யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-08-30

புனித பெலிக்ஸ்


முதல் வாசகம்

உங்களில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத் தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-8

சகோதரர் சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக்கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளையை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தூயோர் ஆவதே கடவுளுடைய திருவுளம்; பரத்தைமையை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்களில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத் தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும். கடவுளை அறியாத பிற இனத்தாரைப் போன்று நீங்கள் கட்டுக்கடங்காப் பாலுணர்வுக்கு இடம் கொடுக்கலாகாது. இதில் எவரும் தவறிழைத்துத் தம் சகோதரரை வஞ்சிக்கக் கூடாது. ஏனெனில் இத்தகைய செயல்கள் அனைத்தையும் ஆண்டவரே தண்டிப்பார். இதை நாங்கள் முன்னமே உங்களிடம் எடுத்துரைத்திருக்கிறோம்; எச்சரித்தும் இருக்கிறோம். கடவுள் நம்மை ஒழுக்கக்கேட்டிற்கு அல்ல, தூய வாழ்வுக்கே அழைத்தார். எனவே இக்கட்டளைகளைப் புறக்கணிப்போர், மனிதரை அல்ல, தம்முடைய தூய ஆவியை உங்களுக்கும் அளிக்கும் கடவுளையே புறக்கணிக்கின்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்;
திருப்பாடல்கள் 97;1-2,5-6,10-12

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2b நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

10 தீமையை வெறுப்போர்மீது ஆண்டவர் அன்புகூர்கின்றார். அவர்தம் பற்றுமிகு அடியார்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்; பொல்லாரின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார். பல்லவி

11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. 12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைத்து அவரைப் புகழுங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், `இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்' என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, `எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' என்றார்கள். முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, `உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது' என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, `ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள். அவர் மறுமொழியாக, `உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது' என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்துபேர் அறிவிலிகள்; ஐந்துபேர் முன்மதி உடையவர்கள்'' (மத்தேயு 25:1-2)

இறையாட்சி நம்மிடையே வந்துகொண்டிருப்பதை நாம் அடையாளம் கண்டு, அதில் பங்கேற்றிட எப்போதும் ''விழிப்பாயிருக்க வேண்டும்'' என்னும் கருத்தை வலியுறுத்த இயேசு கூறிய கதை ''பத்துத் தோழியர் உவமை'' ஆகும் (மத் 25:13). இந்த உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இந்த உவமையின் பொருளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அக்காலத் திருமணப் பழக்கம் பற்றி நாம் அறிவது தேவை. இந்திய நாட்டின் பல பகுதிகளில் இன்றும்கூட திருமணம் என்றால் இரு தனி ஆள்களுக்கு இடையே ஏற்படும் ஒப்பந்தம் என்றில்லாமல் இரு குடும்பங்களுக்கிடையே நிகழ்கின்ற உடன்பாடு என்றே உள்ளது. அதுபோலவே, இயேசு வாழ்ந்த காலத்திலும் பெற்றோரே தங்கள் பிள்ளைக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது வழக்கம். திருமண நிகழ்வு இரு கட்டங்களாக அமைந்தது. முதல் கட்டம் திருமண ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. மணமகனின் தந்தை மணமகளின் தந்தையின் வீட்டுக்குச் சென்று, மணமகனிடமிருந்து திருமண ஒப்பந்த ஏட்டையும் வரதட்சணையையும் பெற்றுக்கொள்வார். மணமகள் தன் தந்தையின் வீட்டிலேயே ஏறத்தாழ ஒரு வருடம் தொடர்ந்து தங்கியிருந்த பின்னரே மணமகனின் வீட்டுக்குச் சென்று தாம்பத்திய வாழ்க்கை நடத்துவார். இயேசு கூறிய உவமையில் வருகின்ற பத்துத் தோழியர் மணமகனின் வருகைக்குக் காத்திருக்கின்றனர். அவர் மணப்பெண்ணின் வீட்டில் தன் வருங்கால மாமனாரைச் சந்தித்து, அவரோடு திருமண ஏற்பாட்டுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். அது நன்முறையில் முடிந்ததும், ''இதோ மணமகன் வருகிறார்'' என்று அறிவிக்கப்படுகிறது. திருமண ஊர்வலம் புறப்பட்டு, மணமக்களோடு மணமகனின் வீட்டை நோக்கிச் செல்வதற்குத் தயாராகிறது. அங்கே திருமணக் கொண்டாட்டங்கள் நிகழும். ஆனால் ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்த தோழியர் பத்துப்பேரில் ஐவர் மட்டுமே தயாராக உள்ளனர். மற்ற ஐவரும் போதிய எண்ணெய் இல்லாததால் தங்கள் விளக்குகளை ஏற்ற இயலாதிருக்கிறார்கள். அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்ற நேரம் பார்த்து மணமகனும் வெளியே வருகிறார். ஊர்வலமும் புறப்படுகிறது.

ஆயத்தமாயிருந்தவர்கள் மட்டுமே திருமண மண்டபத்துக்குள் சென்று கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். பிந்தி வந்தவர்கள் ஏமாற்றத்தோடு வெளியே நிற்கிறார்கள். இந்த உவமை வழியாக இயேசு இரு கருத்துக்களை உணர்த்துகிறார். முதலில் ''விளக்கு'' என்பது நாம் செய்கின்ற நற்செயல்களைக் குறிக்கிறது. ''உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் புகழ்வார்கள்'' (மத் 5:16) என இயேசு கூறுகிறார். மேலும் யார் அறிவாளி யார் அறிவிலி என்பதை இயேசு ஏற்கெனவே விளக்கியிருந்தார். அதாவது, முன்மதியோடு உறுதியான அடித்தளம் இட்டு வீடுகட்டுபவர் அறிவாளி; ஆனால் உறுதியற்ற மணல்மீது வீடுகட்டுபவர் அறிவிலி (மத் 7:24-27). அதுபோல, அறிவோடு செயல்பட்ட தோழியர் இயேசுவின் சொற்களைக் கேட்டு அவற்றை வாழ்வில் கடைப்பிடிப்போருக்கு ஒப்பாவர். அறிவிலிகளாகச் செயல்பட்ட தோழியரோ நற்செயல்கள் புரியாதோருக்கு ஒப்பாவர். ஒருவர் புரிகின்ற நற்செயலை மற்றவரோடு பகிர்ந்துகொள்ள இயலாது. ஒவ்வொருவரும் கடவுள் முன்னிலையில் பொறுப்போடு செயல்பட்டு, அவர் சொற்படி நடக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கை ஒளிர்கின்ற விளக்காகத் துலங்கிட அருள்தாரும்.