன்� என்றார். யோனாத்தான் தாவீதைப்பற்றித் தம் தந்தை சவுலிடம் நல்ல விதமாகப் பேசி, �அரசர் தம் அடியான் தாவீதின் பொருட்டுப் பாவம் செய்ய வேண்டாம்; ஏனெனில் அவன் உமக்குத் தீங்கு ஏதும் செய்ததில்லை; மேலும் அவனுடைய செயல்கள் உம் அரசில் மிகவும் பயனுடையனவாய் இருந்தன; அவன் தன் உயிரை ஒரு பொருட்டாய் எண்ணாது அப்பெலிஸ்தியனைக் கொன்றான்; அதனால் ஆண்டவர் இஸ்ரயேலர் எல்லாருக்கும் பெரும் வெற்றியை அளித்தார். நீர் அதைக் கண்டுமகிழ்ச்சியுற்றீர்;அப்படியிருக்க எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற இரத்தத்திற்கு எதிராக நீர் ஏன் பாவம் செய்ய வேண்டும்?� என்று கூறினார். சவுல் யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார்; அதனால் சவுல், �வாழும் ஆண்டவர்மேல் ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான்� என்றார். பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவருக்குக் கூறினார்; மேலும் யோனத்தான் தாவீதைச் சவுலிடம் அழைத்துச் செல்ல, முன்பு போலவே தாவீது அவரது பணியில் ஈடுபட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளையே நம்பியுள்ளேன்; எதற்கும் நான் அஞ்ச மாட்டேன்.
திருப்பாடல் 56: 1-2. 8-9. 10. 11-12

1 கடவுளே, எனக்கு இரங்கியருளும்; ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்; அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர். 2 என் பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்துகின்றனர்; மிகப் பலர் என்னை ஆணவத்துடன் எதிர்த்துப் போராடுகின்றனர். பல்லவி

8 என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா? 9யb நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர். பல்லவி

10 கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; ஆண்டவரின் வாக்கை நான் புகழ்கின்றேன். பல்லவி

11 கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்? 12 கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-12

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத்திலிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர். மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார். ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந் தனர். தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ``இறைமகன் நீரே'' என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்'' (மாற்கு 3:10)

நோயுற்ற மக்களுக்கு இயேசு குணமளித்ததை மாற்கு நற்செய்தி விரிவாக எடுத்துரைக்கிறது. இயேசுவின் பணியில் மிக முக்கியமான கூறு அவர் மக்களுக்கு நலமளித்ததே என உறுதியாகக் கூறலாம். அவரைத் தேடி நலம் பெற வந்த மனிதர் தம்மில் குறையிருப்பதை உணர்ந்தனர். எனவே, தங்களுடைய குறையை நீக்கி நிறைவளிக்க வல்லவர் இயேசு என அவர்கள் நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. நம்மில் குறையிருப்பதை நாம் கண்டுகொள்ளத் தவறினால் அக்குறையிலிருந்து விடுபடுவதற்கான எண்ணமே நம்மில் எழாது. ஆனால் இயேசுவைத் தேடி வந்த மக்கள் இயேசுவின் வல்லமையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இயேசுவை அணுகிச் சென்று, அவரை நேரடியாகச் சந்தித்து அவரோடு உரையாட வேண்டும் என்னும் ஆவல் பலரிடம் இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், எப்படியாவது இயேசுவைத் தொட்டுவிட்டால் போதும் தங்களுக்கு நலம் கிடைக்கும் என மக்கள் நினைத்தனர்.

இவ்வாறு இயேசுவைத் தொட்டதும் தங்களுக்கு நலம் கிடைக்கும் என மக்கள் நம்பியது முழு நம்பிக்கையின் வெளிப்பாடு எனக் கூறுவதற்கில்லை. எனினும் நம்பிக்கையின் தொடக்கம் அங்கே உள்ளது எனலாம். நம்பிக்கை என்பது உள்ளத்தில் உறுதியான பிடிப்புக் கொண்டு, கடவுளைப் பற்றிக்கொள்வதில் அடங்கும். இத்தகைய பற்றுறுதி மக்களிடம் இருந்ததால் அவர்களுக்குக் கடவுள் இயேசு வழியாக நலம் அளித்தார். ஆனால் இயேசு வழங்கிய நலன் உடலைச் சார்ந்தது மட்டுமல்ல, உள நலமும் ஆன்ம நலமும் இயேசு நமக்குக் கொடையாக அளிப்பதே. இயேசுவைத் தொடவும் அவரால் தொடப்படவும் வேண்டும் என்றால் நாமும் அவரை அணுகிச் செல்ல வேண்டும். அப்போது நாம் கடவுளின் வல்லமையை நம் வாழ்வில் உணர்ந்தறிவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களைத் தொட்டு நலமாக்கியருளும்.