திருவழிப்பாட்டு ஆண்டு C (10-11-2013)

அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, 
வாழ்வோரின் கடவுள்/> அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, 
வாழ்வோரின் கடவுள்/> அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, 
வாழ்வோரின் கடவுள்/>


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் ஒன்றாக இணைந்து ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் வார வழிபாட்டில் பங்கேற்கும் என் அன்பின் சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்கிறேன்.! நாம் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு நம்மை உயிர்த்தெழச் செய்யும் அனைத்துலக அரசர் இயேசுவின் சந்நிதானத்தில் நன்றிப் பலி செலுத்த ஒன்று கூடியுள்ளோம்.

கடவுள் மீண்டும் தங்களை உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கையோடு, இறைவனுடைய கட்டளைக்கு எதிராக நடக்கமாட்டோம் என்று சொல்லி உயிர் துறந்த வீர விசுவாசம் நிறைந்த ஒரு குடும்பத்தின் வாழ்வு இன்றைய இறைவார்த்தைகள் வழியாக நமக்கு முன்னுதாரணமாகத் தரப்படுகின்றது. பிற‌க்கின்ற‌ போதே இற‌க்கின்ற‌ தேதி இருக்கின்ற‌தென்ப‌து மெய் தானே! கருவரையில் தொடங்கி கல்லரையில் முடிவதா வாழ்க்கை? காலையில் மலர்ந்து மாலையில் முடிவதா வாழ்வு? மனித வாழ்விற்கு பொருள் கொடுப்பதே உயிர்ப்பு தான்.

காரணம் நம் ஆண்டவர் வாழ்வோரின் கடவுள். வாழ்வு தருகின்ற கடவுள். வாழ்வை மாட்சிப்படுத்துகின்ற கடவுள். எனவே உறுதியோடிருங்கள். நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதனை அறிந்து ஆண்டவரின் பணியினை இன்னும் அதிகமாக எப்பொழுதும் செய்வோம். வேதனை துன்பங்களைக் கடந்து ஆண்டவரில் நிறைவடைவோம். விண்ணரசிலும் ஆண்டவரோடு இணைந்து வாழ்வோம். கடவுளின் மக்களாய் வாழ்ந்து மகழ்வோம். இறையருள் கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்.
மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-2, 9-14

அந்நாள்களில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப் பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப் படுத்தப்பட்டார்கள். அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், ``நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதை விட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்'' என்றார். தாம் இறுதி மூச்சு விடும் வேளையில், ``நீ ஒரு பேயன். நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்; ஏனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே'' என்று கூறினார். அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப் படுத்தினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்; ``நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டேன்; அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்'' என்று பெருமிதத்தோடு கூறினார். அவர் தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை. எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும் இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டு வியந்தார்கள். அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள் அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள். அவர் இறக்கும் தறுவாயில், ``கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன். ஆனால் நீ வாழ்வு பெற உயிர்த்தெழ மாட்டாய்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.
திருப்பாடல்கள் 17: 1. 5-6. 8,15

1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. 6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை ஆண்டவர் உறுதிப்படுத்துவாராக!
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 16 - 3: 5

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக! சகோதரர் சகோதரிகளே, இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது. அதுபோல அது எங்கும் பரவிப் புகழ் பெறவும், தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்; ஏனெனில் நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை. ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார். நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் செய்கிறீர்கள்; இனியும் செய்வீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எங்களுக்குத் தருகிறார். கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் தூண்டுவாராக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-38

அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, ``போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?'' என்று கேட்டனர். அதற்கு இயேசு சதுசேயரிடம், ``இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்துகொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, `ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக்கிறார். வர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

கைம்மாறு அளிப்பவரே இறைவா,

உமது பணிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது முன் தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ்ந்து, மக்களுக்கு பெருந்தன்மையுடன் தொண்டாற்றும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

உயிரளிக்கும் வள்ளலே எம் இறைவா!

எங்கள் குடும்பத்தில், பங்கில் இறந்துபோன ஆத்மாக்களுக்காவும், உம்மிடம் இறைஞ்சி வேண்டுகின்றோம். இரக்கத்தின் தெய்வமே அவர்களின் பாவங்களை பாராமல், அவர்களை மன்னித்து, அவர்கள் என்றும் உம்மை முகமுகமாய் தரிசிக்கும் விண்ணக வாழ்வை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

காலமெல்லாம் காத்து வரும் எம் இறைவா!

எம் சமுதாயத்தில் உள்ள ஏழைகள், கைவிடப்பட்டோர் மற்றும் அனாதைகள் ஆகிய அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், நிம்மதி போன்றவைகளைக் கொடுத்து உமது அன்பிலும், பராமரிப்பிலும் என்றும் வாழ்ந்திட அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

எமது இளைஞர்கள் அனைவரும் உமது அன்பையும், கரிசனையையும் ஆழமாக உணர்ந்து, உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“நீர் இன்றே என்னோடு பேரின்ப வான் வீட்டில் இருப்பீர்” அன்பு தந்தையே!

