யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் திங்கட்கிழமை
2013-10-14


முதல் வாசகம்

பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7

கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழிமரபினர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப் பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டோம். பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.
திருப்பாடல்கள் 98: 1. 2-3. 3-4

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். -பல்லவி

3உன உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

அக்காலத்தில் மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: ``இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்'' (லூக்கா 11:30)

யோனா இறைவாக்கினர் பற்றிய கதை விவிலியத்தில் ''யோனா'' என்னும் நூல் வடிவத்தில் உள்ளது. யோனா எந்த விதத்தில் ''அடையாளமாய்'' இருந்தார் எனப் பார்க்கும்போது, மூன்று கருத்துக்கள் வெளிப்படுகின்றன. முதலில் யோனாவைப் பெரியதொரு மீன் விழுங்கிற்று; கடவுளின் கட்டளைப்படி யோனாவை உயிருடன் கரையிலே கக்கிற்று. இதை அடையாளமாகக் கருதினால் இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி இதனால் குறிக்கப்படுகிறது எனலாம். இரண்டாவது, யோனா நினிவே நகருக்குச் சென்று அங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டுவிட்டு மனமாற்றம் அடைந்து, கடவுளிடம் திரும்பவேண்டும் என போதித்ததை நாம் அடையாளமாகக் கருதலாம். இயேசுவும் மக்கள் மனமாற்றம் பெற்று இறையாட்சியில் புக வேண்டும் என போதித்தார். மூன்றாவது, யோனா நினிவே மக்கள் மீது கடவுளின் தண்டனை வரும் எனப் போதித்ததை அடையாளமாகக் கொள்ளலாம். அப்படியென்றால், கடவுளாட்சியை ஏற்காதோர் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள் என இயேசு கூறியதைக் குறிப்பதாக விளக்கலாம்.

இயேசு குறிப்பிடுகின்ற ''தலைமுறையினர்'' யார்? முதலில் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களே அவர்கள் எனலாம். மேலும், லூக்கா நற்செய்தி எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அங்கே குறிக்கப்படுகிறார்கள் எனலாம். தொடர்ந்து, இக்கால உலகில் வாழ்கின்ற நாமும் அத்தலைமுறையினருள் அடங்குவோம் எனலாம். எனவே, இயேசுவின் சொற்கள் பண்டைக் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொருந்தும். அந்த இரு காலங்களையும் நாம் மனத்தில் கொண்டு இயேசுவின் போதனையை இக்காலத்தில் வாசிக்கும்போது நாமும் இயேசு குறிப்பிட்ட ''தலைமுறையினராக'' மாறுகிறோம். நமக்கும் இயேசு அடையாளமாக இருக்கிறார். அவர் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்து நமக்குத் தம் உயிரில் பங்களிக்கிறார் என்பது நம் நம்பிக்கை. மேலும் நாம் மனமாற்றம் பெற்ற மக்களாக மாறி இறையாட்சியின் மதிப்பீடுகளை நம் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டிட அழைக்கப்படுகிறோம். தொடர்ந்து, நாம் தவறிழைத்தாலும் நம்மை இடையறாது அணுகிவந்து நம்மில் நற்சிந்தனைகளையும் நற்செயல்களையும் தூண்டியெழுப்புகின்ற சக்தியாக இயேசு உள்ளார். இந்த வேறுபட்ட விதங்களில் நாம் கடவுளின் உடனிருப்பை நம் வாழ்வில் உணர்ந்து, அதிலிருந்து பிறக்கும் மதிப்பீடுகளுக்கு ஏற்ப வாழ்ந்திட வேண்டும். இயேசு என்னும் அடையாளம் நம் வாழ்வை மாற்றியமைக்கின்ற வெற்றிச் சின்னமாக மாறிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் மனமாற்றம் பெற்று உம்மை விடாது பற்றிக்கொள்ள அருள்தாரும்.