யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-10-25


முதல் வாசகம்

சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7: 18-25

சகோதரர் சகோதரிகளே, என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன். நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது. நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல்முறையை என்னுள் காண்கிறேன். நான் கடவுளின் சட்டத்தைக் குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது. அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்; அவருக்கு நன்றி!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.
திருப்பாடல்கள் 119: 66,68. 76,77. 93,94

66 நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன். 68 நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும். -பல்லவி

76 எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! 77 நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். -பல்லவி

93 உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்; ஏனெனில், அவற்றைக்கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர். 94 உமக்கே நான் உரிமை; என்னைக் காத்தருளும்; ஏனெனில், உம் நியமங்களையே நான் நாடியுள்ளேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: ``மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது. வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்? நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்போது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது' என்றார்'' (லூக்கா 12:54-55)

இந்திய நாட்டில் மழை பெய்வது பருவக் காற்று வீசுவதைப் பொறுத்தது. எனவே, வடகிழக்குப் பருவக் காற்றும், தென்மேற்குப் பருவக்காற்றும் நமக்கு மழைகொணர்வதை ஏறக்குறைய முன்கூட்டியே அறிவிக்க இயலுகிறது. அதுபோலவே இயேசு வாழ்ந்த பாலஸ்தீன நாட்டுத் தட்ப வெப்ப நிலையும் ஒரு சில தனித்தன்மைகளைக் கொண்டது. மேற்கிலிருந்து எழும் காற்று மத்திய தரைக்கடலைக் கடந்து வரும்போது ஈரப்பசை பெற்று யூதேயா மலைப்பகுதிவரை உள்நாட்டில் வீசும். இதனால் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தோன்றும். இதற்கு மாறாக, தெற்கிலிருந்து காற்று வீசும்போது பாலைநிலப் பகுதியிலிருந்து எழுவதால் மிகுந்த வெப்பத்தைக் கொணர்ந்து வரும். ஒரு மணி நேரத்தில் 30 பாகை அளவுக்கு வெப்பத்தை உயர்த்திவிடுகின்ற தன்மை அக்காற்றிற்கு உண்டு. இத்தகைய கால மாற்றச் சூழல் பற்றித்தான் இயேசு பேசுகிறார். ''மேற்கிலிருந்து வீசும் காற்று மழைகொணரும் எனவும் தெற்கிலிருந்து வீசும் காற்று வெப்பத்தைக் கொணரும் எனவும் உங்களுக்குத் தெரிகிறது'' (காண்க: லூக் 12:54-55) எனக் கூறிவிட்டு, இயேசு ''இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி'' என்றொரு கேள்வியையும் மக்கள் கூட்டத்திடம் கேட்கிறார் (லூக் 12:56). இயேசு குறிப்பிடுகின்ற ''இக்காலம்'' எது? இயேசு தந்தையாம் கடவுளால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டு எல்லா மக்களுக்கும் கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டிருப்பதே ''இக்காலம்''. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் பலர் ''அக்காலத்தை''ச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. எனவேதான் இயேசு ''இக்காலத்தை நீங்கள் ஏன் ஆராய்ந்து பார்க்கவில்லை?'' என்று மக்களிடம் வருத்தத்தோடு கேட்கின்றார்.

அன்று இயேசு கேட்ட கேள்வி இன்று நம்மிடம் கேட்கப்படுகின்ற கேள்வியாக மாறியுள்ளது. நாம் வாழ்கின்ற காலத்தில் கடவுளின் உடனிருப்பை நாம் எவ்வாறு உணர்கிறோம். கடவுள் நம்மோடு பேசுவதை நாம் எவ்வாறு கேட்கிறோம்? பல தடவைகளிலும் நம் உள்ளத்தில் எழுகின்ற பலவிதமான இரைச்சல்களும் ஒலிகளும் ஒன்றுசேர்ந்து கடவுளின் மென்மையான குரலை நாம் கேட்க இயலாதவாறு செய்துவிடுகின்றன. வெளியுலகிலிருந்தும் நம் உள்ளத்திலிருந்தும் எழுகின்ற இரைச்சல்கள் கடவுளின் குரலை அமுக்கிவிடுகின்றன. எனவேதான் கடவுளின் குரலைக் கேட்டு அதைக் கருத்தில் ஏற்று அதன்படி நடக்க வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் அமைதி வேண்டும். கடவுளின் உடனிருப்பை நாம் ஆழமாக உணர்ந்து, அந்த உணர்வில் நிலைத்திருந்து, கூர்ந்து செவிகொடுத்துக் கேட்டால் நம் மனச் சான்றின் வழியாகப் பேசுகின்ற அவருடைய குரல் நம் உள்ளத்தில் இதமாக ஒலிப்பதை அறிவோம். நாம் வாழ்கின்ற ''காலத்தை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது'' அங்கே வெவ்வேறு நிகழ்வுகள் வழியாகவும் மனிதர்கள் வழியாகவும் கடவுள் நம்மோடு பேசுவதை நாம் கேட்கலாம். இது நிகழ வேண்டும் என்றால் நம் உள்ளம் கடவுளை நோக்கி எழ வேண்டும்; அவருடைய அருளைப் பெற்றிட எப்போதும் திறந்திருக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களோடு பேசுகின்ற உம் குரலைக் கேட்டு அதற்கு ஏற்ப நடந்திட எங்களுக்கு அருள்தாரும்.