யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 3வது வாரம் புதன்கிழமை
2013-12-18


முதல் வாசகம்

நீதியுள்ள `தளிர்' தாவீதுக்குத் தோன்றுவார்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 23: 5-8

ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள `தளிர்' தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். `யாவே சித்கேனூ' - அதாவது `ஆண்டவரே நமது நீதி' - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும். ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது, `எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை' என்று எவரும் சொல்லார். மாறாக, `இஸ்ரயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை' என்று கூறுவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.
திருப்பாடல் 72: 1-2. 12-13. 18-19

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி

18 ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி! அவர் ஒருவரே வியத்தகு செயல்களைப் புரிகின்றார்! 19 மாட்சி பொருந்திய அவரது பெயர் என்றென்றும் புகழப் பெறுவதாக! அவரது மாட்சி உலகெல்லாம் நிறைந்திருப்பதாக! ஆமென், ஆமென். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தாவீதின் மகனான யோசேப்புக்கு மண ஒப்பந்தமான மரியாவிடமிருந்து இயேசு பிறப்பார். � அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-24

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, �யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார். �இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''ஆண்டவரின் தூதர், 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்...' என்றார்'' (மத்தேயு 1:20-21)

இயேசு என்னும் பெயர் எபிரேய மொழியில் ''யோசுவா'' என்பதாகும். அதற்கு ''யாவே மீட்கிறார்'' என்பது பொருள். இயேசுவின் வழியாகக் கடவுள் நம்மைப் பாவத்திலிருந்தும் எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுவிக்கிறார். நமக்கு விடுதலையும் மீட்பும் வழங்குகின்ற இயேசுவை உலகில் மனிதராகப் பெற்றளித்த அன்னை மரியாவை நாம் மனதாரப் போற்றிப் புகழ்வது பொருத்தமே. இயேசு உண்மையிலேயே கடவுளும் மனிதரும் ஆவார். இந்த உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்வது நம் குறுகிய அறிவுத் திறனுக்கு அப்பாற்பட்டது. ஆனால் கடவுள் நமக்கு இந்த உண்மையை இயேசு வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாமும் கடவுளின் வார்த்தையை நம்பி அந்த உண்மையை ஏற்கிறோம். மனிதராகப் பிறந்த இயேசுவின் ''மூதாதையர் பட்டியல்'' மத்தேயு நற்செய்தியின் தொடக்கமாக அமைந்துள்ளது. நம் காதுகளில் விசித்திரமாக ஒலிக்கின்ற பெயர்களைக் கொண்ட இந்த நீண்ட பட்டியலை மத்தேயு பதிவு செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அதாவது, இயேசு உண்மையிலேயே தாவீதின் வழித்தோன்றலாக வந்து பிறந்தார் என்பதை மத்தேயு நிலைநாட்டுகிறார். அக்கால வழக்கப்படி, ஆண்களின் குல வரிசை மட்டுமே தரப்பட்டுள்ளது. இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு தாவீதின் வழி வந்தவர். எனவே, சட்ட முறைப்படி யோசேப்பு இயேசுவின் தந்தையாகக் கருதப்பட்டார். ஆயினும் இயேசு உண்மையிலேயே தூய ஆவியின் வல்லமையால் மரியாவின் வயிற்றில் கருவாக உருவானார் என மத்தேயு குறிக்கின்றார். கடவுளின் தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ''யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்'' என அறிவிக்கின்றார் (மத் 1:20).

மரியா இயேசுவின் தாய். அதே நேரத்தில் இறைவன் மரியாவைக் கன்னிமை குன்றாமல் காத்தார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. எனவே, மரியாவுக்குச் சிறப்பு வணக்கம் செலுத்துவது கிறிஸ்தவ மரபு. இந்த வணக்கம் கடவுளுக்கு நாம் அளிக்கின்ற ஆராதனைக்கு நிகராகாது. ஏனென்றால் கடவுள் நம்மைப் படைத்துக் காத்து, நம்மைப் பாவத்திலிருந்து மீட்கின்றவர். அவரிடமிருந்தே நாம் புறப்படுகிறோம்; அவரை நோக்கியே நம் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது; அவரே நம் இறுதி கதியாக இருப்பவர். இத்தகைய வல்லமை மிக்க கடவுள் மரியாவைத் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்தார்; அவரைத் தம் திருமகனின் தாயாக நியமித்தார். மரியாவும் இறைத்திட்டத்திற்கு ஏற்ப தம்மையே முழுமையாக இறைவனிடம் கையளித்தார். இவ்வாறு நமக்கு ஓர் முன் உதாரணமானார். இயேசுவின் தாய் நம் தாயாகவும் இருக்கிறார். அதாவது, இயேசுவை நம்பி ஏற்போரை உள்ளடக்கிய சமூகமாகிய திருச்சபைக்கு அன்னை அவர். மரியாவுக்குக் கடவுள் அளித்த மாட்சியையும் மகிமையையும் நமக்கும் வாக்களிக்கின்ற கடவுள் தம் திருமகன் இயேசு வழியாக நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கின்றார். இந்த உண்மையை மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்திலும் இறுதியிலும் நாம் காண்கின்றோம். அவரே ''இம்மானுவேல்'' (''கடவுள் நம்மோடு இருக்கிறார்'' என்பது அதன் பொருள் - மத் 1:23). ''இதோ, உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என அவர் நமக்கு வாக்களித்துள்ளார் (காண்க: மத் 28:20).

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் வழியாக நீர் எங்களோடு எந்நாளும் தங்கியிருக்கும் அருள்செயலுக்கு நன்றி!