யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் புதன்கிழமை
2013-09-18


முதல் வாசகம்

`மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்;
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-16

அன்பிற்குரியவரே, நான் விரைவில் உன்னிடம் வருவேன் என்னும் எதிர்நோக்குடன் இவற்றை உனக்கு எழுதுகிறேன். நான் வரக் காலம் தாழ்த்தினால், நீ கடவுளின் வீட்டாரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை இத்திருமுகத்தின் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். இவ்வீட்டாரே வாழும் கடவுளின் திருச்சபை; இத்திருச்சபை உண்மைக்குத் தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது. நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது என்பதில் ஐயமே இல்லை. அது பின்வருமாறு: ``மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்; வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்; உலகினரால் நம்பிக்கையோடு ஏற்கப்பெற்றார்; மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்;
திருப்பாடல்கள் 101; 1-6

1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. 4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். பல்லவி

5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்; 6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-35

அக்காலத்தில் இயேசு, ``இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு `நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை' என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவும் இல்லை; திராட்சை மது குடிக்கவும் இல்லை; அவரை, `பேய் பிடித்தவன்' என்றீர்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, `இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறீர்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை'' (லூக்கா 7:32)

இயேசுவின் போதனைகளில் சிறிதும் பெரிதுமாகப் பல கதைகள் உண்டு. அவை பெரும்பாலும் ''உவமை'' என்னும் வகையைச் சார்ந்தவை. அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து மக்களுக்கு அரிய பாடங்களைப் புகட்டியவர் இயேசு. ஒரு நாள் இயேசு சந்தை வெளியில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்க்கிறார். அவரும் சிறு வயதில் அவ்வாறு விளையாடியது அவருடைய நினைவுக்கு வருகிறது. சிறுவர்கள் இரு பிரிவினராக அமர்ந்து விளையாட்டைத் தொடங்குகிறார்கள். முதல் பிரிவினர் என்ன செய்கிறார்களோ அதற்குப் பதில் தருவதுபோல இரண்டாம் பிரிவினர் செயல்பட வேண்டும். முதல் பிரிவினர் குழல் ஊதி இசை எழுப்பினால் இரண்டாம் பிரிவினர் அந்த இசைக்கு ஏற்ப நடனமான வேண்டும். முதல் பிரிவினர் ஒப்பாரி வைத்தால் இரண்டாம் பிரிவினர் அவர்களோடு சேர்ந்துகொண்டு அழ வேண்டும். இவ்வாறு மாறி மாறி செய்யும்போது விளையாட்டில் எல்லாரும் கலந்துகொண்டு மகிழ முடியும். ஒப்பாரி வைத்தவர்கள் எதிர்பார்த்தது என்ன? பிறர் தங்களுடைய எண்ணத்தை அறிந்து அதற்கு ஏற்பச் செயல்பட்டு, அழ வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல இரண்டாம் பிரிவினர் அழவில்லை. இதனால் விளையாட்டு திடீரென முடிவுக்கு வருகிறது.

இக்கதை வழியாக இயேசு புகட்டும் பாடம் என்ன? பிறர் என்னென்ன விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என நாம் முன்கூட்டியே தீர்மானித்து அவர்களிடமிருந்து நாம் விரும்புகின்ற நடத்தையை எதிர்பார்க்கிறோம். நாம் எதிர்பார்ப்பது போல நடக்காவிட்டால் ஏமாற்றம் அடைகிறோம். கடவுள் என்றால் இப்படி இப்படி இருக்க வேண்டும்; எனக்கு இதையும் அதையும் செய்ய வேண்டும்; நான் கேட்கும் இந்த இந்த வேண்டுதல்களுக்குச் செவிமடுக்க வேண்டும் என்றெல்லாம் நாம் கடவுளுக்கு அறிவுரை கூற முற்பட்டுவிடுகிறோம். ஆனால் கடவுள் என்ன விரும்புகிறார், கடவுள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்று கேட்கத் தவறிவிடுகிறோம். நமது கற்பனையில் தோன்றுவதெல்லாம் நிகழ வேண்டும் என எதிர்பார்ப்பது ''ஞானம்'' அல்ல; மாறாக உண்மையான ''ஞானம்'' எங்குள்ளதோ அங்கே நாம் அதைத் தேட வேண்டும். நமக்கு ஞானத்தைக் கற்பிப்பவர் இயேசு தானே!

மன்றாட்டு:

இறைவா, எங்கள் தனிப்பட்ட விருப்பத்தைப் பிறர் மேல் திணிக்காமல் உமது விருப்பத்தை அறிந்து அதன்படி நடக்க எங்களுக்கு அருள்தாரும்.