யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் திங்கட்கிழமை
2013-09-30

புனித ஏரோணிமுஸ்


முதல் வாசகம்

உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 1-8

அந்நாள்களில் படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ``சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்றுகொண்டிருக்கின்றேன்; அதன்மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன்.'' ஆண்டவர் கூறுவது இதுவே: ``சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்; எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்; எருசலேம் `உண்மையுள்ள நகர்' என்றும், படைகளின் ஆண்டவரது மலை `திருமலை' என்றும் பெயர்பெற்று விளங்கும்.'' படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ``எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்; வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்; நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்; அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.'' படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ``இம்மக்களில் எஞ்சியிருப் போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ?'' என்கிறார் படைகளின் ஆண்டவர். படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ``இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்; அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்; உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;
திருப்பாடல்கள் 102: 15-17. 18,20,19. 28,21-22

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். -பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். பல்லவி

28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்! 21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். 22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்'' என்றார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50

அக்காலத்தில் தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறுபிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், ``இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்'' என்றார். யோவான் இயேசுவைப் பார்த்து, ``ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்'' என்றார். இயேசு அவரை நோக்கி, ``தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு, 'நமக்கு எதிராக இராதவர் நமக்குச் சார்பாக இருக்கிறார்' என்றார்'' (லூக்கா 9:50)

இயேசு தீய ஆவிகளிடமிருந்து பிணியாளர்களுக்கு விடுதலை அளித்தார் என்னும் செய்தியை நற்செய்தி நூல்கள் பல தருணங்களில் குறிப்பிடுகின்றன. தீய ஆவிகளை ஓட்டுகின்ற அதிகாரத்தையும் வல்லமையையும் இயேசு தம் சீடர்களுக்கும் கொடுத்தார். அவர்கள் அந்த அதிகாரம் தமக்கு மட்டுமே உண்டு என நினைத்த தருணத்தில் இயேசு அவர்களது தப்பான கருத்தைத் திருத்துகிறார். சீடர்கள் ''நம்மைச் சாராதவர்'' என ஒரு சிலரை ஒதுக்குவது சரியல்ல என இயேசு சுட்டிக் காட்டுகிறார் (லூக் 9:51). சீடர்கள் கருத்துப்படி, அவர்களுக்கு இயேசு தனி அதிகாரம் கொடுத்ததால் அவர்களுக்கு மட்டுமே தீய ஆவிகளைத் துரத்துவதற்கு உரிமை உண்டு. அவர்களது குழுவைச் சாராத வேறு எவரும் இயேசுவின் பெயரால் அதிசய செயல்களைச் செய்வது முறையல்ல. இயேசு இக்கருத்தை ஏற்கவில்லை. கடவுள் வழங்குகின்ற அதிகாரமும் சக்தியும் குறிப்பிட்ட எல்லைகளுக்குள்ளே அடக்கப்பட வேண்டும் எனக் கோருவது முறையல்ல என இயேசு காட்டுகிறார். கடவுள் தாம் விரும்பிய மனிதருக்குத் தம் விருப்பப்படியே தம் வல்லமையை அளிக்க முடியும். அதை நிர்ணயிப்பது மனிதர்கள் அல்ல.

எங்கெல்லாம் நல்லவை நடக்கின்றனவோ அங்கெல்லாம் கடவுளின் செயல் உண்டு என நாம் ஏற்க வேண்டும். நல்லவை நடப்பது நாம் வகுக்கின்ற எல்லைகளுக்கு உள்ளே மட்டுமல்ல, எல்லை மீறியும் நல்லவை நடக்கக் கூடும். எனவே நாம் திறந்த மனத்தோடு கடவுளின் செயலைப் பார்க்க வேண்டுமே ஒழிய நமது குறுகிய பார்வையைக் கடவுளின் பார்வையாகக் கருதக் கூடாது. இன்றும்கூட, சிலர் திருச்சபை மட்டுமே கிறிஸ்துவைப் பறைசாற்ற வேண்டும் என நினைக்கின்றனர். திருச்சபையின் வெளி அமைப்புக்கு உள்ளே உறுப்பினராக இல்லாதவர்களும்கூட கடவுளின் வல்லமையால் செயல்படக் கூடும் என்பதை நாம் ஏற்க வேண்டும். அவர்கள் கிறிஸ்தவமல்லாத பிற சயமத்தவராகவும் இருக்கலாம். எனவே, எத்தனையோ நல்ல மனிதர்கள் வெளிப்படையாகக் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைக் கொண்டிராவிடினும் நம் கருத்துகளுக்கு அப்பாற்பட்டு, கடவுளுக்கே தெரிந்த விதத்தில் கிறிஸ்துவின் செயலை ஆற்றுகிறார்கள் என நாம் ஏற்பதே சரி. இந்த உண்மையை இரண்டாம் வத்திக்கான் சங்கம் அழகாக எடுத்துக் கூறுகிறது: ''கிறிஸ்தவர்கள் தம் நம்பிக்கைக்கும் வாழ்விற்கும் சான்று பகருங்கால், கிறிஸ்தவமல்லாச் சமயங்களைப் பின்பற்றுபவர்களோடு முன்மதியுடனும் அன்புடனும் உரையாடல் நிகழ்த்த வேண்டும். அவ்வாறே அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். மேலும் கிறிஸ்தவமல்லாச் சமயங்களைப் பின்பற்றுபவர்களிடத்தில் காணப்படுகின்ற அருள்நெறி மற்றும் அறநெறி சார்ந்த நலன்களையும் சமூக-பண்பாட்டு விழுமியங்களையும் ஏற்றுக்கொண்டு அவற்றைப் பேணி வளர்ச்சியுறச் செய்ய வேண்டும்'' (காண்க: 2ஆம் வத்திக்கான் சங்கம், ''கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருச்சபைக்குள்ள உறவு'', எண் 2). அப்போது நாம் ''நமக்கு எதிராக இராதவர் நமக்குச் சார்பாக இருக்கிறார்'' (லூக் 9:50) என இயேசு கூறிய சொற்களின் பொருளை ஓரளவாவது புரிந்துகொள்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உலகின் பல சூழமைவுகளில் உம் வல்லமை வெளிப்படுவதை நாங்கள் கண்டுணர அருள்தாரும்.