யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-10-29


முதல் வாசகம்

நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-25

சகோதரர் சகோதரிகளே, இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது. இந்நாள் வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர் நோக்குவாரா? நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காகத் தளராமனத்தோடு காத்திருக்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் மகிழ்ச்சியுறுகின்றோம்.
திருப்பாடல்கள் 126: 1-2. 2-3. 4-5. 6

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். 2 அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. -பல்லவி

2 ``ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி

6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, ``இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின'' என்று கூறினார். மீண்டும் அவர், ``இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''பின்பு இயேசு, ''இறையாட்சி...ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின' என்றார்'' (லூக்கா 13:18-19)

கடுகு விதை மிகச் சிறிது. தமிழ் இலக்கிய மரபிலும் கடுகு, தினை மற்றும் ஆல விதைகள் சிறுத்திருப்பது பற்றிய கூற்றுக்கள் உண்டு. ''கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்'' என்று திருக்குறளைப் புகழ்கின்றார் இடைக்காடர். தினையையும் பனையையும் ஒப்பிடுவார் வள்ளுவர் (குறள் 104). சிறிய விதையிலிருந்து வானோக்கி வளர்ந்து விரிகின்ற ஆல மரம் அரசனின் படைக்கு நிழலாகும் என்பதும் இலக்கிய வழக்கு. அதுபோல இயேசு கடுகு பற்றி ஒரு சிறு உவமை வழி இறையாட்சியின் தன்மையை விளக்குகிறார். பாலஸ்தீன நாட்டில் கடுகு வகைகள் பல உண்டு. அவற்றுள் ஒருவகை 10 அடி வரை வளர்ந்து ஓங்கும் மரமாக உயர்வதுண்டு. இயேசு தொடங்கிவைத்த இறையாட்சியும் சிறிய அளவில் ஆரம்பமானாலும் மிக உயர்ந்தும் விரிந்தும் வளர்ந்தோங்கும் தன்மையது. பழைய ஏற்பாட்டில் வானளாவ வளர்கின்ற கேதுரு மரம் பற்றிப் பேசப்படுகிறது (காண்க: எசே 17:22-24). அது 50 அடி வரை வளர்ந்து பெருமரமாகக் காட்சியளிக்கும். ஆனால் இயேசு இறையாட்சியை அத்தகைய பெரியதொரு மரத்திற்கு ஒப்பிடவில்லை. மாறாக, மிகச் சிறிய விதையிலிருந்து தோன்றி வளர்கின்ற ஒரு சிறு மரத்திற்கு அதை ஒப்பிடுகிறார். நோயுற்ற மனிதர்களுக்கு நலமளிப்பதும், மக்களுக்கு இறையாட்சி பற்றிச் சொல்லாலும் செயலாலும் போதிப்பதுமே இயேசுவின் பணியாக இருந்தது. சிறிய அளவில் தொடங்கிய அப்பணி உலகளாவிய பெரும் பணியாக விரியும். எல்லா மனிதர்களும் இயேசு அறிவித்த இறையாட்சியில் பங்கேற்க இயலும்.

வானத்துப் பறவைகள் என்னும் உருவகம் வழியாக இயேசு இறையாட்சி என்பது எல்லா மக்களையும் வரவேற்கின்ற இடம் எனக் காட்டுகிறார். பறவைகள் மரத்தில் கூடு கட்டும். மரத்துக் கனிகளை உண்டு மகிழும். கிளைகளில் அமர்ந்து இனிமையாகப் பாடும். இறையாட்சியும் அவ்வாறே என்க. மனிதர்கள் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைக்கும்போது கடவுளின் ஆட்சியில் பங்கேற்பார்கள். அவர்களது இதயத்தில் கடவுள் பற்றிய உணர்வு ஆழப்படும். தங்கள் இதயக் கதவுகளை அவர்கள் கடவுளுக்கும் பிறருக்கும் திறந்துவிடுவார்கள். பிறரது இன்பதுன்பங்களில் பங்கேற்பார்கள். இவ்வாறு கடவுளாட்சி என்பது எல்லா மக்களையும் ஒன்றுசேர்த்து, அவர்களிடையே நல்லுறவுகளை ஏற்படுத்தி அவற்றை உறுதிப்படுத்துகின்ற தன்மையது.

மன்றாட்டு:

இறைவா, மனித வாழ்வு சிறு தொடக்கமாயினும் நிறைவை நோக்கி நீர் எங்களை வழிநடத்துகிறீர் என நாங்கள் உணர்ந்து செயல்பட அருள்தாரும்.