யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் சனிக்கிழமை
2013-09-28

புனித வென்சஸ்லோஸ்


முதல் வாசகம்

இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்' என்கிறார் ஆண்டவர்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 1-5,10-11

நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நூலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன். `எங்கே போகிறீர்?' என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், `எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன்' என்றார். என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார். வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஓடிச் சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: `எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப் போல் இருக்கும்! ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்; அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன்', என்கிறார் ஆண்டவர். `மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்' என்கிறார் ஆண்டவர். அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;
எரே 31: 10. 11-12. 13

10 மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; `இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள். - பல்லவி

11 யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார். 12 அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள். - பல்லவி

13 அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்'' என்றார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43-45

அக்காலத்தில் இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், ``நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்'' என்றார். அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''சீடர்கள் இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை'' (லூக்கா 9:43)

இயேசு நாம் வாழ்கின்ற இருபத்தோராம் நூற்றாண்டில் நம் நடுவே வந்து கடவுளாட்சி பற்றி அறிவிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரை நாம் நம்புவோமா அல்லது அவரைச் சந்தேகக் கண்களோடு பார்ப்போமா? அவர் நமக்கு அறிவிப்பதை நாம் உடனடியாகப் புரிந்துகொள்வோமா? ஒருவேளை நம்மில் சிலர் அவரை முகமலர்ந்து வரவேற்கக் கூடும். வேறு சிலர் அவர் கூறுவது ஏற்கத் தகாதது என ஒதுக்கக் கூடும். இன்னும் சிலர் அவர் கூறுவதைப் புரிந்துகொள்ள முயன்றாலும் அவர் வழங்கும் செய்தி தங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது என நினைக்கக் கூடும். இயேசுவைப் பின்சென்ற சீடர்களுக்கு ஏற்பட்டதும் இத்தகைய அனுபவமே. அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதாக இயேசு செயல்படாத நேரங்கள் இருந்தன. அப்போது சீடர்கள் இயேசு கூறியதைப் புரிந்துகொள்ளாமல் திணறினார்கள்.

இயேசு கடவுளின் பெயரால் வந்திருக்கிறார் என்பதைச் சீடர் ஏற்றுக்கொண்டாலும் அவர் வெற்றிவாகை சூடுகின்ற ஒரு மெசியாவாக இல்லாமல் துன்பங்கள் அனுபவித்து, ஒரு குற்றவாளிபோலக் கொலைத் தண்டனைக்கு ஆளாகப் போகிறார் என்பதைக் கனவிலும் எண்ணிப்பார்க்கவில்லை. எனவே, இயேசு தாம் அனுபவிக்கப் போகிற துன்பங்கள், சாவு பற்றிப் பேசிய போதெல்லாம் சீடர்களின் அறிவுக்கு அது எட்டவில்லை. சிலுவையில் அறையப்பட்டு அவமானச் சாவை இயேசு ஏன் ஏற்றார் என்பது இன்றைக்கும் புரிந்துகொள்ள இயலாப் புதிராகவே உள்ளது. இங்கேதான் கடவுளின் வல்லமை தீமையின் அடக்குமுறைக்குமுன் மண்டியிடுவதுபோல நமக்குத் தோற்றமளிக்கிறது. மனித மதிப்பீடுகளின்படி பார்த்தால் இயேசுவின் சாவு ஒரு பெரும் தோல்வியில்தான் முடிந்தது. ஆனால் கடவுளின் பார்வையில் சிலுவை ஒரு வெற்றியின் சின்னம். கடவுளின் அன்பு மனித அறிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இயேசுவின் சிலுவைச் சாவு சுட்டிக் காட்டுகிறது. சிலுவையில் தொங்கி இறந்த இயேசு சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்தார் என்பதை அனுபவ முறையில் சீடர் எப்போது உணர்ந்தார்களே அப்போதுதான் அவர்கள் சிலுவையின் பொருளை ஓரளவாவது புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். இன்று வாழ்கின்ற நமக்கும் சிலுவை பற்றிய அறிவு ஆழப்பட வேண்டும். கடவுளின் அன்பு நம்மை வழிநடத்துகிறது என நாம் அனுபவத்தில் உணர்ந்தால் சிலுவையின் பொருளை நாம் ஓரளவாவது புரிந்துகொள்வோம்.

மன்றாட்டு:

இறைவா, சிலுவைச் சாவின் வழியாக இயேசு எங்களுக்குக் கற்பித்த பாடத்தை நாங்கள் ஒவ்வொரு நாளும் கற்று அறிந்திட எங்களுக்கு அருள்தாரும்.