யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-11-12

புனித யோசபாத்


முதல் வாசகம்

அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 23 - 3: 9

கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர். நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் கண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல் அவர் அவர்களைப் புடமிட்டார்; எரிபலி போல் அவர்களை ஏற்றுக் கொண்டார். கடவுள் அவர்களைச் சந்திக்க வரும்போது அவர்கள் ஒளிவீசுவார்கள்; அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள்; நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர்மீது இருக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்
திருப்பாடல்கள் 34: 1-2. 15-16. 17-18

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. 16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -பல்லவி

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 7-10

அக்காலத்தில் ஆண்டவர் உரைத்தது: ``உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், `நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, `எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்' என்று சொல்வார் அல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், `நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''உங்களுக்குப் பணிக்கப்பட்டவை யாவையும் செய்தபின், 'நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்'' (லூக்கா 17:10)

இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் எந்த மன நிலையோடு அவருடைய அடிச்சுவடுகளில் நடக்கவேண்டும் என்பதை இயேசு விளக்கிச் சொல்கிறார். பணியாளர் செய்கின்ற பணிக்கு வீட்டுத் தலைவர் நன்றி கூற வேண்டும் என்ற கடமையில்லை; ஏனென்றால் பணியாளர் தம் கடமையைத்தான் செய்கிறாரே ஒழிய அதற்கு மேலாக ஒன்றும் செய்யவில்லை. இதையே இயேசு தம் சீடர்களுக்கு நினைவுபடுத்துகிறார். சீடர்களும் தங்கள் பணி என்னவென்பதை நன்கு அறிந்திருக்கவேண்டும்; கைம்மாறு கருதாமல் தங்கள் பணியைக் கடமை உணர்வோடு ஆற்ற வேண்டும். ஒரு சிலர் தாங்கள் செய்கின்ற பணியை எல்லாரும் பாராட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதோடு அதற்காகவே பணி செய்ய முற்படுவர். தங்கள் கடமையைச் செய்யும்போது அதனால் தங்களுக்கு ஏதாவது பலன் கிடைக்குமா என்று எதிர்பார்த்துச் செயல்படுவோர் உண்மையிலேயே நல்ல நோக்கோடு செயல்படுகின்றனர் என்று சொல்லமுடியாது. இயேசுவின் கருத்துப்படி, அவரது சீடர்கள் அவர்களிடம் ஒப்படைத்த பணியை எந்தவொரு சொந்த பலனும் எதிர்பார்க்காமல் நிறைவேற்ற வேண்டும்.

கடமையைக் கடமைக்காகவே செய்யவேண்டும் என்றதும் நாம் நம் செயல்களால் நல் விளைவுகள் நிகழும் என எதிர்பார்ப்தே தவறு என்று இயேசு சொல்லவில்லை. ''உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் புகழ்வார்கள்'' என்று இயேசு கூறுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் (காண்க: மத்தேயு 6:16). ஆக, கடவுளுக்குப் புகழ் சேர வேண்டும் என்னும் மேலான எண்ணத்தோடு நாம் நமது கடமைகளை ஆற்றுவது மிகப் பொருத்தமே. ஆனால், பிறர் நம்மைப் புகழ வேண்டும் என்றோ, பிறர் நமக்கு நன்றி கூற வேண்டும் என்றோ எதிர்பார்த்து நாம் செயல்படுவது நாம் கடவுளின் பணியாளர்கள் மட்டுமே என்பதை மறுப்பதற்கு ஒப்பாகிவிடும். இத்தகைய மனநிலை தம் சீடரிடம் இருத்தலாகாது என்பதே இயேசுவின் போதனை. எனவே, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைக் கடமை உணர்வோடு நிறைவேற்றிய பிறகு, ''நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்'' என்று சொல்கின்ற மன நிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் (காண்க: லூக்கா 17:10). இந்த மனநிலை நம்மிடம் இருக்குமென்றால் நாம் இயேசுவின் சீடர்களே என்பதில் பெருமைப்பட்டுக் கொள்வதில் தவறில்லை.

மன்றாட்டு:

இறைவா, உமது திருவுளப்படி எங்கள் கடமையை ஆற்றுவதில் நாங்கள் கண்ணாயிருக்க அருள்தாரும்.