யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-12-13

புனித லூசியா


முதல் வாசகம்

என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப்போலும், உன் வெற்றி கடல் அலை போலும் பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித் தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப் பட்டிராது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
திருப்பாடல்1: 1-2. 3. 4,6

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை. � அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: �இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, `நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை' என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ `அவன் பேய் பிடித்தவன்' என்கிறார்கள். மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, `இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு, 'மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார். இவர்களோ, 'இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள்' என்றார்'' (மத்தேயு 11:19)

சிறு பிள்ளைகள் விளையாடுவது இயேசுவின் வாயில் ஓர் உவமையாக உருவெடுக்கிறது. குழல் ஊதினால் கூத்தாட வேண்டும்; ஒப்பாரி வைத்தால் மாரடித்துப் புலம்ப வேண்டும். இதுதான் விளையாட்டு ஒழுங்கு. ஆனால் ஒரு தரப்பினர் குழல் ஊதும்போது மறு தரப்பினர் கூத்து ஆடாவிட்டால் அங்கே இருதரப்பினருக்கிடையே புரிதல் இல்லை என்பதே பொருள். திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் தோன்றி, ஒட்டக மயிராடை அணிந்து, காட்டுத்தேனும் வெட்டுக்கிளியும் உண்டவராக வந்தார் (மத் 3:1-4). அவருக்குப் பேய்பிடித்துவிட்டது என்று கூறி அவரை ஏற்க மறுத்தார்கள். இயேசுவோ விருந்துகளில் கலந்துகொண்டு மக்களோடு உணவருந்தியவராக வந்தார். அவரைப் பார்த்து, ''பெருந்தீனிக்காரன், குடிகாரன்'' என்றெல்லாம் குறை கூறி ஏற்க மறுத்தார்கள் (மத் 11:19). இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்ட மக்களைக் கண்டு இயேசுவுக்கு ஆத்திரம் வருகிறது. அம்மக்கள் காலத்தின் அறிகுறிகளைக் கண்டு உணர்ந்து, கடவுள் அவர்களுக்கு அறிவித்த செய்தியைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என இயேசு வருத்தம் கொள்கிறார்.

இன்றும் கூட இந்நிலை மாறவில்லை என்றுதான் கூற வேண்டும். இயேசு உலகுக்கு அறிவித்த செய்தி என்னவென்பதை அறிந்துகொள்ள மறுக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் காட்டுகின்ற காரணங்கள் பல. இயேசு அறிவித்த செய்தி வேறு சமயங்களிலும் இருக்கிறதே என்பது ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது. இயேசுவின் போதனைப்படி கிறிஸ்தவர்கள் நடக்கிறார்களா என்றொரு கேள்வியைக் கேட்போர் இருக்கின்றார்கள். இந்நிலையில் இயேசுவை நாம் இருபத்தோராம் நூற்றாண்டு மன நிலைக்கு ஏற்ப அறிவிப்பது எப்படி என்பது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. பிற சமயங்களில் தலைசிறந்த போதனைகள் உண்டு என்பதை நாம் மறுக்கமுடியாது. அதுபோலவே, உலகில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இயேசுவின் போதனைப்படி நடக்கிறார்கள் எனவும் கூற இயலாது. ஆனால் இக்காரணங்களைக் காட்டி இயேசு பற்றி அறிய மறுப்பது சரியல்ல. உலகில் வாழ்ந்த மாபெரும் மனிதருள் ஒருவர் இயேசு. அவர் அறிவித்த செய்தியைக் கேட்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட பல்லாயிரம் மக்கள் வரலாற்றில் வாழ்ந்திருக்கின்றார்கள். எனவே, இயேசு அறிவிக்கின்ற செய்தி என்னவென்று அறிகின்ற பொறுப்பு எல்லாருக்குமே உண்டு. அதே நேரத்தில் பல கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனையைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி அப்போதனையை ஒதுக்கிவைப்பதும் முறையல்ல. திறந்த உள்ளத்தோடு இயேசுவை அணுகிச் சென்று, அவர் அறிவிக்கின்ற செய்தியைக் கேட்க தங்கள் இதயத்தைத் திறக்கின்ற மனிதர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். இயேசுவின் ஒளி அவர்களது உள்ளத்தில் நிலவும் இருளை அகற்றி அவர்களது வாழ்வை ஒளிமயமானதாக மாற்றும் என்பது உறுதி.

மன்றாட்டு:

இறைவா, திறந்த உள்ளத்தோடு உம்மை அணுகிவர எங்களுக்கு அருள்தாரும்.