யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 2வது வாரம் புதன்கிழமை
2013-12-11


முதல் வாசகம்

எல்லாம் வல்ல ஆண்டவர் �சோர்வுற்றவருக்கு'' வலிமை அளிக்கின்றார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31

`யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?' என்கிறார் தூயவர். உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை. "என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை'' என்று யாக்கோபே, நீ சொல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
திருப்பாடல்103: 1-2. 3-4. 8,10

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். � அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: �பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

‘இயேசு, ‘பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்றார்’’ (மத்தேயு 11:28)

இயேசு கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஞானத்தைத் தம் சீடர்களோடு பகிர்ந்துகொள்கிறார். அவர் கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டிருந்ததால் கடவுளை நமக்கு வெளிப்படுத்துகிறார். கடவுளறிவை நாம் இயேசு வழியாகப் பெற்றுக்கொள்கிறோம். இந்த அறிவை நமக்கு அளிக்க விரும்புகின்ற இயேசு நம்மைப் பார்த்து, ‘‘பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்’’ என அன்போடும் கரிசனையோடும் அழைக்கின்றார். சீராக் நூலில் இத்தகையதோர் அழைப்பு உளது. கடவுளைப் பற்றி ஆழ்ந்த அறிவைப் பெற நம்மை ஞானம் அழைக்கின்றது: ‘‘என் அருகே வாருங்கள்; நற்பயிற்சியின் இல்லத்தில் தங்குங்கள்’’ (சீராக் 51:23). இயேசு கடவுளின் ஞானம் என்பதால் அவரை அணுகிச் செல்வோருக்குக் கடவுளறிவு கிடைக்கும். அது பெரும் சுமையாக இராது. இயேசுவின் காலத்தில் மறைநூல் அறிஞர் போன்றோர் மக்களின் தோள்களில் பெருஞ்சுமைகளை ஏற்றிவிட்டிருந்தனர். சட்டம் என்பது தாங்கவியலா சுமையாயிற்று. ஆனால் இயேசுவின் போதனை என்னும் நுகம் எளிதானது, இனிமையானது. இயேசு நமக்கு இளைப்பாறுதல் தருகின்றார். ஓய்வு நாள் என்பதன் உண்மைப் பொருளை இயேசு நமக்கு உணர்த்துகிறார். கடவுள் பற்றிய அறிவைப் பெற்று, கடவுளின் இதயத்தில் நாம் ஓய்வு கொள்வதே இயேசு நமக்கு வாக்களிக்கின்ற இளைப்பாறுதல். -- மனிதர் தாங்கவியலா சுமைகள் பலவற்றைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. இயற்கைச் சீற்றத்தால் ஏற்படுகின்ற அழிவுகள் ஒருபுறம், மனிதர் மனிதப்பண்பின்றி நடந்துகொள்வதால் ஏற்படுகின்ற சுமைகள் மறுபுறம் என்று நம்மை வாட்டுகின்ற சுமைகளின் பளுவைக் குறைக்க இயேசு வருகிறார். அவரோடு சேர்ந்து நாமும் சிலுவையைச் சுமந்தால் அது இனிய சுமையாக மாறிவிடும். ஓய்வில்லாத இதயத்தை நமக்குத் தந்த கடவுள் நாம் அவரிடத்தில் ஓய்வுபெற வேண்டும் என்றே நம்மைப் படைத்துள்ளார் என தூய அகுஸ்தீன் அழகாகக் கூறுகிறார். இயேசுவை நாம் அணுகிச் சென்றால் நம் சுமைகள் எளிதாகிவிடும்; நம் உள்ளமும் ஆறுதலைக் கண்டடையும்.

மன்றாட்டு:

இறைவா, இயேசுவிடத்தில் துலங்கிய கனிவும் பணிவும் எங்கள் வாழ்வில் ஒளிர்ந்திட அருள்தாரும்.