யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் திங்கட்கிழமை
2013-10-21


முதல் வாசகம்

தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர்
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 20-25

சகோதரர் சகோதரிகளே, கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஆபிரகாம் ஐயப்படவே இல்லை; நம்பிக்கையில் அவர் மேலும் வலுப்பெற்றார்; கடவுளைப் பெருமைப்படுத்தினார். தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார். ஆகவே ``அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.'' ``நீதியாகக் கருதினார்'' என்று எழுதியுள்ளது அவரை மட்டும் குறிக்கவில்லை; நம்மையும் குறிக்கின்றது; இறந்த நம் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் அவ்வாறே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம். நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

தம் மக்களைத் தேடி வந்த இஸ்ரயேலின் ஆண்டவரைப் போற்றுவோம்.
லூக்கா 1: 69-70. 71-73. 74-75

69-70 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார். -பல்லவி

71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். 72-73 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். -பல்லவி

74-75 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் அவனிடம், `அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21

அக்காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், ``போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்'' என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, ``என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?'' என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, ``எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது'' என்றார். அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: ``செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், `நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!' என்று எண்ணினான். `ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்'. பின்பு, ``என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன்'' என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், `அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?'' (லூக்கா 12:20)

''அறிவற்ற செல்வன்'' உவமை உண்மையான செல்வம் எதில் அடங்கியிருக்கிறது என விளக்குகிறது (லூக் 12:13-21). இந்த உவமையைக் கூறிய இயேசு நம்மைப் பார்த்து, ''கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்த்துவைக்க'' கேட்கிறார் (லூக் 12:21). உலகப் பார்வையில் செல்வம் சேர்;த்து வைக்கும் மனிதர் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றலாம். பணம் பாதாளம் வரைப் போகும் என்றொரு கூற்றும் உண்டு. ஆனால் பாதாளத்தையும் எட்டுகின்ற சக்தி வாய்ந்த பணம் நம்மைப் பாதாளத்திற்கே இழுத்துச் சென்றுவிடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். மனித வாழ்வு நிறைவு பெற வேண்டும் என்றால் அதற்குச் செல்வம் மட்டும் போதாது. மாறாக, செல்வம் நம்மைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடக் கூடும். செல்வத்தையே தெய்வமாகக் கொள்வோரும் உண்டு. இவர்கள் செல்வம் திரட்டுவதற்காக எந்தவிதமான தியாகங்களையும் செய்யத் தயங்குவதில்லை. ஏன், ஏமாற்று வழிகளையும் ஏய்ப்பு முறைகளையும் கையாண்டு கூட இவர்கள் செல்வம் குவிக்க நினைப்பார்கள். ஆனால் இத்தகைய முயற்சிகள் எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரும். அதுவே நம்மைவிட்டு நம் உயிர் பிரிகின்ற நாள். இறப்பு எல்லா மனிதருக்கும் உண்டு. அதை முறியடிக்கின்ற சக்தி மனிதருக்கு இல்லை. வள்ளுவரும் இதை ''நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு'' எனக் கூறிப் போந்தார் (காண்க: குறள் 336). இவ்வளவுதான் இவ்வுலகத்தின் ''பெருமை'' என வள்ளுவர் கூறுவதில் எதிர்ப்பொருளணி துலங்குவதையும் நாம் காணலாம். நிலையாமைதான் மனித வாழ்க்கையின் முடிவா அல்லது நிலையாமைக்கு அப்பாற்பட்ட நிலைவாழ்வு ஒன்று உளதா?

கிறிஸ்தவ நம்பிக்கைப்படி, கடவுள் நமக்கு எந்நாளும் நிலைத்துநிற்கின்ற வாழ்வை வாக்களித்துள்ளார். அதுவே இம்மண்ணக வாழ்வின் உண்மையான, உயரிய குறிக்கோளாகவும் நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். இவ்வுலகச் செல்வத்தைக் கொண்டு நாம் ''கடவுள் முன்னிலையில்'' செல்வம் சேர்த்துவைக்க முடியும். இதற்கான வழியையும் இயேசு நமக்குக் காட்டுகிறார். ''உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப் பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்'' (லூக் 12:33) என இயேசு நமக்குக் கற்பிக்கின்றார். ஆகவே, சுய நலப் போக்கும் பேராசையும் நம்மை ஆட்கொண்டுவிட்டால் நாம் இவ்வுலகச் செல்வங்களைக் குவிப்பதிலேயே கருத்தாய் இருப்போம். அச்செல்வங்களால் நமக்கு நிலையான மன அமைதியைத் தர இயலாது. ஆனால் பிறரன்பு என்னும் இலட்சியம் நம்மில் உறதியாக இருந்தால் நாம் தேவையில் உழல்வோரோடு நம் செல்வத்தைப் பகிர்ந்துகொள்வோம். அப்போது ''கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்த்துவைப்போம்'' (லூக் 12:21). அதுவே உண்மையான செல்வம்.

மன்றாட்டு:

இறைவா, அழிந்துபோகும் செல்வத்தை நம்பி வாழாமல் உம் முன்னிலையில் செல்வம் கொண்டவர்களாக மாறிட எங்களுக்கு அருள்தாரும்.