யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-11-22


முதல் வாசகம்

புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள்.
மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 36-37, 52-59

அந்நாள்களில் யூதாவும் அவருடைய சகோதரர்களும், ``நம் பகைவர்கள் முறியடிக்கப் பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்'' என்றார்கள். எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச் சென்றார்கள். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து, தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள். வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது. அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின. எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்; பலிபீட அர்ப்பணிப்பு விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்; பொன் முடிகளாலும் குமிழ்களாலும் கோவிலின் முகப்பை அணி செய்து, வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள். மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள் வரை அக்களிப்போடும் அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

மாட்சிமிகு உம் பெயரைப் போற்றுகிறோம் ஆண்டவரே
1 குறி 29: 10-12

10 எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப்பெறுவீராக! பல்லவி

11ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. பல்லவி

11உன ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப்பெற்றுள்ளீ செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. பல்லவி

12 நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம் கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், `` `என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்'' என்று கூறினார். இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

"'என் இல்லம் இறைவேண்டலின் வீடு' ... ஆனால் நீங்கள் இதைக் கள்வரின் குகையாக்கினீர்கள்'' (லூக்கா 19:46)

இயேசு எருசலேம் கோவிலுக்குச் சென்று அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோரைத் துரத்தியடித்தார் என்னும் செய்தி நான்கு நற்செய்தி நூல்களிலும் உண்டு. இருப்பினும், லூக்கா நற்செய்தியில் இந்நிகழ்ச்சி பற்றி வருகின்ற சில குறிப்புகள் கவனித்தக்கன. இந்நிகழ்ச்சியை லூக்கா மிகச் சுருக்கமாகவே தருகிறார். இயேசு சாட்டை பின்னி வியாபாரிகளை அடித்துத் துரத்தியதாகவோ, நாணயம் மாற்றுவோரின் மேசைகளைக் கவிழ்த்துப்போட்டதாகவோ லூக்கா கூறவில்லை. மாறாக, பண்டைக் கால இறைவாக்கினர்களாகிய எசாயா, எரேமியா என்பவர்கள் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த கருத்துக்களை எடுத்துக்காட்டுகிறார் இயேசு. கோவில் என்பது வழிபாட்டு இடம். அது ''இறைவேண்டல் வீடு'', அதாவது கோவிலுக்குச் செல்லும் மக்கள் கடவுளை நோக்கித் தம் மன்றாட்டுகளை எழுப்ப அங்கே செல்கிறார்கள் (காண்க: எசா 56:7). மாறாக, ''கள்வரின் குகை''யில் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்ற ''வியாபாரப் போக்கு'' நிலவும் (காண்க: எரே 7:11). கடவுளின் இல்லம் கள்வரின் குகையாக மாற்றப்படலாகாது என்று இயேசு கூறியதன் பொருள் என்ன?

கடவுளின் இல்லம் ஒரு புனிதமான இடம். அங்கே செல்கின்ற மக்கள் கடவுளைச் சந்தித்து இறையனுபவம் பெறும் நோக்கத்தோடுதான் போகிறார்கள். இறையனுபவம் என்பது கோவிலில்தான் கிடைக்கும் என்பது முழு உண்மையல்ல என்றாலும், கடவுளுக்கென்று ஒதுக்கிவைக்கப்பட்ட இடம் தனித்தன்மை வாய்ந்தது என்பதை யாரும் ஏற்றுக்கொள்வர். இடத்தின் புனிதம் அந்த இடத்தில் நாம் சந்திப்பவரின் புனிதத்தில் பங்கேற்கிறது. எனவே, இறைவனுக்கென்று குறிக்கப்பட்ட இடங்களை மரியாதையோடு அணுகுவது என்றுமே இருந்துவந்துள்ளது. கள்வரின் குகை என்றால் அங்கே நடக்கின்ற செயல்கள் முறைகேடானவை என்னும் பொருள் பொதிந்துள்ளது. கள்வர் கொள்ளையடித்த பணத்தையும் பொருளையும் பகிர்ந்துகொள்ளும் இடம் புனித இடத்திற்கு நேர்மாறானது. அக்குகையில் நீதி நேர்மை போற்றப்படும் என நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, இயேசு கடவுளின் இல்லத்தைத் தூய்மைப்படுத்தி அதை மீண்டும் கடவுளுக்கு உரிய இடமாக மாற்றுகின்றார். லூக்காவின் பார்வையில், இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தி, அதைத் தம் இடம் என உரிமைகொண்டாடுகிறார். ''இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்துவந்தார்'' (லூக்கா 19:47) எனக் கூறும் லூக்கா இயேசு தம் சொந்த இடமாக எருசலேம் கோவிலைக் கருதினார் என்பதைக் கோடிட்டுக்காட்டுகிறார். பகலில் கோவிலில் கற்பித்த இயேசு இரவில் ஒலிவ மலைக்குச் சென்று இறைவேண்டல் செய்வது வழக்கம் (காண்க: லூக் 22:39-42). மக்களுக்குப் பணிபுரிவது கடவுளோடு நாம் கொள்கின்ற ஆழ்ந்த உறவு என்னும் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதை இயேசு நமக்கு உணர்த்துகிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நோக்கி எங்கள் இதயங்களை எந்நாளும் எழுப்பிட அருள்தாரும்.