யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் புதன்கிழமை
2013-09-04


முதல் வாசகம்

! உங்களுக்காக நாங்கள் வேண்டும்பொழுதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8

கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் சகோதரர் சகோதரிகளாகிய கொலோசை நகர இறைமக்களுக்குக் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாய் இருக்கும் பவுலும் சகோதரர் திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்து உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! உங்களுக்காக நாங்கள் வேண்டும்பொழுதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். கிறிஸ்து இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் செலுத்தும் அன்பு பற்றியும் நாங்கள் கேள்வியுற்றோம். இவை இரண்டும் விண்ணகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் நன்மைகளை எதிர் நோக்குவதால் விளைந்தவை. நீங்கள் முன்பு கேட்ட உண்மையின் நற்செய்தி வழியாக அந்த எதிர்நோக்குப் பற்றி அறிந்துகொண்டீர்கள். உலகம் முழுவதும் பரவிப் பயனளித்துவரும் அந்நற்செய்தி உங்களை வந்தடைந்தது. கடவுளின் அருளைப் பற்றிக் கேட்டறிந்து அதன் உண்மையை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள். அந்நாள் முதல் உங்களிடையே அது பெருகிப் பயனளித்து வருகிறது. எம் அன்பார்ந்த உடன் ஊழியர் எப்பப்பிராவிடமிருந்து அதை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். உங்களுக்காக உழைக்கும் அவர் கிறிஸ்துவின் உண்மையான திருத்தொண்டர். தூய ஆவி உங்களுக்கு அருளிய அன்பைக் குறித்து அவர்தாம் எங்களிடம் எடுத்துரைத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

கடவுளே! நீர் இவ்வாறு எனக்குச் செய்துள்ளதால், உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்;
திருப்பாடல்கள் 52: 8. 9

8 நானோ, கடவுளின் இல்லத்தில் பச்சை ஒலிவ மரக்கன்றுபோல் இருக்கின்றேன்; கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்திருக்கின்றேன். -பல்லவி

9 கடவுளே! நீர் இவ்வாறு எனக்குச் செய்துள்ளதால், உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்; உம் அன்பரின் முன்னிலையில், உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்; இதுவே நன்று. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 38-44

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள். இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள, அது அவரை விட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார். கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டி வந்தார்கள். அவர் ஒவ்வொருவர் மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். பேய்களும், ``நீர் இறைமகன்'' என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார். பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். அவரோ அவர்களிடம், ``நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்'' என்று சொன்னார். பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசுவோ அவர்களிடம், 'நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்' என்று சொன்னார்'' (லூக்கா 4:43)

இயேசு கலிலேயாவில் ஆற்றிய பணியை லூக்கா சிறப்பான முறையில் விளக்குகிறார். கலிலேயாப் பகுதியில் ஊர் ஊராகச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியை இயேசு அறிவித்துவந்தார். சில சமயங்களில் மக்கள் அவரைத் தேடிச் சென்று அவரை வற்புறுத்தித் தங்களோடு தங்கியிருக்குமாறு கேட்டனர். ஏன், ''அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர்'' (லூக்கா 4:42). அப்போது இயேசு அவர்களைப் பார்த்துக் கூறிய சொற்கள் ஆழமான பொருளுடைத்தவை. இயேசுவின் பணி ஓர் ஊராருக்கு அல்லது நாட்டவர்க்கு மட்டும் உரித்தானதல்ல. அது உலக மக்கள் அனைவருக்கும் உரித்தானது. எனவே, இயேசு பிற இடங்களிலும் தாம் நற்செய்தி அறிவிக்கச் செல்ல வேண்டும் என்று பதிலுரைத்தார். லூக்கா இச்செய்தியைத் தனிப்பட்ட விதத்தில் கோடிட்டுக் காட்டுகிறார்.

இயேசுவின் பணியைத் தொடர அழைக்கப்பட்டுள்ளது திருச்சபை. இயேசுவின் பெயரால் ஒன்று கூட்டப்பட்டு, இயேசுவின் சீடர் குழாமாக விளங்குகின்ற திருச்சபை தனிப்பட்ட இனத்தாருக்கு, நாட்டாருக்கு என்று ஒதுக்கி வைக்கப்பட்ட தனிச்சொத்து அல்ல. திருச்சபையின் பணி இவ்வுலக மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். திருச்சபை இவ்வாறு செயல்பட வேண்டும் என்றால், அதற்கு உலகளாவிய ஒரு பார்வை வேண்டும்; எல்லா மக்களின் பண்பாடுகளையும் கலாச்சார அம்சங்களையும் தேர்ந்து தெளிந்து, அவற்றில் நலமானவற்றை உள்வாங்கி, திருச்சபை கிறிஸ்துவின் நற்செய்திக்குச் சான்று பகர வேண்டும். எல்லா மக்களின் பண்பாட்டுச் செல்வங்களிலும் நலமான அம்சங்கள் உண்டு, நலிந்த அம்சங்கள் உண்டு. எனவே அவற்றை விமர்சனக் கண்ணோட்டத்தோடு ஆய்ந்து பார்த்து, நல்லவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளத் திருச்சபை முன்வர வேண்டும். அப்போது கடவுளின் கொடையாக மக்கள் பெறுகின்ற நன்மைகள் மீண்டும் புதப்பிக்கப்பட்டு, புடமிடப்பட்டு, கடவுளின் புகழ்பாடுகின்ற இசைப்பாவாக மாறிடும்.

மன்றாட்டு:

இறைவா, குறுகிய மனப்பான்மை தவிர்த்து, இவ்வுலகமே எங்கள் குடும்பம் என்றும், உம் குடும்பம் என்றும் பரந்த உணர்வோடு நாங்கள் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.