யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் வியாழக்கிழமை
2013-11-21

தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் நினைவு


முதல் வாசகம்

மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 10-13

மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன் என்கிறார் ஆண்டவர். அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்; நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள். ஆண்டவர் யூதாவைப் புனித நாட்டில் தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார். எருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார். மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாய் இருங்கள்; ஏனெனில் அவர்தம் புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

: என்றும் வாழும் தந்தையின் மகனைச் சுமந்த மரியே, நீர் பேறுபெற்றவர்.
லூக் 1: 47. 48-49. 50-51. 52-53. 54-55

47 ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. பல்லவி

48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். 49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். பல்லவி

50-51 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். பல்லவி

52-53 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். பல்லவி

54-55 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் சீடர் பக்கம் கையை நீட்டி, என் தாயும் சகோதரர்களும் இவர்களே என்றார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

அக்காலத்தில் மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, ``அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்'' என்றார். அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, ``என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?'' என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ``என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை'' (லூக்கா 19:44)

எருசலேம் நகர் யூதர்களுக்கு முக்கியமான இடமாக விளங்கியது. அங்கேதான் யூத மக்களின் தலைசிறந்த மன்னராக விளங்கிய தாவீது தம் தலைநகரை அமைத்திருந்தார். அங்குதான் சாலமோன் மன்னர் கடவுளுக்கு அழகியதொரு கோவில் கட்டியெழுப்பினார். யூத மக்களின் சமய-சமூக மையமாக விளங்கிய எருசலேம் நகருக்கு வெளியேதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார். எருசலேமுக்கு இயேசு எத்தனை தடவை சென்றார் என்பது பற்றித் தெளிவில்லை. எருசலேம் கோவிலுக்குள் நுழைந்து அங்கே வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோரை இயேசு விரட்டியடித்த செய்தியை எல்லா நற்செய்தி ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர் (காண்க: மத் 21:12-17; மாற் 11:15-19; லூக் 19:45-48; யோவா 2:13-22). அந்த நிகழ்ச்சிக்கு முன் இயேசு ''எருசலேமைப் பார்த்து அழுதார்'' (லூக் 19:41) என்னும் செய்தியை லூக்கா குறிப்பிடுகிறார். எருசலேம் நகரம் அழிந்துபடும் எனவும் இயேசு முன்னறிவிக்கிறார். இயேசு அறிவித்தபடியே, கி.பி. 70ஆம் ஆண்டில் தீத்து என்னும் உரோமை மன்னரின் படைகள் எருசலேமுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தன; பலர் நாடுகடத்தப்பட்டார்கள்; எருசலேம் கோவிலும் நகரமும் தரைமட்டாக்கப்பட்டன. இத்தகைய அழிவு ஏற்பட்டதற்குக் காரணம்? யூத மக்கள் நடுவே வந்த மெசியாவை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவேதான் எருசலேமை நோக்கி இயேசு, ''உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை'' என்றார்.

கடவுள் நம்மைத் தேடி வருகின்ற வேளைகளில் நாம் அவரைக் கண்டுகொள்ளத் தவறிவிடுகிறோம். நம் கண்கள் திறந்திருப்பதுபோலத் தோன்றினாலும் நாம் உண்மையிலேயே பார்வையற்றுப் போகிறோம். கடவுள் நம்மைத் தேடி வருவதை நாம் எப்படிக் கண்டுகொள்வது? கடவுள் நம்மைத் தேடி வருகிறார் என்பதன் முதல் பொருள் கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதே. நம்மிடம் இருக்கின்ற ஒரு பொருளை நாம் தேடிச் செல்வதில்லை. அதுபோல நாமும் கடவுளை நம் உள்ளத்தில் ஏற்கெனவே கொண்டுள்ளதால் அவரைத் தேடி வெளி உலகில் அலைய வேண்டியதில்லை. கடவுள் குடிகொள்ளாத மனிதர் யாரும் இல்லை. எனவே கடவுளை அறிய வேண்டும் என்றால் நாம் பிற மனிதரை அன்புசெய்து அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மைத் தேடி வருகின்ற கடவுள் உலக நிகழ்ச்சிகள் வழியாகவும் நம்மோடு பேசுகிறார். நமது நம்பிக்கை அனுபவத்தின் வழியாக அவர் நம்மை அணுகி வருகிறார். அவரைக் கண்டுகொள்ள வேண்டும் என்றால் நம்பிக்கை என்னும் நம் அகக்கண்களை நாம் அகலத் திறக்கவேண்டும். அப்போது அவருடைய வருகை நமக்கு மகிழ்ச்சியைக் கொணரும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களைத் தேடி வருகின்ற உம்மை அன்போடு எங்கள் உள்ளங்களில் ஏற்றிட அருள்தாரும்.