திருவழிப்பாட்டு ஆண்டு A (29-12-2013)

யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்/> யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்/> யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்/>


திருப்பலி முன்னுரை

இறையேசுவில் அன்புநிறை இறைமக்களே!

இன்றைய இறைவாக்கு, திருக்குடும்பத்தைப் பற்றி நமக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. திருக்குடும்பம் என்பது பூமியின் மேல் கற்களாலும், மண்ணாலும், மனிதனால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு கட்டிடம் அல்ல. மாறாக குடும்பம் என்றால் அவ்வீட்டில் வசிக்கும் ஒவ்வொரு அங்கத்தினர்களிடையே உள்ள இறையன்பு-பிறரன்பு, பண்பு, பாசம் மற்றும் ஒருவரை ஒருவர் மன்னிக்கும் தன்மை இவற்றைப் பொறுத்துள்ளது. குடும்பம் இன்றி எந்த ஒரு சமுதாயமோ அல்லது நாடோ செயல் பட முடியாது. தந்தை, தாய், பிள்ளைகள் சேர்ந்துதான் குடும்பம் என்று கூறுகின்றோம்.

தாயாம் திருச்சபை இன்று திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடுவதன் காரணம் என்னவென்றால் உலகிலுள்ள அத்தனைக் குடும்பங்களுக்கும் முன்மாதிரியான உன்னதக் குடும்பம் ஒன்று சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாசரேத்தூரில் வாழ்ந்து காட்டியது என்று எடுத்துக் காட்டாத்தான். அந்தக் குடும்பம்தான் இயேசு, மரியாள், சூசையப்பர் வாழ்ந்த திருக்குடும்பம்.

நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவையனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். என்னும் இறைவனின் குரலை அவை எடுத்துரைக்கின்றன. இந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிப்போர்: உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்: உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! என்னும் உயர்ந்த ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்கின்றார். எனவே நாம் நம்முடைய குடும்ப வாழ்வைச் சீர்தூக்கிப்பார்த்து, இறைவனுக்குகந்த குடும்பங்களாய் வாழ அருள் வேண்டிச் செபிப்பதோடு, இன்று தங்கள் சபையின் திருவிழாவைக் கொண்டாடும் திருக்குடும்பச் சபை அருட்சகோதரிகளுக்காகவும் மன்றாடுவோம்.முதல் வாசகம்

ஆண்டவருக்கு அஞ்சுகிறவன் தாய் தந்தையரை மதிக்கிறான்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3:2-7, 12-14

பிள்ளைகளைவிடத் தந்தையரை ஆண்டவர் மிகுதியாக மேன்மைப் படுத்தியுள்ளார்; பிள்ளைகள்மீது அன்னையர்க்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார். தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டிவைப்போருக்கு ஒப்பாவர். தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்; அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்; ஆண்ட வருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர். தலைவர்கள் கீழ்ப் பணியாளர்கள்போல் அவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பணி செய்வார்கள். குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு; அவரது வாழ்நாளெல்லாம் அவரது உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி; நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக் காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறு பெற்றோர்!
திருப்பாடல் 128: 1-2. 3. 4-5

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனி தரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப்போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக. பல்லவி

இரண்டாம் வாசகம்

ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-21

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கு இசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள். கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும். திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள். பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-15,19-23

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, �நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்'' என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, �எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, �நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்'' என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு, அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, � `நசரேயன்' என அழைக்கப்படுவார்'' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக!!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இறைவாக்கினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தந்தையே இறைவா!

நீர் இவ்வுலகில் எமக்கு இறைவாக்குரைத்துப் பணிசெய்யத் தந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் திருமுழுக்கு யோவானைப் போல வலிமையும், சக்தியும், மாற்றமும் மனப்பக்குவமும் பெற்று, இறைமக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணியை இக்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய ஞான ஒளியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருள் வளங்களின் ஊற்றே இறைவா!

குடும்பங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாங்கள் ஒவ்வொருவரும் பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் எங்களை அணிசெய்து; ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொண்டு. ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் நீர் எங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னித்து நற்செயல்களில் ஆர்வமுள்ள உமக்குரிய தூய குடும்பங்களாக வாழவு வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

நீர் எமக்களித்த பெற்றோருக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். நாங்கள் எங்கள் பெற்றோரை மதித்து, அவர்களைப் புண்படுத்தாது, அவர்களை மேன்மைப்படுத்தி வாழ வேண்டிய அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சிய+ட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!அன்புத் தந்தையே இறைவா! பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், கண்ணீரோடும் வாழும் அனைத்து குடும்பங்கள் மீதும் மனமிரங்கி அவர்கள் உண்மையான மனமாற்றம் பெற்று, கணவன், மனைவி ஆகியோர் ஒப்புரவாகி ஆதிக் கிறீஸ்தவ வாழ்வை வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய சிந்தனை

எகிப்துக்கு போவோம்.. அஞ்ச வேண்டாம்

உங்கள் வாழ்வில் சிக்கல்கள்; சிரமங்கள், விபத்துக்கள் ஆபத்துக்கள் வரும்போது, இயேசு எகிப்துக்குச் சென்றதை நினைவு கூறுங்கள். அகதியாக அலைய நேரிடும்போது, வீட்டை காலிசெய்ய உரிமையாளர் வற்புறுத்தும்போது இயேசுவின் எகிப்து பயணத்தை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளமும் வரட்சியும் உங்களை வேறு இடங்களுக்கு விரட்டியடிக்கும்போது இப்பகுதியை வாசியுங்கள்.

உங்கள் வாழ்வின் இந்த எகிப்து தங்கல்கள் உங்களுக்கு உயர்வையும் எழுச்சியும் தரும் காலமாக அமையலாம். இப்படிதான் இஸ்ராயேல் மக்களுக்கு எகிப்து பஞ்சத்தில் பாதுகாப்பளிக்கும் புகலிடமாக அமைந்தது.( வாசிக்க தொ.நூ 42-50) அதுபோல, குழந்தை இயேசுவுக்கும் எகிப்துப் பயணம் புதிய எழுச்சியைக் கொடுத்தல் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. எகிப்து அனுபவங்கள் வரும்போது சோர்ந்து போகாதீர்கள்.

எகிப்து பயணத்தில் உங்களுக்கு நல்ல அனுபவமும் அருளும் உள்ள ஒருவரின் துணை கிடைக்கும். எனவே இத்தகு வேளைகளில் மனம் உடைந்து போக வேண்டாம். ஆமாம். அந்த நல்லவர், நேர்மையாளர், அனுபவசாலி வேறு யாருமல்ல. யோசேப்பு. எகிப்தின் யோசேப்பு, பஞ்சத்தில் இஸ்ராயேல் குலத்தை காத்தார். ஏரோதின் மிரட்டலிலிருந்து குழந்தை இயேசுவையும் அன்னை மரியாவையும் பாதுகாத்தார். உங்களையும் பாதுகாக்க யோசேப்பு காத்திருக்கிறார். உங்கள் வாழ்வின் எகிப்து சூழல்கள் குருக்கிடும்போது துணிவோடு செல்லுங்கள். எகிப்து அனுபவங்கள் குருக்கிடுவதை தவிர்க்கமுடியாது. ஆனால் யோசேப்பு உங்களுக்காக அங்கே இருப்பார். நம்பிக்கையோடு துணிவோடு செல்லுங்கள். வருங்காலம் வளமாக இருக்கும்.

மன்றாட்டு:

இறைவா, எம் வாழ்க்கைப் பயணத்தில் எங்களோடு இருந்து வழிநடத்தியருளும்.