யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் வியாழக்கிழமை
2013-10-31


முதல் வாசகம்

நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-39

சகோதரர் சகோதரிகளே, கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்துகொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? ``உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்'' என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப என்னை மீட்டருளும்.
திருப்பாடல்கள்109: 21-22. 26-27. 30-31

21 என் தலைவராகிய கடவுளே! உமது பெயரை முன்னிட்டு என் சார்பாகச் செயல்படும்! உமது பேரன்பின் இனிமைபொருட்டு என்னை மீட்டருளும்! 22 நானோ எளியவன்; வறியவன்; என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது. -பல்லவி

26 ஆண்டவரே! என் கடவுளே! எனக்கு உதவியருளும்! உமது பேரன்பிற்கேற்ப என்னை மீட்டருளும்! 27 இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என அவர்கள் அறியட்டும்! ஆண்டவரே! இதைச் செய்தவர் நீரே என அவர்கள் உணரட்டும். -பல்லவி

30 என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்; பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன். 31 ஏனெனில், வறியோரின் வலப் பக்கம் அவர் நிற்கின்றார்; தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35

அக்காலத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, ``இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்'' என்று கூறினர். அதற்கு அவர் கூறியது: ``இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே! எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே! இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். `ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்' என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''அந்நேரத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, 'இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்' என்று கூறினர்'' (லூக்கா 13:31)

இங்கே பேசப்படுகின்ற ஏரோது யார்? பெரிய ஏரோது (ஆட்சிக்காலம்: கி.மு. 3 - கி.மு.4). என வரலாற்றில் அறியப்படுகின்ற மன்னன் காலத்தில் இயேசு பிறந்தார் என்பதற்கான அடிப்படை நற்செய்தி நூல்களில் உள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு இயேசு பிறந்தது கி.மு. 6ஆம் ஆண்டளவிலாகும் என்பது அறிஞர் கருத்து. பெரிய ஏரோது இறந்த பிறகு, அந்த மன்னனின் மகன் ஏரோது அந்திப்பா (ஆட்சிக் காலம்: கி.மு. 4 - கி.பி. 39) கலிலேயாவிலும், இன்னொரு மகன் அர்க்கெலா (ஆட்சிக் காலம்: கி.மு. 4 - கி.பி. 6) யூதேயாவிலும் ஆட்சிசெலுத்தினர். இவர்களுள் ஏரோது அந்திப்பா என்பவன்தான் திருமுழுக்கு யோவானைக் கொன்றவன். அவன் இயேசு புரிந்த அதிசய செயல்கள் பற்றிக் கேள்விப்பட்டதால் அவரைப் பார்க்க வேண்டும் என விரும்பினான். தொடர்ந்து அவன் இயேசுவைக் கொல்ல வேண்டும் என்றும் திட்டம் தீட்டியதாக நற்செய்தி தகவல் தருகிறது (காண்க: லூக் 13:31).ஏரோது அந்திப்பா இயேசுவைக் கொல்ல வேண்டும் என்று எண்ணியதற்குக் காரணம் என்ன? திருமுழுக்கு யோவான் ஏற்கெனவே அந்த மன்னனின் நடத்தை தவறானது என அவனைக் கண்டித்திருந்தார் (மாற் 6:14-29). இறைவாக்கினராக வந்த அவருடைய போதனை மன்னனுக்குப் பிடிக்கவில்லை. அதுபோலவே, இயேசுவும் ஓர் இறைவாக்கினர் போல வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட ஏரோது அந்திப்பாவுக்கு இயேசுவைச் சந்தித்து, அவரிம் பெரியதோர் அதிசயத்தை நிகழ்த்துமாறு கேட்கவேண்டும் என்பதில் மிகுந்த ஆசை (காண்க: லூக் 23:6-8). இறுதியில் இயேசு கைதுசெய்யப்பட்டு அந்த மன்னனின் முன்னிலையில் கொண்டுவரப்பட்டார் (லூக் 23:6-7).

ஏரோது அந்திப்பாவைக் கண்டு இயேசு பயப்படவில்லை. மாறாக, அவனை ''நரி'' என்று அழைத்துச் சவால் விட்டார் இயேசு (காண்க: லூக் 13:31-32). இயேசு, ''இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்'' என்றார் (காண்க: லூக் 13:32). அதாவது, இறையாட்சியை அறிவித்த இயேசு மக்களை ஒடுக்கிய தீய சக்திகளை முறியடிப்பார் (''பேய்களை ஓட்டுவேன்''); மக்களைச் சிறுமைப்படுத்துகின்ற அனைத்து நோய்நொடிகள் மற்றும் அநீதிகளிலிருந்து அவர்களுக்கு விடுதலையளிப்பார் (''பிணிகளைப் போக்குவேன்''). இவ்வாறு கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பணியை இயேசு ஆற்றும்போது அவருக்கு எதிராக தீய சக்திகள் எழுந்து, அவரைக் கொன்றுபோட முனைந்துநிற்கும். ஆனால் இயேசு தாமே தம்முடைய பணியினைச் சிலுவைச் சாவு வழியாக ''நிறைவேற்றுவார்''. எனவே, ''நரி'' போலச் செயல்பட்ட ஏரோது அந்திப்பாவும் சரி வேறு எந்த அதிகாரியும் சரி, கடவுள் வகுத்த திட்டத்தை முறியடிக்க முடியாது. ஏரோது நரியைப் போல தந்திரமாகச் செயல்படலாம்; அழிவினைக் கொணரலாம். ஆனால் மனித அதிகாரம் எதுவுமே கடவுளின் மீட்புத் திட்டத்தைச் சீர்குலைக்க முடியாது. இன்றைய உலகிலும் இறையாட்சிக்கும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் எதிரான சக்திகள் பல உள்ளன. அவற்றை முறியடிக்க வேண்டும் என்றால் நாமும் இயேசுவைப் போல மன உறுதியோடு செயல்பட வேண்டும்; கடவுளின் திருவுளத்தை முழுமனத்தோடு நிறைவேற்ற முன்வர வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்றுவதில் மன உறுதியோடு நாங்கள் நிலைத்து நிற்க எங்களுக்கு அருள்தாரும்.