யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-10-08


முதல் வாசகம்

நினிவே மக்கள் தீய வழிகளினின்று விலகியதைக் கண்டு, ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொண்டார்.
இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர் ``நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி'' என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில், ``இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்'' என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக் கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். ``இதனால் அரசரும் அரசவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீயவழிகளையும், தாம் செய்துவரும் கொடும் செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.'' கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2
திருப்பாடல்கள் 130: 1-2. 3-4. 7-

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ``ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்'' என்றார். ஆண்டவர் அவரைப் பார்த்து, ``மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, 'ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்' என்றார்'' (லூக்கா 10:40)

மார்த்தாவும் மரியாவும் இரண்டு துருவங்கள் என்றும், ஒருவர் மற்றவருக்கு எதிரான நிலைக்கு உருவகமாகக் காட்டப்படுகிறார் என்றும் விளக்கம் தருவது வழக்கம். மார்த்தா செயல்முறை வாழ்வுக்கும் மரியா தியான வாழ்வுக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா இவ்வுலக நிலைக்கும் மரியா மறுவுலக நிலைக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா யூத மரபுக்கும் மரியா கிறிஸ்தவ மரபுக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா செயல்வழி மீட்பு என்பதற்கும் மரியா நம்பிக்கைவழி மீட்பு என்பதற்கும் உருவகம் என்பார்கள். இவ்வாறு மார்த்தாவையும் மரியாவையும் எதிர் துருவங்களாகக் காண்பது சரியல்ல. விவிலிய அறிஞர் கருத்துப்படி, மார்த்தாவும் மரியாவும் இயேசுவை நாம் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளார்கள். மார்த்தா என்னும் சொல்லுக்குத் ''தலைவி'' என்பது பொருள். மார்த்தா இயேசுவைத் தம் வீட்டில் வரவேற்கிறார். அவர் பல பணிகளைச் செய்கிறார். ஏதோ உணவு தயாரித்துப் பரிமாறுவது மட்டுமல்ல இப்பணி. மார்த்தா உண்மையிலேயே வீட்டுத் தலைவியாக இருந்ததால் எல்லாப் பொறுப்புகளும் அவரிடம் இருந்தன. அந்நாட்களில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் கூடி இறைவார்த்தையைக் கேட்டு, நற்கருணைக் கொண்டாட்டம் நிகழ்த்தினார்கள். இத்தகைய ஒரு ''இல்லத் திருச்சபை''யில் நிகழும் பணிகளுக்கு மார்த்தா உருவகமாகிறார். மரியா இயேசுவின் காலடி அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். லூக்கா நற்செய்தியில் இயேசு பல முறை ''கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதைச் செயல்படுத்தவேண்டும்'' எனக் கூறுகிறார் (காண்க: லூக் 8:21). அவ்வாறு செயல்படுவோர் இயேசுவின் குடும்பத்தினர் ஆவர் (லூக் 8:21).

எனவே, மரியா இயேசுவின் வார்த்தையைக் ''கேட்டுக்கொண்டிருந்தார்'' என்றால் மரியா அந்த வார்த்தையைச் ''செயல்படுத்திக் கொண்டிருந்தார்'' எனலாம். மார்த்தா இயேசுவிடம் சென்று முறையிட்டார் என்பதை விட ஒரு கோரிக்கையை அவர்முன் வைத்தார் என்பதே பொருத்தம். அந்த வேண்டுதலுக்கு இயேசு அளித்த பதில்மொழி நமக்குச் சிறந்த பாடமாக உள்ளது. அதாவது, மார்த்தாவும் மரியாவும் சகோதர உறவால் இணைந்தவர்கள். அவர்களிடையே நிலவியது இரத்த உறவு மட்டுமல்ல, மாறாக, இயேசுவிடம் நம்பிக்கை கொண்ட குழுவைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் ஒரு புதிய குடும்பத்தில் உறுப்பினராக உள்ளனர். அந்த உறவின் அடிப்படையில் அவர்களிடையே மிக நெருக்கமான ஒத்துழைப்பும் ஒற்றுமையும் நிலவ வேண்டும். இயேசுவின் சீடர்களாக அழைக்கப்பட்டவர்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல் அதைச் செயல்படுத்தவும் வேண்டும். செயல்பாட்டில் தங்கள் கவனத்தை முழுவதும் செலுத்தாமல் தொடர்ந்து கடவுளின் வார்த்தையைக் கேட்க வேண்டும். வார்த்தைக்குச் செவிமடுத்தலும் அதைச் செயல்படுத்தலும் இணைந்து செல்லும்போது அங்கே நிறைவான சீடத்துவம் துலங்கும். அதாவது, இயேசுவின் சீடராக விரும்புவோர் இறைவார்த்தையைக் ''கேட்க வேண்டும்''; அதைச் ''செயல்படுத்த வேண்டும்''. அப்போது மார்த்தாவும் மரியாவும் ஒன்றிணைந்து நமக்கு முன்மாதிரியாக மாறுவார்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் வார்த்தையை எப்போதும் கேட்டு அதை வாழ்வில் செயல்படுத்த எங்களுக்கு அருள்தாரும்