யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 1வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-12-03

புனித சவேரியார்


முதல் வாசகம்

ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் `புகழ்' என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். `நேர்மையின் தேவதாருகள்' என்றும் `தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை' என்றும் அவர்கள் பெயர் பெறுவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!
திருப்பாடல்117: 1. 2

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி

இரண்டாம் வாசகம்

, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23

சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப் பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மன நிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம்கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக்கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20

அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றி, ``உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்'' என்று கூறினார். இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும்அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

தாழ்ச்சியின் உயர்வு

இறுதி நாள் அல்லது ஆண்டவரின் நாள் இவைபற்றிய வெளிப்பாடுகள் யாருக்கும் புலப்படுவதில்லை. மூவொரு இறைவன் ஒருவரே அறிவார். ஆண்டவரின் நாளில் இம்மூவொரு இறைவனின் மாட்சியும் மகிமையும் வெளிப்படுவதை எல்லோராலும் காண முடியாது. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அருளில் நிறைந்தவர்கள் மட்டுமே அந்த காட்சியைக் காண முடியும்.

ஆகவே நம் இறுதி நாளில் இறை மாட்சியைக் காண தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும். அதன் அடையாளம் குழந்தையின் தாழ்ச்சி நிறைந்த உள்ளம். ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்துவதன் காரணம் இதுவே. எனவே தூய ஆவியால் நிறைந்து, குழந்தை உள்ளம் கொண்டு வாழ்ந்தால், எல்லா இறை வெளிப்பாடுகளுக்கும் உரியவராவோம்.

இதற்கு அருமையான சான்று நம் அன்னை மரியாள். அருளில் நிறைந்தவள். தாழ்நிலைநின்ற அடிமை. ஆகவே இறைவனின் தாயானாள். அடுத்து இயேசுவின் சீடர்கள் இவ்வுயவைப் பெறுகின்றனர் என்பதை இப்பகுதியில் அறிகிறோம். நாமும் தூய ஆவியால் நிறைந்து, குழந்தை உள்ளம் கொண்டு அன்றாட வாழ்வில் தாழ்த்தி எளிய வாழ்க்கை வாழ்ந்தால் இறை மாட்சியைக் காணும் பேறு பெறுவோம். இவ்உன்னத நிலைபெற செபிப்போம். மகிமையைக் காண்போம்.

மன்றாட்டு:

இறைவா, தகுதியற்ற எங்களை உம் பிள்ளைகளாக நீர் ஏற்றதற்கு நன்றி.