யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-09-03

புனித கிறகோரி


முதல் வாசகம்

ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6, 9-11

சகோதரர் சகோதரிகளே, இவை நடக்கும் காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். `எங்கும் அமைதி, ஆபத்து இல்லை' என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம். ஏனெனில் கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார். நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார். ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
திருப்பாடல்கள்

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். -பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 31-37

அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், ``ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' என்று உரத்த குரலில் கத்தியது. ``வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ'' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று. எல்லாரும் திகைப்படைந்து, ``எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!'' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

"இயேசு அதிகாரத்தோடு கற்பித்தார்" (லூக்கா 4;32)

விவிலியத்தில் கடவுளுடைய வார்த்தை அடங்கியுள்ளது என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. கடவுள் மக்களோடு பேசுவதற்குப் பதிலாள்களைப் பயன்படுத்தினார். இவ்வாறு, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசே, பிற இறைவாக்கினர்கள் கடவுளின் பெயரால் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்; கடவுளின் வழியில் நடந்தால் ஆசியும், நெறி தவறிப் போனால் தண்டனையும் பெறுவர் என்று மக்களை எச்சரித்தனர். அந்த வேளைகளிலெல்லாம் இறைவாக்கினர் தம் சொந்த அதிகாரத்தோடு பேசவில்லை, மாறாகக் கடவுள் பெயரால் இறைவாக்கினை அறிவித்தனர். மேலும், யூத சமயத்தைச் சார்ந்த அறிஞர்களும் திருச்சட்டத்தை விளக்கியபோது தம் சொந்த அதிகாரத்தோடு பேசவில்லை, மாறாகத் தம் போதனைக்கு ஆதாரமாக விவிலியத்தை மேற்கோள் காட்டினர்.

இயேசுவும் கடவுளின் பெயரால் வந்தார். மக்களுக்குக் கடவுளின் திட்டத்தை அறிவித்தார். ஆனால், இயேசுவே கடவுளின் வார்த்தை என்பதால் அவருடைய அதிகாரம் கடவுளின் அதிகாரத்திற்கு நிகரானது. எனவே, பிற இறைவாக்கினரைப் போலவோ, யூத சமயத் தலைவர்களைப் போலவோ அல்லாமல் இயேசு "அதிகாரத்தோடு கற்பித்தார்". இயேசு எப்போதுமே தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதையே தம் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இதனால் அவருடைய வாழ்வில் தந்தையின் செயல் துலங்கியது. மேலும், தூய ஆவியால் நிரப்பட்ட இயேசு கடவுளின் வல்லமையை முழுமையாகத் தம் சொல், செயல் வழியாக வெளிப்படுத்தினார். இயேசுவின் போதனையைக் கேட்டு, அவரில் நம்பிக்கை கொள்வோர் இயேசுவைத் தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருக்க அழைக்கப்படுகிறார்கள். இயேசுவைத் தம் உள்ளத்தில் அனுபவித்து, அவருடைய சொற்களைக் கேட்டு அவர்தம் ஆவியால் வழிநடத்தப்படுவோர் உண்மையிலேயே அவருடைய சீடர்களாக இருப்பார்கள்; அவரிடமிருந்து கற்றுக்கொள்வார்கள். இவ்வாறு நாம் கற்றவற்றைச் செயலில் வெளிப்படுத்தும்போது இயேசுவின் அதிகாரத்தில் நாமும் பங்குபெறுவோம். அது உண்மையிலிருந்து பிறக்கின்ற அதிகாரம்; அது மனித அதிகாரிகளின் அடக்குமுறை அதிகாரத்திற்கு நேர்மாறானது. இயேசுவின் அதிகாரம் மக்களுக்குப் பணிபுரிகின்ற அதிகாரம். திருச்சபையும் தன் தலைவரும் ஆசிரியருமான இயேசுவைப் பின்சென்று மக்களுக்குப் பணிசெய்ய அழைக்கப்படுகிறது.

மன்றாட்டு:

இறைவா, உண்மையின் ஊற்றாகிய உம்மிடம் நாங்கள் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.