யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் சனிக்கிழமை
2013-11-09

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா


முதல் வாசகம்

ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்3;9-11 16-17

9 நாங்கள் கடவுளின் உடன் உழைப்பார்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.10 கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.11 ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.16 நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?17 ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது: நீங்களே அக்கோவில்.1

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.
திருப்பாடல்கள்46: 1--8

1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. 2 ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், 3உ எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. பல்லவி

4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. பல்லவி

7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். 8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-22

அக்காலத்தில் யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், ``இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள், ``உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்'' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவுகூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, ``இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், ``இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்றார். அப்போது யூதர்கள், ``இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?'' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட போது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்'' (யோவான் 2:14-15)

''கோவிலைத் தூய்மைப்படுத்துதல்'' என அழைக்கப்படும் நிகழ்ச்சியை நான்கு நற்செய்தியாளர்களும் பதிவுசெய்துள்ளனர் (காண்க: மத் 21:12-13; மாற் 11:15-17; லூக் 19:45-46). ஆனால் மற்ற மூன்று நற்செய்தியாளர்களும் இந்நிகழ்ச்சி இயேசுவின் பணிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாகக் கூறுவர். யோவான் மட்டும் இயேசுவின் பணிக்காலத்தின் தொடக்கத்திலேயே இந்நிகழ்ச்சி நடந்ததாகக் குறித்துள்ளார். ஏன் இந்த வேறுபாடு? யோவான் நற்செய்தி ஒரு குறிப்பிட்ட இறையியல் பின்னணியில் எழுதப்பட்டது. அதாவது, இயேசுவின் பணி தொடங்கிய நாளிலிருந்தே அவரை எதிர்த்தவர்கள் இருந்தார்கள்; இயேசு தம் பணியைத் தொடங்கிய நாளிலிருந்தே தாம் ஒரு புதிய ஒழுங்குமுறையை இவ்வுலகில் நிலைநாட்ட வந்ததாக அறிவிக்கிறார். அவர் கானாவில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தண்ணீரைச் சுவைமிகு திராட்சை இரசமாக மாற்றினார். யூத சமயம் என்னும் பழைய ஒழுங்குமுறை மாறி ஒரு புதிய ஒழுங்குமுறை விரைவில் வருகிறது என அறிவித்தார். இயேசு கொணர்வது சுவைமிகுந்த திராட்சை இரசம். அது மக்களுக்கு மகிழ்ச்சி தருகின்ற ஒன்றாகும். மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை அறிவிக்கவே இயேசு வந்தார். தொடர்ந்து, யூத சமயத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கிய எருசலேம் கோவிலில் இயேசு தம் அதிகாரத்தை நிலைநாட்டுகிறார். அக்கோவிலை இயேசு ''என் தந்தையின் இல்லம்'' என அழைக்கின்றார் (யோவா 2:16). அந்த இல்லம் தூய்மையானது. அதை ஒரு சந்தைபோல ஆக்கிவிட்டவர்களை இயேசு கடிந்துகொள்கிறார்.

மேலும் இயேசு தம்மையே எருசலேம் கோவிலுக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார்: ''தம் உடலாகிய கோவில் பற்றி அவர் பேசினார்'' (யோவா 21). கோவில் என்பது கடவுள் உறைகின்ற இடம் என்றால் இயேசு தம் உடலில் (தம்மில்) கடவுள் உறைகின்றார் என்றுரைத்தார். இனிமேல் கடவுளைத் தேடி மக்கள் கோவிலுக்குச் செல்ல வேண்டியதில்லை; கடவுள் தம் மகன் இயேசுவிடம் முழுமையாக உறைகின்றார். இதைக் கேட்ட ''யூதர்கள்'' கோபமுற்றனர். இயேசு, ''இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்று கூறியதைக் கேட்ட அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவேதான் தங்கள் கோவிலின் பெருமையை அவர்கள் எடுத்துரைத்தார்கள். எருசலேம் கோவிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தும் பணி கி.மு. 20-19 அளவில் தொடங்கியது. அப்பணி கி.பி. 60களில் தான் நிறைவடைந்தது. பணி தொடங்கிய ஆண்டிலிருந்து ''நாற்பத்தாறு ஆண்டுகள்'' (காண்க: யோவா 2:20) ஆகும்போது இயேசு ''கோவிலைத் தூய்மைப்படுத்தினார்'' என்றால் அது கி.பி. 28 அளவில் நிகழ்ந்திருக்க வேண்டும். இயேசுவின் உடல் கடவுள் உறைகின்ற கோவில் என்னும் உண்மையைச் சீடர் இயேசு சிலுவையில் இறந்து அதன் பின் உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியின் ஒளியில் முழுமையாக அறிந்துகொண்டார்கள்.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்கள் இதயத்தில் கோவில் கொண்டிருக்கின்றீர் என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.