யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-09-20

புனித அன்றூ


முதல் வாசகம்

விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 2-12

அன்பிற்குரியவரே, இவற்றை நீ கற்பித்து ஊக்குவி. மாற்றுக் கொள்கைகளைக் கற்பித்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நலம் தரும் வார்த்தைகளுக்கும், இறைப் பற்றுக்குரிய போதனைகளுக்கும் ஒத்துப்போகாதவர்கள், தற்பெருமை கொண்டவர்கள்; ஒன்றும் தெரியாதவர்கள்; விவாதங்களிலும் சொற்போர்களிலும் பைத்தியம் கொண்டவர்கள். பொறாமை, போட்டி மனப்பான்மை, பழிச்சொல், பொல்லாத ஊகங்கள், ஓயாத மோதல்கள் முதலியன இவற்றிலிருந்தே உண்டாகின்றன. உண்மையை இழந்தவர்களிடமும் சீரழிந்த மனத்தைக் கொண்டவரிடமும் இவை காணப்படுகின்றன. இறைப் பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும். உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக்கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக் கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக்கொள்கிறார்கள். கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்?
திருப்பாடல்கள் 49: 5-6. 7-9. 16-17. 18-19

5 துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்? 6 தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப் பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். பல்லவி

7 உண்மையில், தம்மைத் தாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது; தம் உயிரை மீட்க எதையும் கடவுளுக்குத் தர இயலாது. 8 மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது; எவராலும் அதனைச் செலுத்த இயலாது. 9 ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திட முடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா? பல்லவி

16 சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே! 17 ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை; அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை. பல்லவி

18 உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், `நீங்கள் நன்மையையே நாடினீர்கள்' என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும், 19 அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்; ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3

அக்காலத்தில் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''மக்தலா மரியாவும் ...யோவான்னாவும் சூசன்னாவும் இயேசுவோடு இருந்தார்கள்'' (லூக் 8:2-3)

இயேசு தேர்ந்துகொண்ட சீடர்கள் எல்லாருமே ஆண்களா அல்லது அவர் பெண்களையும் தேர்ந்துகொண்டாரா? பன்னிரு திருத்தூதர்கள் ஆண்கள்தான் என்பது நற்செய்தியிலிருந்து தெரியவருகிறது. ஆனால் சீடர் குழு என்பது பன்னிருவர் குழுவை விடவும் பரந்தது. இயேசு ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் தம் சீடராகச் சேர்த்துக்கொண்டார் என்பது நற்செய்தியிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இப்பெண்களில் ஒருசிலர் பெயர்கள் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன. மக்தலா மரியா, யோவான்னா, சூசன்னா (லூக் 8:2-3) என்று நற்செய்தியாளர் குறிப்பிடுகின்ற மூவரும் யார் என்பது பற்றி ஒருசில தகவல்கள் உள்ளன. இவர்கள் இயேசுவின் சீடர்களாக இருந்து அவரிடமிருந்து இறையாட்சி பற்றிய நற்செய்தியைக் கேட்டு அறிந்தார்கள். பன்னிரு திருத்தூதர்களுக்கும் அடுத்த நிலையில் இப்பெண்கள் குறிக்கப்படுகிறார்கள் (லூக் 8:1-2). இயேசு தம் பணியைத் தொடங்கிய நாள்களிலிருந்தே இப்பெண்கள் அவரோடு இருந்தார்கள். ''ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மரியா'' மக்தலா என்னும் இடத்தைச் சார்ந்தவர். இயேசுவின் காலடிகளை நறுமணத் தைலத்தால் பூசிய ''பாவியான பெண்'' இவரல்ல என்பது இன்றைய அறிஞர் கருத்து (லூக் 7:36-50). சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசுவை முதலில் கண்டவரும் அந்த மகிழ்ச்சியான செய்தியை ஓடிச்சென்று திருத்தூதர்களுக்கு அறிவித்தவரும் இந்த மக்தலா மரியா (காண்க: லூக் 24). அடுத்தபடியாகக் குறிக்கப்படுகின்ற யோவான்னா என்பவரும் இயேசுவின் சீடராக இருந்தவரே. சமுதாயத்தில் மேல்மட்டத்தவராயிருந்த இவர் ''ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி'' (லூக் 8:3). மூன்றாவது குறிக்கப்படுகின்ற சூசன்னா என்னும் பெண் பற்றி வேறு தகவல்கள் இல்லை.

மக்தலா மரியா, யோவான்னா, சூசன்னா என்னும் மூன்று பெண்கள் மட்டுமன்றி வேறு ''பல பெண்களும் இயேசுவோடு இருந்தார்கள்'' (லூக் 8:3) என லூக்கா கூறுவதிலிருந்து இப்பெண்கள் ஊர் ஊராகச் சென்று போதித்த இயேசுவோடு சென்றார்கள் என அறிகிறோம். அவர்களிடையே சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களும் வசதிபடைத்தவர்களும் இருந்தார்கள். பெண்களையும் தம் சீடராக அழைத்த இயேசு ஆண்-பெண் சமத்துவத்தைப் போற்றுவதை இவண் காண்கின்றோம். பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்னும் கருத்து நிலவிய அச்சமுதாயத்தில் இயேசு பெண்களைச் சீடர்களாகக் கொண்டது புரட்சிகரமானதுதான். மேலும் இப்பெண்கள் இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டதோடு, அவருடைய வல்லமையால் நோயிலிருந்து குணமடைந்து நலமும் பெற்றிருந்தனர். இவ்வாறு இயேசுவின் பணி அவர்களுக்குப் பலன் தருவதாயிற்று. அவர்கள் பெற்ற கொடைக்கு நன்றி கூறுவதுபோல அவர்கள் இயேசுவின் பணி நல்முறையில் நடந்திட துணைசெய்தார்கள் (லூக் 8:3). சிலுவையில் தொங்கி இறந்த இயேசுக் கைவிட்டு ஓடவில்லை இப்பெண்கள். மாறாக, அவரோடு இறுதி வரை இருந்தார்கள். மேலும் கல்லறைக்கு முதன்முதலாகச் சென்றவர்களும் அவர்களே. இயேசுவை நாம் முழு உள்ளத்தோடு பின்செல்ல வேண்டும் என்பதற்கு மக்தலா மரியாவும் யோவான்னாவும் சூசன்னாவும் சிறந்த எடுத்துக்காட்டு.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவை நாங்கள் மன உறுதியோடு பின்சென்றிட அருள்தாரும்.