யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் சனிக்கிழமை
2013-09-07


முதல் வாசகம்

உலகெங்கும் படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 21-23

சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய் இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள். உலகெங்கும் படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது.சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய் இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள். உலகெங்கும் படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது. பவுலாகிய நான் இந்நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டன் ஆனேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும்.
திருப்பாடல்கள் 54: 1-2. 4,

பல்லவி: இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார். 1 கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். 2 கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். பல்லவி

4 இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்; 6 தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5

ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர். பரிசேயருள் சிலர், ``ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?'' என்று கேட்டனர். அதற்கு இயேசு மறுமொழியாக, ``தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?'' என்று கூறினார். மேலும் அவர்களிடம், ``ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்றுகொண்டிருந்தார். பசியாயிருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், 'பாரும், ஓய்வுவு நாளில் செய்யக் கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்' என்றார்கள்'' (மத்தேயு 12:1-2)

இயேசு திருச்சட்டத்திற்குப் புது விளக்கம் அளித்தார். மக்களை ஒடுக்குகின்ற சக்தியாகச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினர் பரிசேயர். ஆனால் இயேசுவோ சட்டத்தின் உண்மையான பொருளை விளக்கினார். இதை ஏற்றுக்கொள்ள மறுத்த பரிசேயரும் பிற யூத சமயத் தலைவர்களும் இயேசுவைக் கொல்லத் தேடினார்கள் (காண்க: மத் 12:14). இஸ்ரயேல் மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றிப் பல துல்லியமான வழிமுறைகள் திருச்சட்டத்தில் இருந்தன. எடுத்துக்காட்டாக, ''உனக்கு அடுத்திருப்பவனுடைய விளை நிலத்திற்குச் சென்றால், உன் கையால் கதிர்களைக் கொய்யலாம்; ஆனால் கதிர் அரிவாளை உனக்கு அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே'' என்பதைக் கூறலாம் (இச 23:25). இச்சட்டம் ஏழை மக்கள் பட்டினியால் வாடாமலிருக்க வழிவகுத்தது. அதே நேரத்தில் பிறருடைய சொத்திலிருந்து அளவுக்கு மீறி எடுக்காமலிருக்கவும் செய்தது. எனவே, இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து தின்றது சட்டப்படி அனுமதிக்கப்பட்டதே. ஆனால் அவர்கள் ஓய்வுநாளன்று இதைச் செய்தது ஏன் என்பதுதான் பரிசேயருக்குப் பிரச்சினையாகப் பட்டது. இயேசு இரு எடுத்துக்காட்டுகள் தந்து, தம் சீடர்கள் தவறு செய்யவில்லை எனக்காட்டுகிறார்.

முதலில், வழிபாடு தொடர்பான சட்டங்கள் மனிதரின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதற்கு எதிராக இருந்தால் அச்சட்டங்கள் ஏற்கத்தக்கனவல்ல என இயேசு காட்டுகிறார் (காண்க: மத் 12:3-4; 1 சாமு 21:1-4). இரண்டாவது, குருக்களின் கடமைகள் என்னவென்று பழைய சட்டம் வரையறுத்திருந்தாலும் அதைப் புதிய முறையில் இயேசு விளக்குகிறார் (காண்க: மத் 12:5; எண் 28:9-10). கோவிலில் ஒப்புக்கொடுக்கப்படுகின்ற பலிகள் கடவுளுக்கு உகந்தவையே; அதே நேரத்தில், மனிதர் மட்டில் காட்ட வேண்டிய இரக்கமும் அன்பும் பலியைவிட மேலானது. இதை வலியுறுத்திய இயேசு ஓசேயா இறைவாக்கினரின் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்: ''உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்'' (ஓசே 6:6). கடவுள் மனிதரின் நலனில் அக்கறை கொண்டவர். சட்டங்கள் எல்லாம் மனிதரின் உண்மையான நலனுக்கு உதவ வேண்டுமே ஒழிய மனிதரை ஒடுக்குகின்ற சுமையாக மாறிவிடக் கூடாது.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் இரக்கமுடையோராய் வாழ்ந்திட அருள்தாரும்.