யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-09-17

புனித ரொபேட் பெர்லாமின்


முதல் வாசகம்

தமது சொந்தக் குடும்பத்தை நடத்தத் தெரியாத ஒருவரால், கடவுளின் சபையை எவ்வாறு கவனிக்க முடியும்?
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-13

அன்பிற்குரியவரே, சபையைக் கண்காணிக்கும் பொறுப்பை நாடுகிற எவரும் மேன்மையானதொரு பணியை விரும்புகிறார். இக்கூற்று உண்மையானது. ஆகவே, சபைக் கண்காணிப்பாளராக இருப்பவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு மனைவி கொண்டவராயும், அறிவுத் தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றை உடையவராயும் இருக்க வேண்டும். அவர் குடி வெறிக்கும் வன்முறைக்கும் இடங்கொடாது, கனிந்த உள்ளத்தவராய் இருக்க வேண்டும்; சண்டையையும் பொருளாசையையும் தவிர்ப்பவராக இருக்க வேண்டும்; தமது சொந்தக் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி, தம் பிள்ளைகள் பணிவுடனும் மிகுந்த கண்ணியத்துடனும் வளர ஆவன செய்பவராக இருக்க வேண்டும். தமது சொந்தக் குடும்பத்தை நடத்தத் தெரியாத ஒருவரால், கடவுளின் சபையை எவ்வாறு கவனிக்க முடியும்? திருச்சபையில் புதிதாகச் சேர்ந்த ஒருவர் கண்காணிப்பாளராகக் கூடாது. அவ்வாறு ஆவாரானால் அவர் தற்பெருமை கொள்ளலாம். அதனால் அலகைக்குக் கிடைத்த தண்டனையை அவர் அடைய நேரிடும். சபைக் கண்காணிப்பாளர் திருச்சபைக்கு வெளியே உள்ளவர்களிடமும் நற்சான்று பெற்றவராய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் இழிச் சொல்லுக்கு ஆளாகலாம்; அலகையின் கண்ணியிலும் விழ நேரிடலாம். அவ்வாறே திருத்தொண்டர்களும் கண்ணியம் உடையவர்களாக இருக்க வேண்டும்; இரட்டை நாக்கு உள்ளவர்களாகவும் குடிவெறிக்கு அடிமைப்பட்டவர்களாகவும் இழிவான ஊதியத்தின் மேல் ஆசை உள்ளவர்களாகவும் இருத்தலாகாது. எச்சரிக்கை! தூய மனச்சான்று உடையவர்களாய் விசுவாசத்தின் மறைபொருளைக் காத்து வரவேண்டும். முதலில் இவர்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் குறையற்றவர்கள் எனக் காணப்பட்டால் திருப்பணியாற்றலாம். அது போலவே பெண்களும் கண்ணியமுடையவராயும் புறங்கூறாதவராயும் அறிவுத் தெளிவு உடையவராயும் எல்லாவற்றிலும் நம்பத்தக்கவராயும் இருக்கவேண்டும். திருத்தொண்டர்கள் ஒரு மனைவி கொண்டவர்களாயும், பிள்ளைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நல்ல முறையில் நடத்துகிறவர்களாயும் இருக்க வேண்டும். நன்கு திருத்தொண்டு ஆற்றுவோர் உயர் மதிப்புப் பெறுவர். இயேசு கிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையைக் குறித்து அதிகத் துணிவோடு பேசுவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன்.
திருப்பாடல்கள்101;1-3,5-6

1 இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன். 2 மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்; எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? பல்லவி

2உ தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன். 3யb இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறி தவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன். பல்லவி

5 தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்; கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். பல்லவி

6 நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடித்து என்னோடு வாழச் செய்வேன்; நேரிய வழியில் நடப்போரை எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, ``அழாதீர்'' என்றார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17

அக்காலத்தில் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, ``அழாதீர்'' என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், ``இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு'' என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, ``நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்'' என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''அக்கைம்பெண்ணைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, 'அழாதீர்' என்றார்'' (லூக்கா 7:17)

உலகத்தில் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்கள் கணக்கிலடங்கா. பசியும் பட்டினியும், வறுமையும் ஏழ்மையும், நோயும் நோக்காடும், வீடின்மையும் கல்வியறிவின்மையும் என்று மனிதரை வாட்டி வதைக்கின்ற இழிநிலைகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பாரெங்கும் பரவியிருப்பது கவலையானதே. எத்தனையோ தேவைகள் இருக்கின்ற போது நம்மை அடுத்திருக்கின்ற மனிதரின் வேதனைகளை நாம் கண்டுகொள்ளாமல் போகின்ற ஆபத்து உள்ளது. உதவி கேட்டுப் பலர் வரும்போது நம் அருகிலிருப்பவருக்கு உதவி தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடும். இயேசுவிடம் உதவி கேட்டு எத்தனையோ மனிதர் வந்தனர். கும்பல் கும்பலாக அவரைத் தேடிச் சென்றனர். தம்மை நெருக்கிய கூட்டத்தின் நடுவிலும் இயேசு ஓர் எளிய கைம்பெண்ணின் வேதனையைக் கவனிக்கத் தவறவில்லை. அப்பெண்ணின் ஒரே மகன் இறந்துவிட்டிருந்தார். கணவனும் இல்லை, மக்களும் இல்லை என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்ட அப்பெண்ணைக் கண்டு இயேசு இரக்கம் கொள்கிறார். அவருடைய மகனுக்கு உயிர் அளிக்கிறார். இச்செயல் வழியாக இயேசுவின் வல்லமை விளங்கியது ஒருபுறமிருக்க, அவருடைய இரக்க மனப்பான்மையும் இளகிய மனதும் இங்கே தோன்றுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

எத்தனையோ அலுவல்கள் நமக்கு இருந்தாலும் நம்மை அடுத்திருக்கின்ற ஒருவருடைய தேவையை உணர்ந்து அவருக்கு உதவிசெய்ய நாம் நேரம் ஒதுக்க வேண்டும். பல அலுவல்களில் ஈடுபட்டு சுறுசுறுப்பாக உழைப்பவர்களுக்கு மேன்மேலும் பொறுப்புக்கள் வந்து சேரும் என்பது அனுபவ உண்மை. அந்த வேளைகளிலும் பிறருடைய தேவைகளைக் கண்டு, அவர்கள் நம்மை அணுகுவதற்கு முன்னரே உதவி செய்ய முன்வருவது இயேசுவின் சீடருக்கு அழகு. தம் ஒரே மகனை இழந்த கைம்பெண் இயேசுவிடம் உதவி கேட்டுக் கைநீட்டவில்லை; ஆனாலும் இயேசு அவருடைய தேவையைத் தாமாகவே உணர்ந்து அவருக்கு உதவிசெய்ய முன்வந்தார். வள்ளுவரும் நட்புப் பற்றிப் பேசும் போது ''உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு'' என்று போற்றியுரைப்பார் (குறள் 788). நட்பையும் விஞ்சிச் செல்வது இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற அன்பு. கடவுளின் பண்பே அன்புதானே!

மன்றாட்டு:

இறைவா, குறிப்பறிந்து உதவி செய்ய எங்களுக்கு நன்மனதைத் தந்தருளும்.