யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-10-01

குழந்தை இயேசுவின் புனித தெரேசா


முதல் வாசகம்

ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14

எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு
திருப்பாடல்கள் 131: 1. 2. 3

1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாய் உள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, ``விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?'' என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: ``நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

54 அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள். 55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். (லூக்கா 9:54-55)

இந்த மூன்று மனிதர்களுக்கும் நல்ல வாழ்வு வேண்டும்,நான்குபேருக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நல்ல ஆசை. ஆண்டவன் அருள் வேண்டும், அவர் தரும் ஆற்றலால் அன்புப் பணிபுரிந்து மகிழவேண்டும் என்ற நல்ல எண்ணம்.

ஆனால் மூவரும் மூன்று காரணங்களால், நல்ல எண்ணம் செயலாக்கம் பெறாமல் முடமாகிவிடுகின்றனர். ஆயினும், இயேசு அவர்களை முறைப்படுத்துவதைப் பார்க்கிறோம். இரு மனம் கொண்டவன் முதல் மனிதன்.அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும், இறைவனும் வேண்டும் அலகையும் வேண்டும், அருளும் வேண்டும் பொருளும் வேண்டும். வெளியே ஒன்று உள்ளே மற்றொன்று. உள்ளத்தை ஊடுறுவி கண்ட இயேசு, அவனது எண்ணமெல்லாம் சொத்து சுகம், வசதி வாய்ப்பு,பணம் பதவி இவற்றைச்சுற்றி வட்டமிடுவதை உணர்த்தி, நிவர்த்தி செய்ய அறிவுரை கூறுகிறார்.

இரண்டாமவன், கடமை உணர்வை ஒரு சாக்குப்போக்காகச் சொல்கிறான். பெற்றோரைப் பேணவேணடும், இறந்தால் அடக்கம் செய்ய வேண்டும். இப்படிச் சொல்லியே ஆண்டவனுக்கும் அயலானுக்கும் பணிசெய்யும் வாய்ப்பைக் கடத்திவிடுகிறான்.

மூன்றாமவன், ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று காத்திருந்ததுபோல, விடைபெற்று வர அனுமதி கேட்டு வாய்ப்பை நழுவ விடுகிறான். ஓன்று தெழிவாகிறது. ஆண்டவனுக்கும் அயலானுக்கும் அன்புப் பணி செய்வது மனித இயல்பு. எனவேதான் சந்தித்த எவரிடமும் சரி, அப்படியானால் வேண்டாம், பிறகு பார்த்துக்கொள்ளலாம், நீ வேண்டாம் என்று இயேசு சொல்லவில்லை. மாறாக மூவரின் குறைகளையும் நிவர்த்திசெய்து பணிசெய்து மகிழ ஆலோசனை சொல்கிறார்.

மன்றாட்டு:

இறைவா,என்நிலையலும் எப்பொழுதும் என்னால் முடிந்த அன்புப்பணிசெய்ய அருள்தாரும்.