திருவழிப்பாட்டு ஆண்டு C (29-09-2013)

செல்வர் ஒருவர் இருந்தார்...இலாசர் என்னும் பெயர்கொண்ட
ஏழை ஒருவரும் இருந்தார்/> செல்வர் ஒருவர் இருந்தார்...இலாசர் என்னும் பெயர்கொண்ட
ஏழை ஒருவரும் இருந்தார்/> செல்வர் ஒருவர் இருந்தார்...இலாசர் என்னும் பெயர்கொண்ட
ஏழை ஒருவரும் இருந்தார்/> செல்வர் ஒருவர் இருந்தார்...இலாசர் என்னும் பெயர்கொண்ட
ஏழை ஒருவரும் இருந்தார்/>


திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் வாரத்திலிருக்கும் நாம், இன்றைய திருப்பலி வழிபாட்டில் பங்கேற்று இறைமொழிகள் நமக்குக் கூறுவதென்ன என்று அறிய முயலும் இறைமக்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள். தாம் செல்வராயிருந்தும் தம்முடைய ஏழ்மையினால் நாம், செல்வராகுமாறு நமக்காக ஏழையான இயேசு கிறிஸ்துவின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம்.

இன்றைய லூக்கா நற்செய்திக்கு மட்டுமே உரிய அருமையான ஓர் உவமை செல்வரும், லாசரும். இங்கு இயேசு கூறும் நற்செய்தியானது, உண்மையான கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அவருக்கு செவிமடுங்கள். "ஆண்டவரோடு வாழ்கின்றோம் என்ற நம்பிக்கையில் இக்காலத்தில் நாம் அனுபவிக்கின்ற, சந்திக்கின்ற துன்பங்கள் எல்லாவற்றையும் கடந்து மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வோம்" வானதூதர்கள் நம்மையும் ஆபிரகாம் மடியில் நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் நம்மை வாழ அழைக்கின்றார். ஆகவே நாம் அனைவரும் நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் உழைப்போம். ஏழைகள்மேல் இரங்குவோம். இறைவன் தந்த வளங்கள் அனைத்தையும் சரியான முறையில் பயன்படுத்துவோம். இறைவனின் சாட்சிகளாய் வாழ வரம்கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள்
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 6: 1, 3-7

எல்லாம் வல்ல இறைவன் கூறுவது: ``சீயோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடிவருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு! தீய நாளை இன்னும் தள்ளி வைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்; ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள். தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணை மீது சாய்ந்து கிடப்போருக்கும், கிடையிலிருந்து வரும் ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு! அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப் போல புதிய இசைக் கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்; உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக் கொள்கின்றார்கள். ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்; அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் ஒடுக்கப்பட்டடோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்;
திருப்பாடல்கள் 146;7-10

7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டடோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலைஅளிக்கின்றார். -பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9ய ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி

9bஉ அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்துவிடுகின்றார். 10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 11-16

கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலை வாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய். அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவின் முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!`தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31

அக்காலத்தில் இயேசு பரிசேயரிடம் கூறியது: ``செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், `தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப் படுகிறேன்' என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், `மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது' என்றார். அவர், `அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார். அதற்கு ஆபிரகாம், `மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார். அவர், `அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார். ஆபிரகாம், `அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,

உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும், செல்வத்தையும், வளங்களையும் பெற்று மகிழும் நாங்கள் அனைவரும் அவைகளை மற்றவர்களோடு பகிர்ந்து உமது சாட்சிகளாய் வாழ எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருக்கும் ஆண்டவரே

கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெறத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

நீர் வாக்களித்த அனைத்தையும் எமக்கெனச் செய்து முடிக்கும் ஆண்டவரே!