இதோ இந்த தருணத்தில் இறந்துபோன ஒவ்வொரு ஆன்மாவிற்காகவும் அதிலும் குறிப்பாக யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக உம்மிடம் வேண்டுகிறோம். இவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து உம் வான்வீட்டில் உம்மை முகமுகமாக தரிசிக்கும் வரத்தை பொழிந்தருள இறைவா உம்மை பார்த்து மன்றாடுகிறோம்.

ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுளே இறைவா!

உம் மக்களாகிய நாம் அனைவரும் விசுவாச வாழ்வில் உறுதியாகவும், பிரமாணிக்கமாகவும் இருந்து செயற்படவும், இறைவார்த்தையின் ஒளியில் நிறை வாழ்வை நோக்கிப் பயணிக்கவும் வேண்டிய சக்தியையும், அருளையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

“ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் மகன் குணமடைவான்” தாயும் தந்தையுமானவரே!

உம் சந்நிதானத்தில் உம் பிள்ளைகளாகிய நாங்கள் பல்வேறு தேவைகள் நிறைவேற வேண்டி நிற்கிறோம் ஆண்டவரே. நாங்கள் எப்போதும் உம் அளவற்ற அன்பை சுவைக்கவும் அதனை பிறருக்கு அளிக்கவும் வேண்டிய தராள மனதை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




இன்றைய சிந்தனை

''இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்' என்றார்''

இயேசுவை அணுகிக் கேள்வி கேட்டு அவரிடம் குறைகாண முயன்றவர்களுள் பரிசேயரும் இருந்தனர், சதுசேயரும் இருந்தனர். இறப்புக்குப் பின் மனிதர் உயிர்பெறுவர் என்பது பரிசேயர் கொள்கை. ஆனால் சதுசேயர் இதை மறுத்தனர். இயேசு யாருக்குச் சார்பாகப் பேசுவார் என்றறிய இரு கட்சியினரும் முனைகின்றனர். ஆனால் வழக்கம்போல இயேசு அவர்களுடைய கேள்விக்கு நேரடியான பதில் கூறாமல் அவர்களுக்குக் கடவுளின் போதனையை எடுத்துக் கூறுகிறார். கடவுளை நாம் நம்முடைய குறுகிய அறிவுக்குள் கொண்டுவர இயலாது. நமது குறுகிய சிந்தனைப்படி கடவுள் செயல்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கவும் கூடாது. எனவேதான் இயேசு இவ்வுலகப் பாணிக்கும் மறுவுலகப் பாணிக்கும் இடையே வேறுபாடு உண்டு என்பதைக் குறிப்பிடுகிறார். இவ்வுலக முறைப்படி மனிதர் திருமணம் செய்கின்றனர்; குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, குடும்பத்தை நிறுவுகின்றனர். மறுவுலகில் இத்தகைய முறை இராது. அங்கே திருமணத்திற்கும் குழந்தைப் பேற்றுக்கும் இடம் இல்லை. ஏனென்றால் ''அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்'' (மாற் 12:25).

விண்ணகத் தூதர் எப்படி இருப்பார்கள் என்னும் கேள்வி எழுகிறது. இதற்கும் இயேசு நேரடியான பதில் தரவில்லை; மாறாக, மனிதருக்கும் விண்ணகத் தூதருக்கும் இடையே வேறுபாடு உண்டு என நாம் அறிகிறோம். இதை உறுதிப்படுத்துகின்ற விதத்தில் இயேசு கடவுளின் உண்மைத் தன்மையை நமக்குக் காட்டுகிறார். அதாவது கடவுள் ''இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள்'' (மாற் 12:27). மனிதருக்கு வாழ்வு வழங்குவதே கடவுளின் திட்டம்; மனிதர் மடிந்து ஒழிய வேண்டும் என்பதல்ல அவருடைய பார்வை. எனவே, கடவுள் மனிதருக்கு உயிர் வழங்குவதையே தம் நோக்கமாகக் கொண்டிருப்பதால் அவர் மனிதரை சாவுக்குக் கையளித்துவிட மாட்டார். மாறாக, அவர்களுக்குத் தம் வாழ்வில் பங்களிப்பார். ஆனால் இத்தகைய பங்கேற்பு மனித சிந்தனைக்கு ஏற்ப நிகழும் என நாம் எதிர்பார்க்க முடியாது. மாறாக, கடவுளுக்கே தெரிந்த விதத்தில் நாம் எல்லோரும் வாழ்வு பெற்று நிறைவடைய அழைக்கப்படுகிறோம். கடவுளே நமக்கு நிலைவாழ்வில் பங்களிப்பார். எனவே நாம் நம்பிக்கையோடு கடவுளை நாடிச் செல்ல வேண்டும். இந்த உண்மையை இயேசு நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். எனவே, இயேசுவையும் அவர் நம்பிய கடவுளையும் நாம் நம்பி ஏற்கும்போது நாமும் உயிர்த்தெழுதலில் பங்கேற்போம். நம் வாழ்வு ஒரு நாளும் அழியாது.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களுக்கு வழங்குகின்ற வாழ்வை நாங்கள் பிறரோடு பகிர்ந்திட அருள்தாரும்.