யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-10-18

புனித லூக்கா - நற்செய்தியாளர் விழா


முதல் வாசகம்

லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 9-17

அன்பிற்குரியவரே, விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய். தேமா இன்றைய உலகப் போக்கை விரும்பி என்னை விட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றுவிட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்றுவிட்டனர். என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர். திக்கிக்குவை நான் எபேசுக்கு அனுப்பிவிட்டேன். நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டுவந்த போர்வையையும் நூல்களையும், குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்துவா. கன்னானாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான். அவன் செயலுக்குத் தக்கவாறு ஆண்டவர் அவனுக்குப் பதிலளிப்பார். அவனிடமிருந்து உன்னைக் காத்துக்கொள். அவன் நம்முடைய போதனையை அதிகம் எதிர்த்தவன். நான் முதன்முறை வழக்காடியபோது எவரும் என் பக்கம் இருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக்குற்றம் அவர்களைச் சாராது இருப்பதாக. நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
திருப்பாடல்கள் 145: 10-11. 12-13. 17-18

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13 உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. -பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்காலத்தில் ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: ``அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், `இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே. வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்'' (லூக்கா 10:3)

இயேசு எழுபத்திரண்டு சீடர்களை இருவர் இருவராக அனுப்பி, இறையாட்சி நெருங்கிவந்துவிட்டது என்னும் செய்தியை அறிவிக்கப் பணித்தார். எழுபத்திரண்டு என்பது உலக நாடுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையாகக் கருதப்பட்டதால் (காண்க: தொநூ 10), இயேசு தம் சீடரை உலகெங்கும் நற்செய்தி அறிவிக்க அனுப்பினார் என்பது பொருள். அவ்வாறு சென்ற சீடர்கள் பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பதை இயேசு தெளிவாக எடுத்துரைத்தார். ஓநாய்கள் ஆடுகளைப் பிடித்துக் கொன்றுவிடலாம். அதுபோல, சீடரும் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்ற நிலையைச் சந்திக்க நேரிடலாம். ஆனால், அவர்கள் கடவுளின் ஆட்சிக்காக வாழ்வதால் தங்கள் உயிரையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் முன்னேறிச் செல்ல வேண்டும். ஓநாய்கள் போல நம்மைத் தாக்க வருகின்ற சக்திகள் இன்றைய உலகில் பல உள்ளன. கடவுளின் ஆட்சிக்கு எதிராகத் தலைதூக்குகின்ற எந்த சக்தியும் நம்மைத் தடுக்க முயற்சி செய்யக்கூடும். அந்த வேளைகளில் கடவுளின் சக்தியில் நாம் நம்பிக்கை கொண்டு பயணத்தைத் தொடர அழைக்கப்படுகிறோம். -- ஓநாய்களின் பிடியில் அகப்படாமல் ஆட்டுக்குட்டிகள் தப்பிக்க வேண்டும் என்றால் அவை ஆயரின் கண்காணிப்பிலிருந்து அகன்று செல்லல் ஆகாது. ஆயர் தம் ஆடுகளை அன்போடும் கரிசனையோடும் பாதுகாப்பதுபோலக் கடவுளும் நாம் நற்செய்திப் பணி ஆற்றும்போது நம்மைக் காத்திடுவார் என்னும் நம்பிக்கை நம்மிடம் இருக்க வேண்டும். என்றாலும், ஆபத்துக்கள் முற்றிலுமாக ஒருபோதும் மறைந்துவிடுவதில்லை. எனவேதான் நாம் விழிப்பாயிருக்கவேண்டும்; நேரிய வழியில் நம்மை நடத்திச் செல்கின்ற கடவுளின் பார்வையிலிருந்து ஒருபோதும் தப்பிச் செல்லாமல் முன்னேறிட வேண்டும். சீடரை ''இருவர் இருவராக'' இயேசு அனுப்பினார் என லூக்கா குறிப்பிடுகிறார். சாட்சி பகரும்போது இருவர் அதை உறுதிசெய்ய வேண்டும் என்பது அன்றைய வழக்கம். எனவே, நற்செய்தியின் தூதுவராகச் செல்வோர் நற்செய்திக்குச் சாட்சி பகர வேண்டும். அப்போது அவர்கள் ''இயேசுவுக்கு முன்சென்று'' அவருடைய வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்துவார்கள் (காண்க: லூக்கா 10:1).

மன்றாட்டு:

இறைவா, தெளிவான பார்வையோடு நாங்கள் இறையாட்சிக்குச் சான்று பகர எங்களுக்கு அருள்தாரும்.