இப் மண்ணிலே புலம்பதித்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்களும், எங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும், உமது அன்பிலிருந்து எங்களைப் பிரிக்க முற்படும் எல்லாவித தீய சக்திகளையும் இனங்கண்டு அவற்றை முறியடித்து, உமக்கேற்றவர்களாக வாழ எமக்கு வேண்டிய ஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியின் நாயகனே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். இவ்வுலகில் இன்பம் மட்டுமே அனுபவித்தவருக்கு மறுவுலகில் விண்ணக பேரின்பத்தையும், துன்பங்களை மட்டுமே அனுபவித்தவர்களுக்கு மறுவுலகில் நிறைமகிழ்வு உண்டு என்று போதித்தீரே, உமக்கு நன்றி. நாங்கள் எங்கள் அருகில் வாழும் தேவை நிறைந்தோரை அன்பு செய்து வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உலகின் ஒளியாக உம்மை வெளிப்படுத்திய இயேசுவே,

உம்மைப் போற்றுகிறோம். தன்னலம் என்னும் பாவத்திலிருந்தும், பிறர்மீது அக்கறை கொள்ளாமல் இன்புற்று வாழும் சமூக அக்கறையற்ற தன்மையிலிருந்தும் எங்களை விடுவித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றவரும்: பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றவருமான தந்தையே!

இன்று வன்முறை, அடக்குமுறை, போன்றவற்றினால் தாக்குண்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், அணைத்து வேதனைகளிலுமிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''செல்வர் ஒருவர் இருந்தார்...இலாசர் என்னும் பெயர்கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்'' (லூக்கா 16:19-20)

இயேசு சொன்ன கதைகள் மக்களை மகிழ்விப்பதற்காக அவர் எடுத்துக்கூறிய புனைவுகள் அல்ல. கதைகள் வழியாக இயேசு மக்களுக்கு இறையாட்சி பற்றி அறிவித்தார். ''செல்வரும் இலாசரும்'' என்னும் கதை லூக்கா நற்செய்தியில் மட்டுமே வருகிறது. லூக்கா பல இடங்களில் செல்வம் பற்றியும் செல்வத்தால் வருகின்ற கேடுகள் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த உவமையில் வருகின்ற ''செல்வர்'' விலையுயர்ந்த ஆடைகள் அணிந்துகொண்டு, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். ஆனால் அவருடைய வாயில் அருகே விழுந்துகிடந்த ஏழை இலாசரோ பசியால் வாடினார்; அவருடைய உடலை மறைக்கக் கூட உடை இல்லை; மாறாக அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. இலாசர் என்னும் ஏழை தம் வீட்டு வாயில் அருகே கிடந்ததைச் செல்வர் கண்டுகொள்ளவில்லை. அவருடைய எண்ணமெல்லாம் அவருடைய நலம் பற்றி இருந்ததே தவிர, அந்த ஏழையைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை; அவருடைய பசியை ஆற்றிட சிறு அப்பத் துண்டு கூடக் கொடுக்கவில்லை.

இன்று நம்மிடையே செல்வர்களும் உண்டு இலாசர்களும் உண்டு. அன்றுபோல இன்றும் செல்வக் கொழிப்பில் உழல்வோர் பலர் ஏழைகளிள் நிலைமையைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். ஏழைகள் ஏழைகளாகளாய் இருப்பதற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று கைகழுவுவோரும் உண்டு. ''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை'' (மத் 25:42) என்னும் சொற்களை நாம் தீர்ப்பு நாளில் கேட்காமலிருக்க வேண்டும் என்றால் இன்றே இப்போதே நம்மைச் சூழ்ந்திருப்போரில், குறிப்பாக ஏழை மக்களில், இயேசுவைக் காண வேண்டும்; அவர்களுடைய பசியை ஆற்றிட முன்வர வேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால் பாதாளத்தில் செல்வர் அனுபவித்த துன்பம் (லூக் 16:24) நமக்கு வராது என நாம் எப்படிக் கூறமுடியும்? இறையாட்சியில் பங்கேற்க விழைவோர் அன்புக் கட்டளையை ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, இரக்கம் நிறைந்த உள்ளத்தோடு நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.