யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் புதன்கிழமை
2013-10-09


முதல் வாசகம்

ஆமணக்கு செடிக்காக நீ வருந்துகிறாய்; நினிவே மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?
இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 4: 1-11

அந்நாள்களில் யோனா கடுஞ்சினங் கொண்டு ஆண்டவரிடம் முறையிட்டார். ``ஆண்டவரே, நான் என் ஊரை விட்டுப் புறப்படுமுன்பே இதைத்தானே சொன்னேன்? இதை முன்னிட்டே நான் தர்சீசுக்கு ஓடிப்போக முயன்றேன். நீர் கனிவு மிக்கவர், இரக்கமுள்ளவர், மிகுந்த பொறுமையும் அளவிலா அன்பும் உள்ள கடவுள் என்பது எனக்குத் தெரியும். அழிக்க நினைப்பீர்; பிறகு உம் மனத்தை மாற்றிக்கொள்வீர் என்பதும் எனக்கு அப்போதே தெரியும். ஆகையால் ஆண்டவரே, என் உயிரை எடுத்துக் கொள்ளும். வாழ்வதை விடச் சாவதே எனக்கு நல்லது'' என்று வேண்டிக்கொண்டார். அதற்கு ஆண்டவர், ``நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?'' என்று கேட்டார். யோனாவோ நகரை விட்டு வெளியேறினார்; நகருக்குக் கிழக்கே போய் உட்கார்ந்து கொண்டார். பிறகு அவர் தமக்கு ஒரு பந்தலை அங்கே அமைத்துக் கொண்டு, நகருக்கு நிகழப் போவதைப் பார்ப்பதற்காக அதன் நிழலில் அமர்ந்திருந்தார். கடவுளாகிய ஆண்டவரது ஏற்பாட்டின்படி ஆமணக்குச் செடி ஒன்று அங்கே முளைத்தது. அது வளர்ந்து யோனாவின் தலைக்கு நிழல் தந்து அவரது மனச்சோர்வை நீக்கியது. அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு யோனா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் ஆண்டவரது கட்டளைப்படி மறுநாள் பொழுது விடியும் நேரத்தில் ஒரு புழு வந்து அந்த ஆமணக்குச் செடியை அரிக்கவே, செடி உலர்ந்து போயிற்று. கதிரவன் எழுந்தபின் கடவுளின் கட்டளைப்படி, கிழக்கிலிருந்து அனற்காற்று வீசிற்று. கடும் வெயில் யோனாவின் தலையைத் தாக்கவே அவருக்கு மயக்கம் உண்டாயிற்று. ``வாழ்வதை விடச் சாவதே எனக்கு நல்லது'' என்று அவர் சொல்லி, தமக்குச் சாவு வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார். அப்பொழுது கடவுள் யோனாவை நோக்கி, ``ஆமணக்குச் செடியைக் குறித்து நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?'' என்று கேட்டார். அதற்கு யோனா, ``ஆம், முறைதான்; செத்துப்போகும் அளவுக்கு நான் சினங் கொள்வது முறையே'' என்று சொன்னார். ஆண்டவர் அவரை நோக்கி, ``அந்தச் செடி ஓர் இரவில் முளைத்தெழுந்து, மறு இரவில் முற்றும் அழிந்தது. நீ அதற்காக உழைக்கவும் இல்லை. அதை வளர்க்கவும் இல்லை. அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே! இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கை எது, இடக்கை எது என்று கூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிறந்த கால்நடை களும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
திருப்பாடல்கள் 86: 3-4. 5-6. 9-10

3 என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 4 உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். பல்லவி

5 என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். 6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். பல்லவி

9 என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். 10 ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4

அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, ``ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்'' என்றார். அவர் அவர்களிடம், ``நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்'' என்று கற்பித்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தந்தருளும்'' (லூக்கா 11:3)

கோதுமை மாவைப் பிசைந்து செய்யப்பட்ட அப்பம் மத்தியதரைக் கடல் பகுதிவாழ் மக்களின் அன்றாட உணவு. வேறு பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் அன்றாட உணவு சோறு அல்லது கிழங்கு வகைகளாக இருக்கலாம். எந்த உணவானாலும் சரி, ஒவ்வொரு நாளும் உயிர்வாழ்வதற்கான உணவைப் பெற்றுக்கொள்ள நாம் நம் கடவுளிடம் வேண்டுகின்றோம். அன்றாட உணவைப் பெற்றுக்கொள்ள நாம் உழைக்கிறோம். ஆனால் உலகில் பல்லாயிரக் கணக்கான மக்கள் உண்ண உணவின்றி வாடுகின்றார்கள். உயிர்வாழத் தேவையான உணவு கிடைத்தாலும் இதயத்தில் எழுகின்ற ஆழ்ந்த பசியைப் போக்க இயலாமல் தவிப்போரும் உண்டு. ஆக, கடவுளை நோக்கி நாம் ஒவ்வொரு நாளும் நமக்குத் தேவையான உணவைத் தரும்படி மன்றாடக் கடமைப்பட்டிருக்கின்றோம். உழைப்பின் பயனால் நிலத்தில் விளைகின்ற பயிர் மனிதரின் பசியை ஆற்ற உதவுகிறது. ஆனால் அந்த நிலம் விளைச்சல் தர வேண்டும் என்றால் கடவுளின் கொடையான மழையும் போதிய வெப்பமும் தேவை. இயற்கை வழியாகக் கடவுள் வழங்குகின்ற கொடைகள் இல்லாவிட்டால் நம் வாழ்க்கையே முடிவடைந்துவிடும்.

ஆனால் மனித இதயத்தில் எழுகின்ற பசி பற்றி என்ன சொல்வது? அன்புதான் மனிதரின் ஆழ்ந்த இதய வேட்கையை நிறைவுசெய்ய இயலும். கடவுளின் அன்புப் பெருக்கிலிருந்து தாராளமாகப் பெறுகின்ற நாம் மனிதரோடு அன்பினைப் பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். உள்ளத்தில் மகிழ்ச்சியும், உறவுகளில் நேர்மையும், வாழ்க்கையில் குறிக்கோளும், மன்னித்து ஏற்கின்ற மனநிலையும், ஆழ்ந்த அமைதியும் நம் இதயப் பசியைக் போக்குகின்ற அன்றாட உணவாக உள்ளன. இந்த உணவையும் நாம் கடவுளிடம் வேண்டிக் கேட்கின்றோம். ஒவ்வொரு மனிதரும் இந்த உணவைத் தம்மை அடுத்திருப்போரோடு பகிர்ந்துகொண்டால் இவ்வுலகில் மனித வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையும். எனவே, கடவுளிடம் உணவுக்காக வேண்டும் வேளையில் பிறரோடு உணவைப் பகிர்ந்துகொள்கின்ற மனநிலையை நமக்குத் தருமாறு வேண்டுகிறோம். அப்போது இயேசு நமக்குச் சொல்லித் தந்த இறைவேண்டல் (லூக்11:1-4) பொருளுடைத்ததாக மாறும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் பசியை ஆற்றிட உணவாக வந்தருளும்.