யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் சனிக்கிழமை
2013-11-16

புனித மார்கரீத்


முதல் வாசகம்

தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 14-16; 19: 6-9

எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில், எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு எழுந்து, அஞ்சா நெஞ்சம் கொண்ட போர் வீரனைப் போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் மீது வந்து பாய்ந்தது. உமது தெளிவான கட்டளையாகிய கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்று கொண்டு, எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது; மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்த போதிலும், விண்ணகத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. உம் பிள்ளைகள் தீங்கின்றிக் காக்கப்படும்படி, படைப்பு முழுவதும் உம் கட்டளைகளுக்குப் பணிந்து, மீண்டும் தன் இயல்பில் புத்துயிர் பெற்றது. அவர்களது பாசறைக்கு முகில் நிழல் கொடுத்தது. முன்பு தண்ணீர் இருந்த இடத்தில் பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று. செங்கடலினூடே தங்குதடை இல்லாத வழியும், சீறிப்பாயும் அலைகளினூடே புல்திடலும் உண்டாயின. உமது கைவன்மையால் காப்பாற்றப்பட்ட மக்கள் அனைவரும் அவ்வழியே கடந்து சென்றனர். உம்முடைய வியத்தகு செயல்களை உற்றுநோக்கிய வண்ணம் சென்றனர். குதிரைகளைப் போலக் குதித்துக் கொண்டும், ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக்கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!
திருப்பாடல்கள் 105: 2-3. 36-37. 42-43

2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! -பல்லவி

36 அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்; அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார். 37 அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்; அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை. -பல்லவி

42 ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். 43 அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8

அக்காலத்தில் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார் என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். பின் ஆண்டவர் அவர்களிடம், நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன்'' (லூக்கா 18:5)

இறைவேண்டலின் தேவை பற்றி இயேசு கூறிய உவமைகளில் ஒன்று ''நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்'' பற்றியதாகும் (காண்க: லூக்கா 18:1-8). லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற இந்த உவமையில் வருகின்ற கைம்பெண் நீதி கேட்டு நடுவரிடம் மீண்டும் மீண்டும் செல்கிறார். நடுவரோ அக்கைம்பெண்ணைப் பற்றி எள்ளளவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் கைம்பெண்களுக்கு எந்த ஒரு ஆதரவும் இருக்கவில்லை. கடவுளுக்கும் அஞ்சாமல், மனிதரையும் மதிக்காமல் நடக்கின்ற நடுவர் அக்கைம்பெண்ணின் வேண்டுகோளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றார். ஆனால் அப்பெண் எளிதில் விடுவதாக இல்லை. நடுவரை அணுகிச் சென்று எப்படியாவது தனக்கு நீதி வழங்கவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கிறார். தொல்லை பொறுக்கமுடியாமல், இறுதியில் நடுவரின் மனமும் இளகுகிறது. அப்பெண் கேட்டவாறே அவருக்கு நீதி வழங்குகிறார் நடுவர்.

இயேசு இந்த உவமையைக் கூறிய பிறகு, கடவுளை நோக்கி நாம் வேண்டுவது எத்துணை இன்றியமையாதது என விளக்குகிறார். மீண்டும் மீண்டும் கடவுளை நாம் அணுகிச் செல்லும்போது கடவுள் நமக்குத் ''துணைசெய்யக் காலம் தாழ்த்தமாட்டார்'' (காண்க: லூக்கா 18:7). இவ்வுளவு உறுதியான உள்ளத்தோடு நாம் கடவுளை அணுகுகிறோமா? சில வேளைகளில் நம் உள்ளத்தில் உறுதி இருப்பதில்லை. கடவுள் நம் மன்றாட்டைக் கேட்பாரோ மாட்டாரோ என்னும் ஐயமும் நம் உள்ளத்தில் எங்காவது எழும். அல்லது நம் மன்றாட்டு முறையானதாக இல்லாததால்தான் கடவுள் நாம் கேட்பதை நமக்குத் தரவில்லை என நாம் தவறாக முடிவுசெய்திடக் கூடும். ஆழ்ந்த நம்பிக்கையோடு நாம் கடவுளை அணுகிச் செல்ல வேண்டும் என்பதை மட்டும் இயேசு வலியுறுத்துகிறார். நாம் கேட்டது கிடைக்காவிட்டாலும் கடவுளிடம் நமக்குள்ள நம்பிக்கை ஆழப்படுவதே நம் வேண்டுதலுக்குக் கிடைக்கின்ற பெரிய பயனாகும் எனலாம். ஆகவேதான் இயேசு மனிதரிடம் கடவுள் நம்பிக்கை நிலைத்திருக்குமா என்றொரு கேள்வியோடு இந்த உவமையை முடிக்கின்றார் (லூக்கா 18:8). நாம் கடவுளிடத்தில் கொள்கின்ற நம்பிக்கை ஒருநாளும் குறைபடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இறைவேண்டலின் இறுதிப் பொருள்.

மன்றாட்டு:

இறைவா, நம்பிக்கையோடு உம்மை அணுகிவந்து, உம் திருவுளத்திற்கு ஏற்ப வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.