யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-10-04

புனித பிரான்சிஸ் (அசிசி)


முதல் வாசகம்

நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை;
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 15-22

நீங்கள் சொல்ல வேண்டியது: நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நீதி உரியது. ஆனால் நமக்கும், யூதாவின் மக்கள், எருசலேமின் குடிகள், நம் அரசர்கள், தலைவர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மூதாதையர்கள் ஆகிய அனைவருக்கும் இன்று போலத் தலைக்குனிவுதான் உரியது. ஏனெனில், ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளின்படி நடக்கவுமில்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த நாளிலிருந்து இன்றுவரை நாம் அவருக்குப் பணிந்து நடக்கவில்லை; அவரது குரலுக்குச் செவிசாய்ப்பதில் ஈடுபாடு கொள்ளாமல் இருந்துவிட்டோம். ஆகவேதான், பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை நமக்குக் கொடுக்கும் பொருட்டு, எகிப்து நாட்டிலிருந்து நம் மூதாதையரை ஆண்டவர் அழைத்து வந்தபொழுது, தம் அடியாரான மோசே வாயிலாக அவர் அறிவித்திருந்த கேடுகளும் சாபங்களும் இன்றுவரை நம்மைத் தொற்றிக் கொண்டுள்ளன. மேலும், நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மிடம் அனுப்பி வைத்த இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய சொற்கள் எவற்றுக்கும் நாம் செவிசாய்க்கவில்லை. மாறாக, நம்மில் ஒவ்வொருவரும் நம் தீய உள்ளத்தின் போக்கில் நடந்தோம்; வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்தோம்; நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீயன புரிந்தோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்;
திருப்பாடல்கள் 79: 1-2. 3-5. 8. 9

1 கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்; உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர். எருசலேமைப் பாழடையச் செய்தனர். 2 உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள். -பல்லவி

3 அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்; அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை. 4 எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்; எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம். 5 ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ? -பல்லவி

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். -பல்லவி

9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில் இயேசு கூறியது: ``கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர். எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

மனம் மாறாதோருக்கு ஐயோ கேடு!

இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்தியும் மனம் மாறாத நகர்கள்மீது இயேசு தொடுக்கும் கண்டணக் கணைகளே இன்றைய நற்செய்தி.

இந்த நகர்களில் வாழ்ந்த மக்கள் இயேசுவின் அருமையான போதனைகளைப் பலமுறை கேட்டனர். அவர் நிகழ்த்திய அருஞ்செயல்களை, வியப்புக்குரிய புதுமைகளைக் கண்டனர். இருப்பினும், இயேசுவின் போதனையின்படி அவர்கள் வாழவில்லை. வாழ விரும்பவில்லை. இது இயேசுவுக்கு ஏமாற்றத்தை மட்டுமல்ல, சினத்தையும் உருவாக்கியது என்று இந்த வாசகம் எடுத்துக்காட்டுகிறது.

நமது வாழ்வை அலசிப் பார்த்தால், இந்த நகரத்து மக்களிலிருந்து நாம் அதிகம் வேறுபடவில்லையோ என்று தோன்றலாம். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இறைவன் வியத்தகு செயல்கள் பலவற்றைச் செய்துள்ளார். நம்மைச் சாவினின்றும், தீமைகள், நோய்கள், ஆபத்துகளினின்றும் எத்தனையோ முறை காத்திருக்கிறார். நாம் வேண்டியதற்கும், விரும்பியதற்கும் மேலாகவே நம்மை ஆசிர்வதித்திருக்கிறார். நன்மைகளால் நம் வாழ்வை நிறைவுசெய்துள்ளார்.

இருப்பினும், நம் வாழ்வு நன்றியின் வாழ்வாக, சான்று பகரும் வாழ்வாக அமையவில்லையே? மனம் வருந்துவோமா? மனம் மாறுவோமா?

மன்றாட்டு:

நன்மையின் ஊற்றே இறைவா, உம்மைப் போற்றுகிறேன். என் வாழ்வில் நீர் செய்த எண்ணிலடங்காத நன்மைகளையெல்லாம் நினைத்து நன்றி கூறுகிறேன். உமது வியத்தகு செயல்களால் நான் மகிழ்ந்திருந்தும், என் வாழ்வு நன்றியின் வாழ்வாக, சாட்சியின் வாழ்வாக அமையாததற்காக மன்னிப்பு வேண்டுகிறேன. ஆண்டவரே, என்னை மன்னியும். என் வாழ்வு மன மாற்றத்தின் வாழ்வாக அமைய அருள்தாரும். ஆமென்.