யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் வியாழக்கிழமை
2013-10-17

புனித இஞ்ஞாசியார்


முதல் வாசகம்

அவர் நீதியுள்ளவர். இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 21-30

சகோதரர் சகோதரிகளே, கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது; திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன. இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்; நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை. ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர். ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின்மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர். இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார். இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார். ஆம், அவர் நீதியுள்ளவர். இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார். அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் பெருமை பாராட்ட இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா? இல்லை; நம்பிக்கையின் அடிப்படையில்தான். ஏனெனில் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின் மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம். கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள். ஏனெனில் கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும், இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவரையே நம்பியிரு
திருப்பாடல்கள் 130: 1-2. 3-4. 5-6

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். -பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். -பல்லவி

5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 11;47-54

இக்காலத்தில் யேசு "ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே. 48 உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள். 49 இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது; நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்; அவர்களுள் சிலரைத் துன்புறுத்துவார்கள். 50 ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகவும் இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். 51 ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். 52 "ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்" என்றார். 53 இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமையுணர்வு மிகுந்தவராய் 54 அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்'' (லூக்கா 11:52)

இயேசு பரிசேயரையும் மறைநூல் அறிஞரையும் மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசிய பகுதி (காண்க: லூக்கா 11:37-54) பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ''ஐயோ! உங்களுக்குக் கேடு!'' என்று இயேசு கூறுவது இயேசுவின் சாந்தமான குணத்திற்கு நேர்மாறாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், இயேசு கண்டிப்பது அக்கால சமய, மற்றும் சமூகத் தலைவர்களிடம் காணப்பட்ட குறைகளை மட்டுமல்ல, மாறாக அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட நேரிய நடத்தை என்னவென்பதையும் இயேசு உணர்த்துகிறார். அதே நேரத்தில், இயேசு கண்டித்த குறைகளும் அவர் போற்றியுரைத்த நடத்தையும் இன்று வாழ்கின்ற நமக்கும் பொருந்தும். தாமும் நுழையாமல் பிறரையும் நுழையவிடால் செயல்படுவது எதைக் குறிக்கிறது? வீட்டு வாசலில் ஒருவர் நிற்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒன்றில் அவர் வீட்டுக்குள் நுழைய வேண்டும் அல்லது வாயிலை அடைத்துக்கொண்டு நிற்காமல் அங்கிருந்து வெளியேறிட வேண்டும். அப்போது வீட்டுக்குள் பிறர் நுழைய முடியும். இதையே இயேசு ஓர் உருவகமாகக் கொண்டு இறையாட்சி பற்றிய ஆழ்ந்த உண்மையை விளக்குகிறார்.

நுழைதலும் நுழையவிடுதலும் நம் வாழ்வில் அன்றாடம் நிகழ்கின்ற அனுபவங்கள். கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் நடக்கும்போது, அவரிடத்தில் முழுமையாக நம்மைக் கையளிக்கும்போது நாம் அவருடைய ஆட்சியில் நுழைகிறோம் எனலாம். அதுபோல, பிறர் நம்மைக் காணும்போது நம் வாழ்வில் கடவுளின் பண்புகள் துலங்குகின்றன என உணர்ந்து, அதே பண்புகளைத் தம் வாழ்விலும் கடைப்பிடிக்க முன்வரும்போது நாம் அவர்கள் இறையாட்சியில் நுழைவதற்கு வழியாகின்றோம் (காண்க: லூக்கா 11:42).. இதுவே தூயவர்களின் வாழ்க்கையில் நாம் காண்கின்ற உயர்ந்த நெறி. அன்னை தெரசாவின் வாழ்க்கையைப் பார்த்தால் இவ்வுண்மை தெளிவாகத் துலங்கும். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களை அவர் கடவுளின் பிள்ளைகள் என்றுதான் பார்த்தாரே தவிர மனித மாண்பு இல்லாத பொருள்களாகக் கருதவில்லை. கடவுளிடம் துலங்குகின்ற அன்பும் இரக்கமும் நம் வாழ்விலும் துலங்கும்போது இறையாட்சியில் நாமும் நுழைவோம், பிறரும் அந்த ஆட்சியில் பங்கேற்று அதில் நுழைவதற்கு நாம் கருவிகளாகச் செயல்படுவோம். அப்போது ''நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்'' என்று இயேசு கூறிய சொற்கள் நமக்குப் பொருந்தாது எனலாம். அந்த அளவுக்கு நம் வாழ்க்கை விளங்குகிறதா?

மன்றாட்டு:

இறைவா, இறையாட்சியில் நாங்கள் நுழைந்திட இயேசுவை வாயிலாகத் தந்ததற்கு உமக்கு நன்றி!